கல்வி மட்டும் யாராலையும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது… தாய்மொழி கல்வி மிக முக்கியம்… மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அட்வைஸ்!!
Author: Babu Lakshmanan27 May 2022, 12:07 pm
சென்னை : தமிழ்வழி கல்விக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் டிஏவி குழுமத்தின் புதிய பள்ளிக் கூடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “தாய்மொழி வழி கல்விக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும்.
பள்ளிக்கல்வி திட்டங்களுக்கு அழகிய தமிழில் பெயரிட வேண்டும். தாய்மொழி மற்றும் தாய்நாடு மற்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியம். ஒரு மனிதரிடம் இருந்து யாரும் பிரிக்க முடியாத சொத்து கல்வி மட்டும்தான். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது,” எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், “திராவிட அரசனாக முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார்; மதிப்பெண் அடிப்படையில் எடை போடாமல் மாணவர்களின் தனித்திறமையை கவனிக்க வேண்டும்,” எனப் பேசினார்.