வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மீண்டும்..மீண்டும் தீ: மூச்சுத் திணறலில் மக்கள்…தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் கூட தராத மாநகராட்சி..!!

Author: Rajesh
31 January 2022, 10:25 am

கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நேற்று இரவு தீப்பிடித்ததால் கடும் புகைமூட்டம் எழுந்தது. இதனிடையே தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வாகனங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நேரத்தில் தண்ணீர் சப்ளை செய்யாத காரணத்தால் தீயை அணைப்பதில் தொய்வு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரமாகும் நிலையில் இங்கு அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது. குப்பைகள் ஒரே பகுதியில் சேகரிக்கப்படுவதால் தீ மளமளவென பரவி, கரும் புகை மூட்டம் ஏற்படுகிறது. இதனால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 50 ஆயிரம் மக்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு கடும் அவதியடைந்து வருகின்றனர்.

தானாகத் தீப்பிடிக்கிறதா? அல்லது இங்குள்ள ஊழியர்கள் குப்பை அளவை குறைக்க வேண்டுமென்றே தீ பற்ற வைக்கின்றனரா? என்று சந்தேகம் எழுப்பி குப்பைக்கிடங்கு செயல்பட கடும் எதிர்ப்பு கிளம்பிய சூழலில், குப்பையை அகற்ற ரூ.60 கோடி செலவில் பயோ-மைனிங் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தினமும் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கனமீட்டர் குப்பை தரம் பிரித்து அழிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்த சுழலில், இன்னும் முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. இதனிடையே வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நேற்று இரவு 10 மணியளவில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. கடும் புகை மூட்டம் எழுந்ததால் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.

தீ விபத்து குறித்து அப்பகுதியின் தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை, துணை தீயணைப்பு அலுவலர் அழகர் சாமி தலைமையில் பீளமேடு, கவுண்டம்பாளையம் மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு நிலையங்களிலிருந்து தலா ஒரு தீயணைப்பு வாகனமும், 25 தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்றனர்.


ஆனால், குறித்த நேரத்தில் மாநகராட்சி நிர்வாகம் தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யாத காரணத்தால் தீயை அணைப்பதில் தொய்வு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ” வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இங்கு தீயை அணைக்க வரும் தீயணைப்பு வாகனங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும். நேற்று தீயணைப்பு வாகனங்கள் வந்தும் தண்ணீர் சப்ளை செய்யப்படவில்லை. இந்த நேரத்தில் அதிக புகை எழுந்து இப்பகுதி பொதுமக்கள் தான் பாதிப்பு உள்ளாகினோம்.

அடிக்கடி இங்கு தீ விபத்து ஏற்படும் சூழலில், நிரந்தரமாக இங்கு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்த வேண்டும். தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு கண்துடைப்புக்கு 3 மாதம் மட்டுமே இங்கு தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் முறையான தகவல் கொடுப்பதில்லை. இந்த நிலையில் அதிகாலை 5 மணிவரை போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களின் ஆரோக்கியத்துடன் மாநகராட்சி விளையாடக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 2538

    0

    0