திமுக பெண் கவுன்சிலர் வீட்டில் என்ஐஏ ரெய்டு…. திமுக பிரமுகர் வீட்டிலும் அதிரடி சோதனை ; கோவையில் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan16 September 2023, 9:53 am
கோவையில் திமுக கவுன்சிலர் முபஷீரா வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். உக்கடம் கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், கோவையில் உள்ள அரபிக் கல்லூரியில் தீவிரவாத செயலுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜி.எம்.நகர் திமுக பிரமுகர் தமிமூன் அன்சாரி என்பவர் வீட்டிலும், கோவை மாநகராட்சி 82வது கவுன்சிலர் முபசீரா வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைக்காக சென்ற அதிகாரிகளை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதம் நடைபெற்றது.
அதுமட்டுமில்லாமல், கோவை ஜி.எம் நகர் அபுதாஹீர், குனியமுத்தூர் பகுதியில் சோகைல், கரும்பு கடைப்பிலுள்ள மன்சூர் ஆகியோரின் வீடுகளிலும் மற்றும் உக்கடம் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் மட்டும் 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.