பெரியாரை திட்டுவது நியாயமல்ல… அரசியலில் மதநம்பிக்கை கலந்ததைப் போல இசையிலும் கலக்க வேண்டாம் ; முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்!!

Author: Babu Lakshmanan
23 March 2024, 11:10 am

அரசியலில் மத நம்பிக்கைகளை கலந்தது போல இசையிலும் குறுகிய அரசியலை கலக்க வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதிற்கு கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி, காயத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியாரை பின்பற்றுபவர் என்பதற்காக இந்த விருது வழங்கப்படுகிறதா..? என்று கேள்வியும் எழுப்பினர்.

கர்நாடகா சகோதரிகளின் இந்த கேள்விக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- சிறந்த பாடகர் டிஎம் கிருஷ்ணா அவர்கள் The Music Academy-இன் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

திரு கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.

டிஎம் கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 275

    0

    0