திமுக படாத அவமானங்களும் இல்லை.. செய்யாத சாதனைகளும் இல்லை : பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!
Author: Babu Lakshmanan24 August 2022, 8:39 pm
கோவை : திமுக படாத அவமானங்களும் இல்லை என்றும், செய்யாத சாதனைகளும் இல்லை என்று பொள்ளாச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 50 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர். அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, பாஜகவின் மாநில மகளிர் அணி தலைவி மைதிலி, தேமுதிக நிர்வாகி தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் திமுகவில் இணைந்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, பொள்ளாச்சியில் உள்ள ஆச்சிப்பட்டி தனக்கு ஆச்சரியப்பட்டியாக தெரிகிறது. திமுக என்பது அரசியல் கட்சி மட்டுமல்ல, இது கொள்கைகளின் கோட்டை என்றார். கருணாநிதி கூறிய 5 முழக்கங்கள் மற்றும் நான் கூறிய 5 முழக்கங்கள் தான் திமுகவின் கொள்கைகள். இந்த நாட்டில் திமுகவை போல் வெற்றி பெற்ற கட்சியும் இல்லை, தோல்வி அடைந்த கட்சியும் இல்லை இரண்டுமே நமக்குதான் பெருமை. நாம் அடையாத புகழும் இல்லை, நாம் படாத அவமானங்களும் இல்லை, நாம் செய்யாத சாதனைகளும் இல்லை, அடையாத வேதனைகளும் இல்லை, எனக் கூறினார்.