‘நான் தான் பிடுங்கினேன்… யார் கிட்ட வேணாலும் போய் சொல்லு’… நைட்டியுடன் திமுக பெண் கவுன்சிலர் செய்த அலப்பறை…!!
Author: Babu Lakshmanan12 November 2022, 1:59 pm
கோவை : சாலையில் உள்ள சிறிய மரத்தை பிடுங்கி வீசியதுடன், யாரிடம் வேண்டுமானாலும் சொல்லு என திமுக கவுன்சிலர் மாலதி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாநகராட்சியின் 34வது வார்டு கவுன்சிலராகவும், கல்வி குழு தலைவருமாக இருப்பவர் மாலதி. இவர் குடியிருப்புவாசி ஒருவருடன், மரம் நட்டது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகர் பகுதியில் வசிப்பவர் சுபாஷ். தொழிலதிபரான இவர், தனது வீட்டிற்கு முன்பு மரங்களை நட்டு வைத்து உள்ளார். இந்த மரங்களை சாலையில் வைக்கக் கூடாது என்றும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் கூறி கவுன்சிலர் மலாதி கூறி வந்துள்ளார். இதனால், இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், பொறுமையிழந்த கவுன்சிலர் மாலதி நைட்டி அணிந்திருந்த நிலையில், சுபாஷின் வீட்டிற்கு முன்பு வைக்கப்பட்டுள்ள சிறிய மரத்தை பிடுங்கி எரிந்துள்ளார். ‘நான் தான் செடியை பிடுங்கினேன்… யார் கிட்ட வேணாலும் போய் சொல்லு..’ எனக் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனை சுபாஷ் தரப்பினர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு நியாயம் கேட்டுள்ளனர்.
மேலும், கவுன்சிலர் மாலதி தனக்கு சொந்தமான காரை தினமும் சாலையில் நிறுத்தி விட்டு செல்வதாகவும், இதனால், ஏற்படாத போக்குவரத்து இடையூறு, சிறிய செடியினால் வந்துவிடுமா..? என்று பாதிக்கப்பட்ட சுபாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது, இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.