ஆன்லைன் சூதாட்டத்தால் 15 நாட்களில் 5வது தற்கொலை… இது நல்லதல்ல ; தமிழக அரசை அலர்ட் செய்யும் அன்புமணி..!

Author: Babu Lakshmanan
15 December 2022, 1:16 pm

ஆன்லைன் சூதாட்டத்தால் கோவையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தடை சட்டத்திற்கு ஆளுனர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை முடிவை கையில் எடுக்கின்றனர். 30க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கோவையை சேர்ந்த இளம் என்ஜினியர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட பாமக தலைவர் அன்புமணி கூறியதாவது :- கோவை உப்பிலிப்பாளையத்தைச் சேர்ந்த பொறியாளர் சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய ஆள்கொல்லியாக மாறி வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 37 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 15 நாட்களில் மட்டும் 5 பேர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ளனர்!

இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்துகிறது. இது குறித்து அமைச்சரே நேரில் சந்தித்து வலியுறுத்தியும் ஆளுனர் அசைந்து கொடுக்காமல் இருப்பது சரியல்ல. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது! ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 59 நாட்களாகின்றன.

ஆளுனர் கோரிய அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்ட பிறகு தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது பல்வேறு ஐயங்களையும், யூகங்களையும் ஏற்படுத்துகிறது! ஆளுனரின் அலட்சியத்தையும், காலதாமதத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ஆளுனரை சந்தித்து ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்த வேண்டும், என தெரிவித்துள்ளார்.

  • தமிழை மதிக்காத புஷ்பா 2 ..சாதனையில் கலக்கும் ட்ரெய்லர்…!
  • Views: - 407

    0

    0