கோரிக்கைகளை பொறுமையாக கேட்டறிந்தார் பிரதமர் மோடி… அவரை சந்தித்ததில் ரொம்பவும் திருப்தி : டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!!!
Author: Babu Lakshmanan31 March 2022, 8:07 pm
டெல்லியில் பிரதமர் மோடியுடனான சந்திப்பு ரொம்பவும் மகிழ்ச்சியளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதுலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா ராஜ்நாத்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். பிரதமருடனான சந்திப்பின் போது, நீட் தேர்வு ரத்து உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை அவர் வழங்கினார். டெல்லியில் திறக்கப்பட உள்ள தி.மு.க.,விற்கான புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது ;- பிரதமர் மோடியை சந்தித்து 14 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தேன். அவரும் எனது கோரிக்கைகளை பொறுமையாக கேட்டறிந்தார். மேலும், கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
பிரதமரின் சந்திப்பு மனநிறைவு தருவதோடு மன மகிழ்ச்சியும் அளிக்கிறது. அதேபோல, மத்திய அமைச்சர்களுடான சந்திப்பும் திருப்தியாக உள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தேன். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கூடாது என பிரதமரிடம் வலியுறுத்தினேன். அவரும் நியாயமான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக பிரதமர் மற்றும் அமித்ஷா ஆகியோரிடம் அழுத்தமாக கோரிக்கை வைத்தேன். நீட்விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் கவர்னர் காலம் தாழ்த்துவதை சுட்டிக்காட்டினேன்.
தமிழகத்தில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் வலியுறுத்தினேன். நாளை டெல்லி முதல்வருடன் மருத்துவமனை பள்ளியை பார்வையிட உள்ளேன், என தெரிவித்துள்ளார்.