உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி எப்போது…? CM ஸ்டாலின் தயங்குவது ஏன்…? பரிதவிக்கும் திமுக இளைஞரணி…!
Author: Babu Lakshmanan18 January 2024, 8:01 pm
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் உதயநிதி கடந்த ஐந்து ஆண்டு காலமாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருவது தமிழக மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்காக அவர் செய்த தீவிர பிரச்சாரமும் 38 இடங்களை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று திமுக இளைஞரணி உறுதியாக நம்பியது. அதனால் அவருக்கு கட்சியின் இளைஞர் அணியில் முக்கிய பதவி வழங்கவேண்டும் என்ற கோரிக்கை அப்போது திமுகவில் வலுத்தது.
இதனால் அதே ஆண்டு ஜூலை மாதம் திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு 2021 தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறங்கி வெற்றியும் பெற்றார். ஒன்றரை ஆண்டுகள் கழித்து 2022 டிசம்பரில் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
இப்படி திமுகவில் இதுவரை யாரும் விறுவிறுவென்று இவ்வளவு உயரம் தொட்டது இல்லை என்ற வியப்பு ஒரு பக்கம் இருந்தாலும் கூட அரசியல் ரீதியாக திமுகவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உதயநிதி உருவாகிவிட்டார் என்பதுதான் நிஜம்!
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூட மிக அண்மையில் கூறும்போது, “உதயநிதி இந்த இயக்கத்தை நடத்தும் காலம் மீண்டும் ஒரு பொற்காலமாக அமையும். அரசியலில் வளர பணிவு முக்கியம். அது உதயநிதியிடம் உள்ளது” என்று புகழாரம் சூட்டி இருக்கிறார்.
86 வயது துரைமுருகன் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியிடம் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவர். முதலமைச்சர் ஸ்டாலினிடமும் நன் மதிப்பை பெற்றவர். அவரே இப்படி சொல்கிறார் என்றால் டி ஆர் பாலு, கே என் நேரு, பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன் போன்ற திமுகவின் சீனியர் தலைவர்கள் இதை ஒருபோதும் மறுக்க மாட்டார்கள் என்பதும் நிதர்சனம்.
இந்த நிலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் அவருடைய மகனும், அமைச்சருமான உதயநிதி விரைவில் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவியது. ஆனால் அதை ஸ்டாலின் மறுத்தார்.
உதயநிதியும் கூட எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருக்கிறோம் என்று சாதுர்யமாக பதிலளித்தார்.
எனினும் சேலத்தில் வருகிற 21ம் தேதி நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக உதயநிதி நடத்தி முடித்த பின்பு அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் இறக்கை கட்டி பறக்கிறது.
இன்னும் சிலர் ஸ்டாலின் விரைவில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது உதயநிதியை பொறுப்பு முதலமைச்சராக நியமித்து விட்டு செல்வார் என்றும் கூறுகிறார்கள்.
மேலும் திமுகவில் உள்ள அத்தனை அணிகளும் தற்போது உதயநிதியின் வசம் வந்து விட்டிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அதனால் இளைஞர் அணியினர் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார்கள். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உதயநிதி கை காட்டுபவர்களுக்குதான் திமுகவில் போட்டியிடும் வாய்ப்பே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. திமுகவில் தற்போது மக்களவையில் எம்பிக்களாக உள்ள 15 முதல் 20 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்ற ஒரு தகவலும் அறிவாலய வட்டாரத்தில் பரபரப்பாக அடிபடுகிறது. இதுதான் இளைஞர் அணியின் உற்சாகத்துக்கு முக்கிய காரணம்.
அமைச்சர் உதயநிதியை பொறுத்தவரை சேலம் இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டி விடுவார் என்பது உறுதி. அதே நேரம் அதை மட்டுமே வைத்து, துணை முதலமைச்சராவதை அவர் விரும்பவில்லை என்று
உதயநிதிக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணியை
39 தொகுதிகளிலும் வெற்றி பெற வைக்கவேண்டும் என்பதுதான், அவருடைய ஒரே இலக்காக உள்ளது.
அதிமுக- பாஜக கூட்டணி அமைத்திருந்த 2019 தேர்தலிலேயே, 38 தொகுதிகளை வென்றெடுத்த நம்மால் நமது தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் நடைபெறும்போது, அதுவும் அதிமுக, பாஜக கூட்டணி இல்லை என்ற சூழலில் திமுக கூட்டணி நிச்சயம்
39 தொகுதிகளையும் கைப்பற்றி விடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அமைச்சர் உதயநிதியிடம் நிறையவே உள்ளது. அதை நிறைவேற்றிக் காண்பித்த பின்பே அவர் துணை முதலமைச்சர் பொறுப்பை விரும்பி ஏற்றுக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
அதேநேரம் கடந்த சில மாதங்களாகவே உதயநிதி துணை முதலமைச்சர் போலத்தான் செயல்பட்டு வருகிறார் என்பதை அவர் முன்னெடுக்கும் மின்னல் வேக நடவடிக்கைகளின் மூலம் புரிந்து கொள்ளவும் முடிகிறது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது முதலமைச்சர் ஸ்டாலின் செல்வதற்கு முன்பாகவே உதயநிதி சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு சென்று நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டார். அதுமட்டுமல்லாமல் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வைப்பதற்காக பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் டெல்லியில் சந்தித்து அழைப்பும் விடுத்தார்.
வழக்கமாக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கி வைக்கும் சென்னை புத்தக கண்காட்சியை, இந்த ஆண்டு உதயநிதிதான் தொடங்கி வைத்தார். அதேபோல அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியையும் அவரே
முன் நின்று நடத்தினார்.
இது அவர் சார்ந்த விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்டது என்று கூறப்பட்டாலும் கூட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்ததன் மூலம் அவர் தன்னை மேலும் அரசியலில் முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்புவது வெளிப்படையாகவே தெரிகிறது.
“துணை முதலமைச்சராக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட உதயநிதியின் செயல்பாடுகள் அனைத்துமே அந்தப் பதவியில் அவர் இருப்பது போன்ற நிலையைத் தான் வெளிப்படுத்துகிறது. அதனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
“எனினும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகே உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியை ஸ்டாலின் வழங்குவார் என்பது நிச்சயம்.
அதேநேரம் இப்போதைய சூழலில் அவருக்கு ஏன் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்பதற்கு வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன. குறிப்பாக இந்த மாதமே உதயநிதியை துணை முதலமைச்சர் பதவியில் உட்கார வைத்தால், தமிழகத்தில் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் அதை தீவிர அரசியல் பிரச்சாரமாக கையில் எடுக்க வாய்ப்பு உள்ளது.
55 ஆண்டுகளாக கருணாநிதியின் குடும்பத்தை தவிர வேறு யாரும் திமுகவின் தலைமை பொறுப்பை வகிக்க முடியாது. கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின், அதற்குப்பின் உதயநிதி அடுத்த தலைமுறைக்கு இன்ப நிதி என்று ஒரே குடும்பத்தினர்தான் திமுகவில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற பிரச்சாரத்தை ஏற்கனவே அதிமுக பாஜக போன்ற கட்சிகள் செய்யத் தொடங்கி விட்டன.
இது எதிர்க்கட்சிகளுக்கு எந்த அளவிற்கு பயனளிக்கும் என்று கூற முடியாவிட்டாலும் கூட, உதயநிதியை இந்த நேரத்தில் துணை முதலமைச்சராக நியமித்தால் அது இளவயது வாக்காளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றி வாய்ப்பை குறைத்து விடும் என்று திமுக தலைமை கருதுகிறது.
அதனால்தான், வெளிப்படையாக துணை முதலமைச்சர் பதவியை உதயநிதிக்கு கொடுக்காமல், ஸ்டாலின் முக்கிய அதிகாரங்களை மறைமுகமாக மகனிடம் கொடுத்து வருகிறார் என்று கூறப்படுவதிலும் உண்மை இருக்கவே செய்கிறது.
இதைவிட மிக முக்கியமாக கூறப்படும் இன்னொரு காரணம், வட மாநிலங்களில் இண்டியா கூட்டணி கட்சிகளிடம் உதயநிதிக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பும் என்று கூறப்படுவது தான். குறிப்பாக காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவிக்கலாம்.
ஏற்கனவே உதயநிதி சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியதை ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக தீவிரமாக பிரச்சாரமாக முன்னெடுத்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியும் விட்டது.
இது போன்ற நிலையில் துணை முதலமைச்சர் ஆகவோ அல்லது பொறுப்பு முதலமைச்சர் ஆகவோ உதயநிதியை நியமித்தால் அது அகில இந்திய அளவில் மீண்டும் பரபரப்பாக பேசப்படும். சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறியவருக்கு திமுக அரசு துணை முதலமைச்சர் பதவியை வழங்கிவிட்டது என்ற பிரச்சாரத்தை வடமாநிலங்களில் பாஜக மீண்டும் வலுவாக வைத்தால் இண்டியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு தகர்ந்து விடும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் அஞ்சுகின்றன.
இதனால்தான் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு ஜூன் முதல் வாரத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியை வழங்க ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் திமுக இளைஞர் அணியினர்தான் பெரும் பரிதவிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஏனென்றால் துணை முதலமைச்சர் பதவி உதயநிதியிடம் இப்போதே இருந்தால், சீனியர் அமைச்சர்கள் தங்களது வாரிசுகளுக்கு எம்பி சீட் கேட்க தயக்கம் காட்டுவார்கள். அதனால் இளைஞர் அணியில் உள்ள வாரிசு அரசியல் அல்லாத முக்கிய நிர்வாகிகளுக்கு தேர்தலில் நிற்க எப்படியும் எம் பி சீட் கிடைத்துவிடும். இல்லையென்றால் சீனியர் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் தங்களுக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்தி அவரிடம் கெஞ்சி கூத்தாடி
வாரிசுகளுக்கு தொகுதிகளை வாங்கி விடுவார்கள் என்ற பயம் இப்போதே அவர்களுக்கு வந்து விட்டது. அதன் காரணமாக தங்களுக்குள்ள வாய்ப்பு பறிபோய் விடுமோ என்றும் கவலைப்படுகின்றனர்.
ஆகையால்தான் திமுக இளைஞரணி நிர்வாகிகள் பரிதவிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
எது எப்படியோ, சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் உதயநிதியை விரைவில் துணை முதலமைச்சராக நியமிக்கவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதையும் மறுக்க முடியாது. அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!