விவசாயிகளுக்கு இழப்பீடு வெறும் கண்துடைப்பு… ஏக்கருக்கு வெறும் ரூ.13,500 போதுமா? பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 October 2023, 2:14 pm

விவசாயிகளுக்கு இழப்பீடு வெறும் கண்துடைப்பு… ஏக்கருக்க வெறும் ரூ.13,500 போதுமா? பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்!!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வாடிய சுமார் 40,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,400 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார்.
கர்நாடகத்திடமிருந்து உரிய காவிரி நீரை பெற்றுத் தர தவறியதால் 2 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகி வரும் நிலையில், 40,000 ஏக்கருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பதை கண்துடைப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த காலங்களை விட அதிகமாக நடப்பாண்டில் 5.20 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் குறுவை நடவு செய்யப்பட்டது.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறந்து விடப்பட்டதும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டதும் இதற்கு காரணம் ஆகும்.

ஆனால், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததாலும், இருக்கும் நீரை பகிர்ந்து கொள்ள கர்நாடக அரசு மறுத்து விட்டதாலும் நடப்பு சாகுபடி ஆண்டில், இன்று வரை தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 127.05 டி.எம்.சி நீரில் 40 டி.எம்.சி தண்ணீர் கூட மேட்டூர் அணைக்கு வந்து சேரவில்லை.

கடந்த ஒன்றரை மாதங்களாகவே காவிரியில் போதிய அளவில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்பதால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகத் தொடங்கி விட்டன.

முன்கூட்டியே நடப்பட்ட பயிர்கள், நிலத்தடி நீரைக் கொண்டு பாசன வசதி பெற்ற பயிர்கள் என ஒட்டுமொத்தமாக இரு லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை பயிர்கள் கடந்த காலங்களில் அறுவடை செய்யப்பட்டு விட்டன. மீதமுள்ள மூன்றரை லட்சம் ஏக்கர் பயிர்கள் வாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றிலும் கூட சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்களை ஓரளவு பாதிப்புடன் காப்பாற்றி விட முடியும்.

அதே நேரத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33 அடியாகவும், நீர்இருப்பு 9 டி.எம்.சியாகவும் குறைந்து விட்ட நிலையில், அணையிலிருந்து காவிரியில் நீர் திறக்கப்படுவது அடுத்த ஓரிரு நாட்களில் நிறுத்தப்படும்.

அத்தகைய சூழலில் காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை செய்ய தயாராகாத 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவைப் பயிர்களை காப்பாற்ற முடியாது. அவ்வாறு இருக்கும் போது 40 ஆயிரம் ஏக்கரில் மட்டும் தான் பாதிப்பு என்று எந்த வகையில் அரசு கணக்கிட்டது என்பது தெரியவில்லை.

அதுமட்டுமின்றி, சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5400 மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது உழவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். காவிரியில் தண்ணீர் வராததால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ. 40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டிய தார்மிகக் கடமை தமிழக அரசுக்கு இரு வழிகளில் உள்ளது.

முதலாவது, கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இன்று காலை நிலவரப்படி கூட 66 டி.எம்.சி தண்ணீர் உள்ள நிலையில், அங்கிருந்து காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டிய கடமையில் தமிழ்நாடு அரசு தோற்றுவிட்டது.

அத்தகைய கடமை தவறுதலுக்காகவே தமிழக அரசு இழப்பீடு தர வேண்டும். இரண்டாவதாக, குறுவை நெற்பயிர்களுக்கு தமிழக அரசு காப்பீடு வழங்கியிருந்தால், தண்ணீரின்றி கருகிய பயிர்களுக்கு காப்பீடு நிறுவனங்களிடமிருந்து ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் இழப்பீடு கிடைத்திருக்கும்.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குறுவை நெல்லுக்கு காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு குறுவைக்கு காப்பீடு வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது.

அதுமட்டுமின்றி, குறுவை பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதை இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசு ஈடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப்பீட்டை அரசு தான் வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப்பீட்டை வழங்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கும் நிலையில், வெறும் 40,000 ஏக்கருக்கு மட்டும் ஏக்கருக்கு ரூ.5400 மட்டும் இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயம்? இந்த தொகை நடவு நட்ட செலவை ஈடு செய்வதற்குக் கூட போதுமானதல்ல.

ஓர் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.25,000 வரை செலவு ஆவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்.எல்.சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்தில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்ட போது, அப்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

அவற்றைக் கருத்தில் கொண்டு, வறட்சியால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 350

    0

    0