நிலக்கரி பற்றாக்குறையால் கடும் மின்தட்டுப்பாடு… பிரதமர் மோடி தலையிட வேண்டும் : மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!!

Author: Babu Lakshmanan
22 April 2022, 4:08 pm

தமிழ்நாட்டில்‌ உள்ள மின்‌ உற்பத்தி நிலையங்களுக்குப்‌ போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌‌, பிரதமர்‌ மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஒடிசாவில்‌ உள்ள தல்சர்‌ சுரங்கங்களில்‌ இருந்து போதுமான நிலக்கரி தமிழ்நாட்டில்‌ உள்ள மின்‌ உற்பத்தி நிலையங்களுக்கு வழங்க வேண்டியது அவசியமானதென்றும்‌, தமிழ்நாட்டின்‌ தொழிற்சாலைகளுக்கு 72,000 மெட்ரிக்‌ டன்‌ நிலக்கரி தேவைப்படும்‌ நிலையில்‌, தற்போது தினசரி நிலக்கரி வரத்து 50,000 மெட்ரிக்‌ டன்கள்‌ அளவிற்கு மட்டுமே உள்ளது என்றும்‌ அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்‌ சுட்டிக்காட்டியுள்ளார்‌.

தமிழகத்தில்‌ அதிகரித்து வரும்‌ கோடைகால மின்‌ தேவையைப்‌ பூர்த்தி செய்திட நிலக்கரி உற்பத்தி போதுமானதாக இருந்தாலும்‌, இரயில்களில்‌ ரேக்குகளின்‌ பற்றாக்குறை காரணமாக, அது துறைமுகங்களுக்குக்‌ கொண்டு செல்லப்படுவதில்லை என்று தமக்குத்‌ தெரிய வந்துள்ளதாகவும்‌, இதன்‌ விளைவாக, தமிழகத்தில்‌ மின்‌ உற்பத்தி நிலையங்களில்‌ நிலக்கரி இருப்பு கவலை கொள்ளத்தக்க அளவிற்கு எட்டியுள்ளதாகவும்‌ அவர் குறிப்பிட்டுள்ளார்‌.

தமிழ்நாடு மின்‌உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்தைப்‌பொறுத்தவரை, பாரதீப்‌ மற்றும்‌ விசாகப்பட்டினம்‌ துறைமுகங்களுக்கு நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக்‌ டன்‌ நிலக்கரியை எடுத்துச்‌ செல்ல 22 இரயில்வே ரேக்குகள்‌ தேவைப்படுகின்றன என்றும்‌, இருப்பினும்‌, ஒரு நாளைக்கு சராசரியாக 14 ரேக்குகள்‌ மட்டுமே தற்போது ரயில்வேயால்‌ வழங்கப்படுகின்றன என்றும்‌ அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்‌.

இந்த நிலையில்‌, உள்நாட்டு நிலக்கரிப்‌ பற்றாக்குறை காரணமாக, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகம்‌ தடையற்ற பின்‌ விநியோகத்தைப்‌ பராமரிப்பதற்காக, அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது என்றும்‌, இது கோவிட்‌ பெருந்தொற்றிற்குப்‌ பிந்தைய பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும்‌ என்றும்‌ குறிப்பிட்டு, இந்த நிலை உடனடியாக கருத்தில்‌ கொள்ளப்பட வேண்டுமென்று கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

இந்த இக்கட்டான சூழ்நிலையைக்‌ கருத்தில்‌ கொண்டு, பாரதீப்‌ மற்றும்‌ விசாகப்பட்டினம்‌ துறைமுகங்களில்‌, எரிபொருள்‌ வழங்கல்‌ ஒப்பந்தத்தின்படி, நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக்‌ டன்‌ நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும்‌, இந்த நடவடிக்கையால்‌ மட்டுமே தமிழ்நாட்டில்‌ தடையில்லா மின்‌ விநியோகத்தைப்‌ பராமரிக்க முடியும்‌ என்றும்‌ தெரிவித்துள்ள முதலமைச்சர்‌ ஸ்டாலின், இந்த விஷயத்தில்‌ பிரதமர்‌ மோடி உடனடியாக தலையிட வேண்டுமென்று கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 1118

    0

    0