அரசின் தூதர்களாக வணிகர்கள் செயல்பட வேண்டும் : முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

Author: Babu Lakshmanan
5 May 2022, 5:17 pm

சென்னை : நல்ல திட்டங்களை அரசுக்கு எடுத்து சொல்லும் துாதர்களாக வணிகர்கள் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழக வணிகர் விடியல் மாநாடு திருச்சி சமயபுரத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்

அவர் பேசியதாவது :- திமுக ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில் கொரோனா உச்சத்தில் இருந்தது. கொரோனா தொற்றின் போது, கடைகள் தோறும் அடைக்கப்பட்ட நிலையிலும், வணிகர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கினர். வணிகர்களுக்கு நன்றி சொல்ல இந்த மாநாட்டை பயன்படுத்திக்கொள்ள இங்கு வந்தேன்.

தற்போது இலங்கை தமிழர்களுக்காக வணிகர்கள் நிதி திரட்டி வருகிறார்கள். திருச்சி என்றாலே திமுகவிற்கு திருப்புமுனை. அது போலவே இந்த வணிகர்கள் மாநாடும் ஒரு திரும்பு முனைதான். மே 5 மகிழ்ச்சிக்குரிய நாளாக மாநாட்டின் மூலம் வௌிப்படுத்தப்படுகிறது.

வணிகர்களின் நலனை பேணும் அரசாக திமுக அரசு எப்போதும் திகழும். காவல் உதவி செயலிலியில் வணிகர்களுக்கும் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களில் அது நடைமுறைக்கு வரும். ஜிஎஸ்டி வரி விதிவிதிப்பு முறைகளை மாற்றும் படி கவுன்சிலுக்கு திமுக அரசு எடுத்துரைத்துள்ளது.

வணிகர்களுக்கான குடும்ப நல இழப்பீடு 1 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். வணிகர்கள் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் தொடர்பில் உள்ளவர்கள். அரசின் நல்ல திட்டங்களை அரசுக்கு எடுத்து சொல்லும் துாதர்களாக வணிகர்கள் செயல்பட வேண்டும்.

மக்களின் எண்ணங்களை ஆலோசனைகளாக வணிகர்கள் அரசுக்கு சொல்ல வேண்டும். அதனை கேட்டு நிறைவேற்றி தந்திட இந்த அரசு காத்திருக்கிறது. பல கோரிக்கைகளை பேரமைப்பு வைத்துள்ளது. அந்த கோரிக்கைகளை எல்லாம் எவ்வளவு முடியுமோ, அவ்வளவையும் நிறைவேற்றி தருவேன். அனைத்து கோரிக்கைகளையும் உறுதியாக நிறைவேற்றி தருவேன் என்ற உறுதியை உங்களுக்கு கூறுகிறேன், என தெரிவித்தார்

மாநாட்டில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் ஆயிரக்கணக்கான வணிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?