கோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு ; நிர்வாகிகளின் வீடுகளிலும் தாக்குதல்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
23 September 2022, 9:16 am

கோவை : கோவையில் பாஜக அலுவலகம் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா குறித்தும் இழிவாகப் பேசியதாக கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி நேற்று 3 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன் தினம் பீளமேடு பகுதியில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, உருவபொம்மை எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த மூவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ் இஸ்மாயில் அழைத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று காலை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் கரும்பு கடை பகுதியில் தடுப்புகளை தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

இதனிடைய, நேற்று மாலை கணபதியில் இருந்து கோவைப்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் பேருந்தில் முன்பக்க கண்ணாடி உடைந்தது. அதேபோன்று, காந்திபுரத்தில் இருந்து நரசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, டவுன்ஹால் பகுதியை கடந்து சென்ற போது, பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கல் வீசியதில் அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் சூழ்நிலையில், கோவை வி.கே.கே மேனன் சாலையில் அமைந்துள்ள மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி எறிந்தனர்.

அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டு வெடிக்காத நிலையில், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கோவை பிஜேபி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு கிடந்தது தொடர்பாக மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரா போராட்டத்தில் கலந்து கொண்டார்.

அதே போன்று, கோவை ஒப்பணக்காரர் வீதி பகுதியில் செயல்பட்டு வரும் மாருதி டெக்ஸ்டைல்ஸ் துணிக்கடையின் மீது மர்ம நபர்கள் திரியுடன் மண்ணெண்ணெய் வீசி சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில், 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான தகவலின் சம்பவ இடத்துக்கு விரைந்த வெரைட்டி ஹால் ரோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல, கோவை – பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த சரவணன் ஆகியோரின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டது. 2 கார், 2 ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இதனையடுத்து, கோவை மாநகர் முழுவதும் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதோடு, கடந்த சில நாட்களாக கோவையில் விடுதிகளில் தங்கி உள்ளவர்களின் பின்னணி குறித்து விசாரித்த வருகின்றனர். மேலும், கோவை மாநகர் முழுவதும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையம் பாலகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • suriya act in venky atluri movie soon before vaadivaasal மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?