பாஜகவுடன் ஒருபோதும் சமரசம் கிடையாது… நான் கலைஞரின் மகன் ; முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி பேச்சு..!!
Author: Babu Lakshmanan16 August 2022, 9:32 pm
சென்னை : பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் சமரசம் ஒருபோதும் கிடையாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் நினைவு பரிசு வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது :- திமுக – விசிக இடையே உள்ளது அரசியல் நட்பு அல்ல, கொள்கை உறவு. கொள்கையில் உறுதியாக இருப்பதால் பெரியாரை எதிர்ப்பவர்கள் திமுகவையும் எதிர்க்கின்றனர். தேர்தல் வரும், போகும், ஆனால் இயக்கங்களும், கொள்கைகளும் இருக்கும்.
பெரியார், அண்ணா, கருணாநிதி, திராவிட கருத்துகளை நிறைவேற்றத் தான் திமுக ஆட்சியில் உள்ளது. டெல்லிக்கு நான் காவடி தூக்கவா போறேன்? கை கட்டி, வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போறேன்? கலைஞர் பையன் நான்.
தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவு, திமுக பாஜகவுக்கு இடையிலான உறவு அல்ல. திமுகவின் கொள்கைக்கும், பாஜவின் கொள்கைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. திமுகவின் கொள்கைகளை எந்த காலத்திலும் விட்டுத்தர மாட்டோம். பாஜகவுடன் குறைந்த பட்ச சமரச திட்டத்தை கூட திமுக செய்து கொள்ளாது. திராவிட மாடல் முழக்கம் தொடர்ந்து ஒலிக்கும் என உறுதி அளிக்கிறேன். சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம், ஜனநாயக சக்திகளை ஒன்றுபடுத்துவோம் என்பதை நானும் வழிமொழிகிறேன், என்று கூறினார்.