கோவையில் 2வது நாளாக தொடரும் ரெய்டு… அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய வட்டாரங்களில் அடுத்தடுத்து சோதனை..!!

Author: Babu Lakshmanan
27 May 2023, 12:12 pm

கோவையில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை,கோவை, கரூர், ஈரோடு என அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் மட்டும் ஏழு இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையானது 2வது நாளாக இன்றும் நடந்து வருகிறது. கோவை, பீளமேட்டையடுத்த கோல்டு வின்ஸ் பகுதியில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் அதிபர் செந்தில் கார்த்திகேயன் வீட்டில் இன்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் இவரது மனைவி அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர், செந்தில் கார்த்திகேயன் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில், தற்போது சோதனை நடப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, திமுகவினர் அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர்.

இதேபோல, தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் சாலையில் அமைந்துள்ள காயத்ரி என்பருவக்கு சொந்தமான அபாஷா போதை மறுவாழ்வு மையத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காயத்ரியின் கணவர் அரவிந்த் மோகன்ராஜ் அமைச்ச் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராவார். இந்த மையத்தை அமைச்சர் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடை பகுதியைச் சேர்ந்த இவருக்கு, தம்மம்பதி கோழிப்பண்ணை சாலையில் 50 ஏக்கரில் பண்ணை வீடு உள்ளது. அங்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதோடு, கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள பிரிக்கால் அடுக்குமாடி குடியிருப்பில் அரவிந்த் மோகன்ராஜ் – காயத்ரி வசிது வரும் 5வது மாடியில் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். பின்னர், அரவிந்த் மோகன்ராஜுடன், சவுரிபாளையம் சாலையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு சென்று அங்கும் சோதனை நடத்தினர். மொத்தமாக இவர்கள் தொடர்புடைய 4 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அதேபோல, கிணத்துக்கடவு அடுத்த பனப்பட்டியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரான சங்கர் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான சாய் புளு மெட்டல் என்ற எம் சாண்ட் தயாரிப்பு தொழிற்சாலையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின் போது, கரூர் ஆர்டிஓ பதிவெண் கொண்ட டிப்பர் லாரிகள் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டிருந்தது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை நடந்து வரும் நிலையில், கோவையிலும் 2வது நாளாக நடந்து வரும் ரெய்டால் பரபரப்பு நிலவி வருகிறது.

  • Ajith Kumar Team Racing Challenges துபாய் ரேஸில் பல திக் திக் சவால்ககளை எதிர்கொள்ள போகும் அஜித் குழுவினர்… 24 மணி நேரம் எப்படிங்க..!
  • Views: - 503

    0

    0