துக்க வீட்டுக்கு போனாலும் சிகப்பு கம்பளமா..? வைரலாகும் CM ஸ்டாலினின் வீடியோ… விளாசும் எதிர்கட்சியினர்..!!
Author: Babu Lakshmanan9 July 2022, 1:26 pm
கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகளை கடந்து விட்டது. எதிர்கட்சியாக இருக்கும் போதே, முதலமைச்ச் ஸ்டாலின் செய்த சில செயல்கள் கடும் விமர்சனத்திற்குள்ளானது. விவசாய நிலங்களை பார்வையிடச் செல்லும் போது, சிமெண்ட் தரை போட்டது, அங்கு சினிமா படங்களைப் போல மூலைக் மூலை கேமராக்களை வைத்து வீடியோ எடுத்தது எதிர்கட்சியினரால் விமர்சிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, சைக்கிளில் சென்று டீக்கடைகளில் தேநீர் அருந்துவது எதிர்கட்சியினரால் விமர்சித்து பேசப்பட்டது. விளம்பரத்திற்காகவே, முதலமைச்சர் ஸ்டாலின் இதுபோன்று செய்து வருவதாகவும், அவர் ஒருத்தர் டீக்குடிப்பதற்காக, 100 போலீசார் வேலை செய்ய வேண்டி இருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.
இதேபோல, கனமழையின் போது புழல் ஏரியை ஆய்வு செய்யச் சென்ற போது பந்தல் அமைக்கப்பட்டது மற்றும் விவசாய நிலங்களை ஆய்வு செய்யும் போது வயல்வெளிகளிலும் சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது அடுத்தடுத்து விமர்சனத்திற்குள்ளாகியது.
இந்த நிலையில், ஒரு தெருவில் உள்ள சாலையில் நீண்ட தூரத்திற்கு சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருப்பதும், அதில் முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனைப் பகிர்ந்த நெட்டிசன்கள் மற்றும் எதிர்கட்சியினர், ‘சென்னையில் திமுக நிர்வாகி ஒருவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் முதலமைச்சர் ஸ்டாலினுக்காக, சாலை முழுவதும் சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது,’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனைப் பார்க்கும் நெட்டிசன்கள் திமுகவினரையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதிலும் ஒருவர், ‘தலைவர் வர்றாருன்னா தெருவில் ரோடு எல்லாம் நல்லா போட்டு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பாத்துக்குவாங்க. அதுக்காக தெருவுக்கு ஒரு கட்சிக்காரர் சாகனுமா? – கேட்ட உபிக்கு அடிஉதை,” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
மேலும், அண்மையில் மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இதுக்கு மேல எனக்கு விளம்பரம் தேவையா..? நான் விளம்பரத்தை விரும்பாதவன் என்று பேசியிருந்தார். ஆனால், அவர் வேண்டாம், வேண்டாம் என ஒருபுறம் சொல்லிக்கொண்டே இருந்தாலும், மறுபுறம் விளம்பரமும், ஆடம்பரமும் அவரை விட்டு செல்லாத ஒன்றாகவே இருந்து வருவதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
0
0