காரமடைக்கு இடம் மாறும் கோவை மத்திய சிறை… 10 ஆண்டுகளுக்கு பிறகு முடிவை கையில் எடுத்த தமிழக அரசு..!!

Author: Babu Lakshmanan
29 August 2022, 6:45 pm

கோவை – காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் அமைந்துள்ள மத்திய சிறை காரமடைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கரில் அமைந்துள்ள கோவை மத்திய சிறை, கடந்த 1872-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். சிறை வளாகத்தில் ஆண்கள் சிறை, பெண்கள் சிறை தனித்தனியே அமைந்துள்ளது. ஆண்கள் சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பெண்கள் சிறையில் 50-க்கும் மேற்பட்டோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி மேற்பார்வையில், மத்திய சிறைக் கண்காணிப்பாளர் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் இங்கு வேலை செய்து வருகின்றனர். சிறைவளாகத்தில் உள்ள 45 ஏக்கர் நிலம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் செம்மொழிப் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 120 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் கைதிகள் அடைக்கும் இடம், சிறை தொழிற்கூடங்கள், குடோன்கள் ஆகியவை உள்ளன.

கோவை மத்திய சிறையை இடம் மாற்றிவிட்டு, அங்கு செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க அரசால் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் தி.மு.க அமைந்ததைத் தொடர்ந்து சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா ஏற்படுத்தும் திட்டம் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கேற்ப கோவையில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மத்திய சிறை நகருக்கு வெளியே மாற்றப்பட்டு, சிறையிருந்த இடத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மத்திய சிறைக்கு ஏற்ற 120 ஏக்கர் இடம் தெரிவிக்குமாறு கோவை மத்திய சிறைத்துறை நிர்வாகத்தால், மாவட்ட வருவாய்த்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காரமடையில் இடம் உள்ளது குறித்து வருவாய்த்துறையினரால், சிறைத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி சண்முகசுந்தரம் கூறியதாவது:-தற்போதைய கோவை மத்திய சிறையில் 2,200 அறைகளும், பெண்கள் சிறையில் 200 அறைகளும் உள்ளன. சிறை வளாகத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் தொழிற் கூடங்கள் உள்ளன. இதில், துணிகள் தயாரித்தல், அட்டைப்பெட்டி தயாரித்தல், டெய்லரிங் உள்ளிட்ட பணிகள் கைதிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிய இடத்தில் சிறை அமையும் போது அங்கு 2,500 ஆண் கைதிகள் அறை, 500 பெண் கைதிகள் அறை, தொழிற்கூடங்கள், சிறை அலுவலகங்கள், குடோன்கள், சிறை காவலர்கள் குடியிருப்பு போன்ற அனைத்து கட்டமைப்பையும் ஏற்படுத்த அவசியம். அதற்கேற்ப பல்வேறு இடங்கள் கோவையில் பார்க்கப்பட்டன.

அதில் காரமடையில் 100 ஏக்கர் பரப்பளவிலான அரசுக்கு சொந்தமான இடம் குறித்து வருவாய்த்துறையினர் தெரிவித்ததன் அடிப்படையில் நாங்கள் நேரில் சென்று பார்த்து, இடத்தை உறுதி செய்து, வருவாய்த்துறையினரிடம் தெரிவித்துள்ளோம். மேலும் இந்த 100 ஏக்கருக்கு அருகேயுள்ள தனியார் இடங்களையும் கையகப்படுத்தி தருவதாக தெரிவித்துள்ளனர்.

சிறை இடமாற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செம்மொழிப் பூங்காவு க்கான பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறும்போது, மத்திய சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கான திட்டம் குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், தொடர்ச்சியாக இத்திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது, என்றார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 652

    0

    0