அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரமா..? யார் சொன்னது… டக்கென ரியாக்ஷன் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!
Author: Babu Lakshmanan29 ஜூன் 2023, 9:59 மணி
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டு ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதையடுத்து, நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு 2வது முறையாக நீதிமன்ற காவல் விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்து வந்த மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை ஆகிய துறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்என் ரவி, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு முன்மொழிந்ததை ஏற்கவில்லை.
ஆனால், ஆளுநரின் நிராகரிப்பையும் மீறி, தமிழக அரசு செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, தமிழக அரசு துறைகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், செந்தில் பாலாஜியை அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவருக்கு அளிக்கப்பட்டு இருந்த இலாகாக்களின் பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, தமிழக அரசின் இந்த செயலால் அதிர்ந்து போன ஆளுநர் ஆர்என் ரவி அண்மையில் டெல்லிக்கு சென்றார். அங்கு மத்திய அரசுடன், செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை திரும்பிய ஆளுநர் ஆர்என் ரவி, பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்து உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலை வாங்கித் தருவதாக மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளை அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்து வருவதாகவும், தற்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, அவரது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, விசாரணைக்கு தடையாக இருப்பதாகவும், அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி தொடர்ந்தால் வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்பதால், அவரை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக ஆணையிட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஆளுநர் ரவி தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரின் இந்த அறிவிப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனக் கூறினார்.
இதேபோல, சபாநாயகர் அப்பாவு கூறுகையில், “அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அதேசமயம், ஆளுநர் மாளிகையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து எந்த தகவலும் வரவல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக ஆளுநர் செயல்பட்டுள்ளார்,” எனக் கூறினார்.
0
0