அன்னூர் விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி… தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு… நன்றி சொன்ன அண்ணாமலை
Author: Babu Lakshmanan16 December 2022, 5:15 pm
கோவை ; அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் டிட்கோ தொழில் பூங்கா அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விவசாயிகளுக்கு ஆதரவாக, விவசாய சங்கங்கள் மற்றும் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்தினர்.
அன்னூரில் இருந்து கோவை புலியகுளம் விநாயகர் கோவில் வரை நடைபயணம் மேற்கொண்டு, சாமியிடம் மனு கொடுத்தும் நூதன போராட்டத்தை நடத்தினர். மேலும், விவசாய நிலத்தை அழித்து, தொழிற்பூங்கா அமைக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை – அன்னூரில் தொழிற்பூங்காவுக்கு தரிசு நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு, திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் மற்றும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அன்னூரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில் பூங்கா அமைப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து விவசாயிகளுடன் இணைந்து தமிழக பாஜக நடத்திய மாபெரும் போராட்டத்தின் எதிரொலியாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று அறிவித்துள்ளது திமுக அரசு.
விவசாய பெருங்குடி மக்களின் குரலுக்கும், தமிழக பாஜகவினரின் குரலுக்கும் செவி சாய்த்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் உரிமைக்காக தொடர்ந்து தமிழக பாஜக குரல் எழுப்பும் என்பதை மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.