CM ஸ்டாலின் மீது கம்யூனிஸ்டுகள், திடீர் பாய்ச்சல்! தமிழக அரசியல் களம் பரபர…!!
Author: Udayachandran RadhaKrishnan24 November 2023, 9:24 pm
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக தொடர் அறவழி போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்த அப்பகுதி விவசாயிகளில் 7 பேரை 11 பிரிவுகளில் வழக்கு பதிந்து அண்மையில் திமுக அரசு அவர்களை குண்டர் சட்டத்தில் கைதும் செய்தது.
இதற்கு உடனடியாக அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததாலும், தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதாலும் 7 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விவசாயி அருள் என்பவரை தவிர மற்றவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ரத்து செய்வதாக அறிவித்தார். எனினும் இது தொடர்பான சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை.
ஏனென்றால் சிப்காட் விரிவாக்கத்திற்கு 9 கிராமங்களின் விவசாய நிலத்தை கையகப்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்து திமுகவினர் மறைமுகமாக வரவேற்பு போராட்டத்தை கையில் எடுக்க தொடங்கி விட்டனர் என்று கூறப்படுகிறது. அதேநேரம் மேல்மா கிராம விவசாயிகளோ நிலத்தை கையகப்படுத்தக் கூடாது. நாங்கள் தொடர்ந்து அறப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தடாலடியாக அறிவித்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க கிருஷ்ணகிரி அருள் மீதான குண்டர் சட்டத்தை மட்டும் ஏன் ரத்து செய்யவில்லை என்று அமைச்சர் எ வ வேலுவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அவருக்கும் இந்த மாவட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் இங்கே விவசாயிகளிடம் வன்முறையை தூண்டி விடுவதற்காக வந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அதனால்தான் அவர் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்டம் மட்டும் திரும்பப் பெறப்படவில்லை. மற்ற 6 விவசாயிகளும் இனிமேல் அரசுக்கு எதிரான இதுபோன்ற போராட்டங்களில் கலந்துகொள்ள மாட்டோம் என்று உறுதிமொழி எழுதி கொடுத்ததன் அடிப்படையில்தான் அவர்கள் மீதான குண்டர் சட்டம் திரும்பப் பெறப்பட்டது” என்று விளக்கமும் அளித்தார்.
அவர் இப்படிச் சொன்ன பிறகுதான் இந்த விவகாரம் தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயி அருளுக்கு செங்கம் பகுதியில் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதனால் அவருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் எ வ வேலு கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று அறப்போர் இயக்கம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.
அது மட்டுமல்லாமல், சென்னை- சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயி அருள் இருந்த அதே மேடையில்தான் 2021தமிழக தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அதிமுக அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே நான் ரத்து செய்வேன் என்று ஸ்டாலின் உறுதியும் அளித்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இதுவரை அந்த வாக்குறுதியை ஸ்டாலின் நிறைவேற்றவே இல்லை என்ற குற்றச்சாட்டையும் அறப்போர் இயக்கம் முன் வைத்துள்ளது.
இப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையிலும் கூட விவசாயிகளின் உற்ற தோழன் நாங்கள் மட்டுமே என்று கடந்த 55 ஆண்டுகளாக மேடைகளில் முழங்கி வரும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்களின் தமிழகத் தலைவர்கள் உடனடியாக தங்களது கண்டனத்தை பதிவு செய்யவில்லை. மாறாக ஒரு வாரம் கழித்து, இப்போதுதான் தங்களது மௌனத்தை கலைத்து இருக்கிறார்கள்.
மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கே பாலகிருஷ்ணன் தனது சமூக வலைத்தள பதிவில் “விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது ஆறுதல் அளிக்கும் நடவடிக்கையாகும். இதை வரவேற்பதோடு, ஒருங்கிணைப்பாளர் அருள் மீதான குண்டர் சட்டத்தையும், விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவேண்டும். அரசின் தேவைக்கு நிலம் கையகப்படுத்தும் நிகழ்வுகளில் விவசாயிகளுடைய முழுமையான ஒப்புதல் அடிப்படையில் மட்டுமே நிலங்களை கையகப்படுத்திட வேண்டும், விவசாயிகளை வழக்கு போட்டு அச்சுறுத்தி கையகப்படுத்தும் போக்கினை இனியும் தொடரக் கூடாது” என்று சற்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனோ
“செய்யாறு பகுதி மேல்மா உள்ளிட்ட சுற்று வட்டார விவசாயிகளின்
தீவிரமான போராட்டத்தை காவல்துறை மூலம் ஒடுக்கி விடலாம் என்ற முறையில் போராடிய விவசாயிகள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் 11-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்து, 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தது. இதனைத் தொடர்ந்து, சிறையில் இருந்த ஏழு விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் இருந்து வரும் விவசாயிகளின் குடும்பத்தினர் முறையிட்டனர் என்ற பெயரில் அரசு கடுமையான நிபந்தனைகளை விதித்து ஆறு விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளது. அதே சமயம், போராட்டத்தை ஒருங்கிணைத்து, வழி நடத்தி வரும் அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் தொடர்கிறது. இது தவிர விவசாயிகள் மீதான வழக்குகளும் தொடர்கின்றன. அரசின் நடவடிக்கை செய்யாறு பகுதியில் அமைதி திரும்ப உதவவில்லை என்பதை அரசு கவனத்துக்கு தெரிவித்து, விவசாயிகள் மீதான மேல்மா சிப்காட் நில எடுப்பு எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்று, சிறையில் உள்ள அனைத்து விவசாயிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். நிலம் எடுப்பு நடவடிக்கை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, விவசாய பிரதிநிதிகளிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணவேண்டும்”என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
7 விவசாயிகள் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாகி விட்ட நிலையில் திமுக கூட்டணியில் உள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் செய்யாறு சிப்காட் விவரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் வினோதமாக பார்க்கப்படுகிறது.
“ஆனால் கம்யூனிஸ்டுகள் இப்படி நத்தை வேகம் காட்டி இருப்பதற்கு சில பின்னணி காரணங்களும் உண்டு” என அரசியல் பார்வையாளர்கள் புதிர் போடுகின்றனர்.
“முதலில் கிருஷ்ணகிரி அருள் யார் என்பதை சிபிஎம், சிபிஐ இரு கட்சிகளும் தோண்டி துருவி இருக்கின்றன. அப்போதுதான் செய்யாறு மேல்மா பகுதி விவசாயிகள் அழைப்பு விடுத்ததை தொடர்ந்தே அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு அருள் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்துள்ளார் என்பது கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு தெரியவந்துள்ளது.
அதைவிட அவர்களுக்கு படு ‘ஷாக்’ தரும் விஷயமாக 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, கிருஷ்ணகிரி அருளை தனது மேடையில் வைத்தே சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கான விவசாய நிலம் கையகப்படுத்தும் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்த அருளின் பெயரை குறிப்பிட்டு அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் பேசிய வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதைப் பார்த்து இரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர், என்கிறார்கள்.
இந்த வீடியோவை நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுகவும், பாஜகவும் தங்களது பிரச்சார மேடைகளில் கையில் எடுத்து இன்றைய முதலமைச்சர் அன்று அருளை பாராட்டினார். ஆனால் அவரை ஆட்சிக்கு வந்த பின்பு சமூக விரோதி என்று குற்றம்சாட்டி குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைத்துவிட்டார் என்று கடுமையாக விமர்சிக்கலாம்.
அந்த வீடியோ காட்சியை பொதுமக்கள் முன்பாக பிரமாண்ட திரைகளில் போட்டும் காட்டினால் திமுக கூட்டணியில் உள்ள நம் மீதும் இது தொடர்பாக கடும் விமர்சனங்கள் வைக்கப்படும் என்பதை உணர்ந்துதான் வேறு வழியின்றி சிபிஎம், சிபிஐ கட்சிகளின் மாநில செயலாளர்கள் இப்படி ஆமை வேகத்தில் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.
மேலும் செய்யாறு பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் நேரடியாக மேல்மா கிராமத்திற்கு சென்று அப்பகுதியில் விவசாய நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடிவரும் விவசாயிகளின் குடும்பத்தினரையும் சந்தித்து பேசி இருக்கின்றனர். அப்போது அவர்கள், நீங்கள் எல்லாம் உண்மையிலேயே விவசாயிகளின் தோழர்கள்தானா? எங்களது அறப் போராட்டத்தை நீங்கள் ஏன் ஆதரிக்கவில்லை? என்று ஆவேசத்துடன் சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளனர். அதைக் கேட்டு சிபிஎம், சிபிஐ கட்சிகளின் உள்ளூர் பிரமுகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்ததும் உண்மை.
இது எதிர் வரும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை தேர்தலின்போது தமிழக விவசாயிகள் நம் மீது கோபத்தை காட்டுவதற்கு வாய்ப்பாகவும் அமைந்து விடும்.
மேலும் தேர்தல் முடிவுகளில் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டனர். அதனால்தான் இதை உடனடியாக தங்களது கட்சிகளின் மேலிடத்திற்கு தெரிவித்தும் உள்ளனர்.
ஆனால் பிரச்சனையின் வேகம் தணிந்த பிறகு விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினால் திமுக அரசும் இதை அவ்வளவாக கண்டு கொள்ளாது. நமக்கும் விவசாயிகளிடம் கெட்ட பெயர் வராது என்று கருதித்தான் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும்
இப்படி சொல்லி வைத்தாற்போல் ஒரே நேரத்தில் ஒரு வாரம் கழித்து வாய் திறந்து இருக்கின்றன.
மார்க்சிஸ்ட்டை பொறுத்தவரை ஏற்கனவே மாதத்திற்கு ஒருமுறை மின் அளவீடு எடுத்து கட்டணம் செலுத்தும் தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்து அதற்காக செமத்தியாக வாங்கி கட்டிக்கொண்ட அனுபவமும் அக் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு உண்டு. அதனால்தான் செய்யாறு சிப்காட் விவகாரத்தில் இந்த தாமதம் என்பதை புரிந்துகொள்ளவும் முடிகிறது”என்று அந்தஅரசியல் பார்வையாளர்கள் பின்னணி காரணங்களை அடுக்குகின்றனர்.
இதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது. சபாஷ்!
விவசாயிகளின் போராட்டத்தில் சிபிஎம், சிபிஐ கட்சிகள் ஏன் அடக்கி வாசிக்கின்றன என்பதற்கான காரணம் இப்போதுதான் புரிகிறது!