இன்னார் தான் படிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றிய திராவிட மாடல் ; பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..!!
Author: Babu Lakshmanan2 January 2024, 12:43 pm
100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சியில் போடப்பட்ட விதையே, இன்று தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கக் காரணம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவுடன் கூட்டணி இல்லாத சூழலில், முதல்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். அவரை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு பாரதிதாசனின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், பட்டம் பெறும் மாணவர்களுடனும், பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் தனித்தனியே பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்என் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். அப்போது, மாணவ, மாணவிகளுக்கு பட்டம் மற்றும் சான்றிதழை பிரதமர் மோடி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது :- எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று திராவிடக் கொள்கையை தமிழ் நிலத்தில் முழங்கிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரில் இந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி.
பாரதிதாசன் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டதற்கு நன்றி. இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்த மாநிலம் தமிழகம். கல்வியில் சிறந்த எந்த பட்டியல் எடுத்தாலும் அதில் தமிழ்நாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்கள்தான் முதலிடத்தில் இருக்கும்.
100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சியில் போடப்பட்ட விதையே, இன்று தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கக் காரணம். திராவிட மாடல் அரசு இன்னார் தான் படிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் அனைத்து விதமான வாய்ப்புகளும் வழங்கியது, எனக் கூறினார்.