‘தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்’ : எதிர்த்து அடிக்கிறதா பாஜக…? கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர் வைரல்..!!

Author: Babu Lakshmanan
1 August 2022, 6:50 pm

செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக பாஜகவினர் கோவையில் ஒட்டியுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28ம் தேதி முதல் நடந்து வருகிறது. ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடத்தப்படும் இந்தப் போட்டியை தமிழக அரசு தனது கவுரவமாக பார்க்கிறது.

இதற்காக குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதிலும் குறிப்பாக, செஸ் ஒலிம்பியாட் குறித்த விளம்பரத்திற்கு தனி பட்ஜெட்டே ஒதுக்கப்பட்டது. இந்த விளம்பரங்களில் முதலமைச்சர் ஸ்டாலினை மட்டுமே முன்னிலைப் படுத்தியதாகவும், பிரதமர் மோடியின் புகைப்படங்களை பயன்படுத்தவே இல்லை என்று பாஜக குற்றம்சாட்டியது.

இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், சர்வதேச அளவிலான நிகழ்வுகளில் பிரதமர் மற்றும் குடியரசு தலைவரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அட்வைஸ் செய்தது.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, செஸ் கட்டம் போல கரையுடன் கூடிய வேட்டியும், துண்டை அணிந்திருந்தது பாஜகவினரிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், பிரதமர் மோடியே நெகிழ்ந்து போகும் அளவுக்கு ஆயிரக்கணக்கான பாஜகவினர் சென்னையில் திரண்டிருந்து வரவேற்பு அளித்தனர்.

இதனால், நெகிழ்ந்து போன பிரதமர் மோடி, மறக்க முடியாத நினைவுகள் எனச் சொல்லி ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

இதனிடையே, தொடக்கவிழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியுடன் நெருக்கம் காட்டினாலும், பாஜக அரசை வழக்கம் போல மேடையில் வைத்து மறைமுகமாக விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

இந்த நிலையில், தமிழ் நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம் என்ற வாசகத்துடன் பிரதமர் மோடி படத்துடன் கூடிய சதுரங்க ஆட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் பாஜகவினரை எதிர்த்து அரசியல் செய்யும் திமுகவுக்கு, இனி பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுக்க தொடங்கி விட்டார் என்று பாஜகவினர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 755

    0

    0