‘பச்சிகளாம்..பறவைக்கெல்லாம்..தத்தினம் தை தை’…மலைவாழ் மக்களுடன் நடனமாடிய கோவை மாவட்ட ஆட்சியர்!!(வீடியோ)
Author: Rajesh31 March 2022, 9:31 am
கோவை: சமுதாய உரிமை வழங்குவது குறித்தான விழிப்புணர்வு கூட்டத்தில் மலைவாழ் மக்களுடன் இணைந்து நடனமாடிய கோவை மாவட்ட ஆட்சியர்.
கோவை மேட்டுப்பாளையம் செம்பாரைபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சேத்துமடை பழங்குடியினர் கிராமத்தில் செம்பாரை பாளையம், நெல்லித்தொரை, வெள்ளியங்காடு ஊராட்சிக்குட்பட்ட 26 வன கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் சமுதாய உரிமை வழங்குவது குறித்தான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 19 கிராம சபை குழுத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் மலை கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அங்கன்வாடி, பொது வழி, மருத்துவமனை, கோவில் பயன்பாட்டிற்கு தேவையான நிலங்களை வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து சமுதாய உரிமை வழங்கிடவும், வனப்பகுதியில் வன கிராம மக்களின் பொருளாதாரம் மேம்பட தேன் சேகரிக்கவும், குச்சி எடுப்பது இது போன்ற தொழில் செய்வதை ஊக்குவிக்கவும் வனத்தை பாதுகாப்பது குறித்தும் பல கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ரேஞ்சர், கோட்டாட்சியர் வட்டாட்சியர் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரை வரவேற்கும் பொருட்டு பழங்குடியின மக்கள் அவர்களது பாரம்பரிய இசையை வாசித்து நடனம் ஆடினர். அப்பொழுது மாவட்ட ஆட்சியரும் அவர்களுடன் இணைந்து நடனமாடினார். இது அங்குள்ள அனைத்து பழங்குடியின மக்களையும் அரசு அலுவலர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.