தனி ரூட்டில் கூட்டணி கட்சிகள் : தவியாய் தவிக்கும் திமுக!!
Author: Udayachandran RadhaKrishnan19 May 2022, 9:43 am
சமீபகாலமாகவே திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம், பொதுவானதொரு ஒற்றுமையைக் காண முடிகிறது.
ஒற்றுமையுடன் கூட்டணி கட்சிகள்
இந்த மூன்று கட்சிகளும் மத்திய பாஜக அரசை கண்டித்து, அவ்வப்போது பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தாலும் கூட மாநிலத்தில் நடக்கும் அத்துமீறல்களை ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கு சுட்டிக் காட்டவும் தவறுவதில்லை.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், விசாரணைக் கைதிகளின் மர்ம மரணம், தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியான அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், விளிம்பு நிலை மக்கள் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டியதாக கூறப்படும் வீடுகள் இடிப்பு, தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி, நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு, ரேஷன் கடைகளில் காணப்படும் பல்வேறு குளறுபடிகளுக்காக குரல் எழுப்பவும் செய்கின்றன.
திருமா அடித்த பல்டி
அதிலும் குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஒரு கிராமத்தில் தங்களது கட்சியின் கொடிக் கம்பத்தை மட்டும் நிறுவுவதற்கு அனுமதிக்காத போலீஸாரைக் கண்டித்து முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

அப்படி நடத்தினால் அது காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரானது போலாகிவிடும் என்பதால் பின்னர் அந்த போராட்டத்தை அவர் கைவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சியை விமர்சித்த கூட்டணி கட்சிகள்
இதேபோல் கடந்த மார்ச் மாதம் விருதுநகரில் பட்டியல் இன பெண் ஒருவர் திமுக இளைஞரணியை சேர்ந்த இருவர் உள்பட 8 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதற்கு தோழமையின் சுட்டுதல் போல் கண்டனமும் தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் தலைவர்களான பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், நடராஜன் ஆகியோர் அண்மையில் சென்னை தி நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் கூடி தீவிர ஆலோசனை நடத்தினர்.
அவர்கள் எது பற்றி பேசினார்கள் என்பது வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் இந்த சந்திப்புக்கு பின் அவர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
திமுகவுக்கு ஷாக் கொடுத்த அறிக்கை
அதில், “பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடந்த ஓராண்டில் மட்டும் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. காய்கறி, தானியங்கள், உணவு எண்ணெய் என அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நிலக்கரி பற்றாக்குறைக்கு வழிவகுத்த மத்திய அரசின் கொள்கைகளால் தற்போது மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே பெட்ரோல் டீசல் மீதான வரிகளை கைவிட்டு விலை உயர்வுகளை மொத்தமாக திரும்பப் பெற்றிட வேண்டும். பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ரேஷன் கடைகளில் வழங்கிட வேண்டும். நகர்ப்புற வேலை உறுதி சட்டம் கொண்டு வர வேண்டும். வேலையில்லா கால நிவாரணம் அளிப்பதற்கான மத்திய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அரசுத் துறையில் காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
வரும் 25 முதல் 31-ம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு நாடு தழுவிய இயக்கம் நடத்த வேண்டும் என இடதுசாரி கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.
கூட்டணி கட்சிகள் அறிவித்த போராட்டம்
அதன் அடிப்படையில், தமிழகத்தில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில், வருகிற 26, 27-ம் தேதிகளில் ஒன்றிய, நகர, வட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும், வருகிற 25 முதல் 31-ம் தேதிவரை வீடு வீடாக துண்டு பிரசுரம் விநியோகித்து பிரச்சாரம் செய்யவும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த அறிக்கைதான் தற்போது அறிவாலய வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
அரசியல் நோக்கர்கள் கருத்து
இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கூறியிருந்தாலும் அந்த அறிக்கையின் சில பகுதிகள் மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்பதையும் மறைமுகமாக சொல்கிறது.
குறிப்பாக ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட வேண்டும், நகர்ப்புற வேலை உறுதிச் சட்டம் போன்வற்றை சொல்லலாம். ஏனென்றால் ரேஷனில் பொருட்கள் வழங்குவது மாநில அரசின் கைகளில் உள்ளது. தவிர 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுக அரசுதான் அறிவித்தது. அதேபோல காய்கறி விலையையும் மாநில அரசு நினைத்தால் குறைக்க முடியும்.
திமுகவுக்கு எதிராக தனிப்பட்ட முடிவு
இந்த நிலையில்தான் சமீப நாட்களாகவே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகளும், விடுதலை சிறுத்தைகளும் பல விஷயங்களில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியான திமுகவுக்கு தெரியாமலேயே தனிப்பட்ட முடிவுகளை எடுத்து செயல்படுத்தியும் வருகின்றன.
தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி அன்று தமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை மார்க்சிஸ்ட் கட்சியும் விடுதலை சிறுத்தைகளும்தான் முதலில் புறக்கணிப்பதாக அறிவிப்பை வெளியிட்டன. அதன் பிறகே ஆளுநர் விருந்தை திமுக புறக்கணித்தது.
இப்போது மத்திய அரசை எதிர்த்து நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் திமுகவை எதிர்பார்க்காமல், கலந்து ஆலோசிக்காமல் இந்த 3 கட்சிகளின் தலைவர்களும் ஒருமனதாக பேசி முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கு சில முக்கிய காரணங்களும் கூறப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்து கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலையில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கும் போதும், பிரச்சாரம் மேற்கொள்ளும்போதும் இது தொடர்பாக பொதுமக்கள் கேள்வி எழுப்பினால் என்ன பதில் சொல்வது என்ற கேள்வி எழும். அதை தவிர்ப்பதற்காகவும் நாங்கள் நடுநிலையோடுதான் இருக்கிறோம், திமுக அரசை கேள்வியும் கேட்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும் மாநில பிரச்சினைகள் சிலவற்றையும் இவர்கள் சேர்த்துக் கொண்டுள்ளனர் என்று கருத இடம் உள்ளது.
பாஜக மீது திமுகவுக்கு பாசம்?
இன்னொன்று தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக அரசை வலியுறுத்தின. ஆனால் அதையும் மீறி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனாலும் இந்த மூன்று கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளன என்கின்றனர். மேலும் ஆட்சிக்கு வந்த புதிதில் மத்திய பாஜக அரசு மீது திமுக காட்டிய ஆவேசம், வைத்த விமர்சனங்கள் தற்போது தணிந்து விட்டதாகவும் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் கருதுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இதனால் 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு உருவாக்கியது போல் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் நல கூட்டணியை இவர்கள் அமைக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
கூட்டணி கட்சிகளால் திமுக அதிர்ச்சி
இதுபோன்று வெளியாகும் தகவல்களால் திமுக தலைமை திடுக்கிட்டுப் போயுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. எனினும் திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதற்காகவே விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்படி நடந்து கொள்வதாக ஒரு பேச்சும் அடிபடுகிறது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
எது எப்படியோ, தமிழக அரசியல் களத்தில் திமுக கூட்டணி கட்சிகளான விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் காட்டும் அதிரடி புரியாத புதிராகத்தான் உள்ளது!