திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி.. ஆட்சியிலும், கட்சியிலும் ஒரு குடும்பம்தான் ஆதிக்கம் : இபிஎஸ் சுளீர்..!!
Author: Babu Lakshmanan4 ஏப்ரல் 2023, 7:20 மணி
கோவை : திமுகவில் ஆட்சியிலும், கட்சியிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் உயர் பதவியில் இருக்கிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக கோவை வந்துள்ள நிலையில், காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அவருக்கு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், தனியார் மண்டபத்தில் கோவை , நீலகிரி மாவட்ட அதிமுகவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- அம்மா மறைவுக்கு பிறகு எவ்வளவோ பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி இரு பெரும் தலைவர்கள் பொதுச் செயலாளர் பதவியில் இருந்த நிலையில், எளிய தொண்டனாக இருந்த நான் பதவி ஏற்றுள்ளேன்.
திமுகவில் அப்படி வர முடியாது. வாரிசுகள் மட்டுமே தலைவர் பதவிக்கு வந்துள்ளனர். ஜனநாயக ரீதியாக உள்ள கட்சி இந்தியாவில் அதிமுக மட்டுமே. வேறு எந்த கட்சியிலும் எளிய தொண்டன் உயர்ந்த நிலைக்கு வர முடியாது. கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்தது அதிமுக. அவிநாசி சாலையில் 10 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை மேம்பாலம், கோவை – பொள்ளாச்சி 40 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை கொண்டு வந்தது அதிமுக. திமுக எந்த புதிய திட்டத்தையும் கோவைக்கு அறிவிக்கவில்லை.
தமிழகத்திலேயே 10 தொகுதியில் வெற்றி பெற்று வரலாறு படைத்த மாவட்டம் கோவை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டும். திமுக ஒரு கம்பெனி போல் செயல்பட்டு வருகிறது. திமுகவில் ஆட்சியிலும், கட்சியிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் உயர் பதவியில் இருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது பொற்கால ஆட்சியை கொடுத்தது. இரண்டே ஆண்டில் மக்கள் வெறுப்பை சந்திக்கிற அரசாக திமுக உள்ளது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் இந்தியாவில் திமுக மட்டும் தான். அதிமுக மக்களுக்கு சேவை செய்கிற இயக்கம். முதல்வர் ஸ்டாலின் செய்கிற ஒரே வேலை அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு போடுவது மட்டுமே. அதிமுக கொண்டு வந்த நிறைய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.
0
0