பெரியார் ஓகே… ஆனா முத்துராமலிங்கத் தேவர், மருது சகோதரர்கள் இல்லாம தமிழகம் வந்திடுச்சா..? வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி..!!
Author: Babu Lakshmanan26 February 2022, 2:18 pm
பெரியார் இல்லையெனில் தமிழகம் இருந்திருக்காது எனக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக பெண் நிர்வாகி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் ப.திருமாவேலன் எழுதிய ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? என்னும் பெரியார் பற்றிய நூல் வெளியிட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது :- தந்தை பெரியார் மட்டும் இல்லாமல் போயிருந்தால், தமிழ்நாடும், தமிழர்களும் இருந்திருக்க மாட்டார்கள். திராவிடர் இயக்கம் தமிழர் இயக்கம் இல்லை என்றால், எது தமிழர் இயக்கம்..?,எனக் கூறினார்.
அவரது இந்தப் பேச்சுக்கு திராவிட அமைப்புகளும், திராவிட கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. அதேவேளையில் முதலமைச்சர் ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதாவது, தமிழகத்தில் பெரியாரை தவிர சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வேறு எந்தத் தலைவர்களும் இல்லையா..? என்றும், ராஜராஜ சோழன், முத்துராமலிங்கத் தேவர், பாரதியார் உள்பட பல தலைவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிடாதது ஏன்..? என்று பாஜகவின் கலை மற்றும் காலச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- உண்மையான தமிழ் மக்களே, நமக்கு வெட்கம், மானம், சூடு சொரணை இருக்க வேண்டும். அரசன் ராஜராஜ சோழ, அரசன் பெரும் பிடுகு முத்தரையர் போன்ற அரசர்கள். முத்துராமலிங்கத் தேவர், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ.உ.சி., தீரன் சின்னமலை, புலித்தேவன், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன், காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
தமிழ் மக்களுக்கு வந்த சோதனை. அதனால்தான் தமிழகத்தின் விசுவாசியாக இல்லாமல் திராவிட மனிதனுக்கு விசுவாசமாக கர்நாடகாவுக்கு காவிரி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டீர்கள்? Just a question and doubt. பெரியார் இல்லை என்றால் தமிழகத்திற்கு காவிரியை காப்பாற்றியிருப்போம்.. இருக்கலாம்.. அதுதான் உங்கள் திராவிடமா?
திருப்பதியை பிற மாநிலத்துக்கு கொடுத்தது.. இது திராவிடம். யாருக்கு எதற்காக ? யார் தமிழர், யார் தமிழகத்தை காப்பாற்றுவார்கள்? மக்களே உஷார். முதல்வர் அய்யா தயவு செய்து நீங்கள் திராவிடத்தை காப்பாற்றுங்கள், அதே சமயம் நங்கள் தமிழகத்தை காப்போம் அல்லது தமிழ்நாட்டிற்கு சொந்தமானதை திராவிடத்திற்கு விட்டுக்கொடுப்பீர்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.
காயத்ரி ரகுராமின் இந்தக் கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.