40 தொகுதிகளிலும் போட்டியா?… அதிமுக புதிய தேர்தல் வியூகம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2024, 9:08 pm
Quick Share

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக
அறிவித்து நான்கு மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில் இன்னும்
அது தொடர்பான சர்ச்சைகள் பொதுவெளியில் எழுந்தவாறுதான் இருக்கின்றன.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும் என்று கூறிய பின்பும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் பாஜகவுடன் அதிமுக உறவை முறித்துக் கொண்டதாக கூறுவது போலி நாடகம் என்ற விமர்சனத்தை தொடர்ந்து வைத்தும் வந்தனர்.

அதேநேரம் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை டெல்லி பாஜக மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் மௌனம் சாதித்தது. மேலும் தேசிய ஜனநாயக
கூட்டணியில் அதிமுகவை மீண்டும் சேர்க்க திரை மறைவில் முயற்சியும் மேற்கொண்டது.

இதனால் திமுகவினர் கூறுவது உண்மைதானோ என்று சந்தேகக் கண் கொண்டு பார்த்தவர்களும் உண்டு. அதன் பிறகு மதுரையில் நடந்த எஸ் டி பி ஐ கட்சி மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராக எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பிறகே திமுக விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொண்டது.

இந்த நிலையில்தான் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜனவரி 29ம் தேதி தேர்தல் பிரச்சாரக் குழுவும் தொகுதி பங்கிட்டு குழுவும் இணைந்து தேர்தல் பிரச்சாரங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தின.

இந்த கூட்டத்தில் ஒவ்வொரு அதிமுக ஆட்சிக்காலத்தின் போதும் மக்களுக்காக கொண்டு வந்த நலத் திட்டங்களை மக்கள் மத்தியில் எவ்வாறு கொண்டுபோய் சேர்ப்பது, தேர்தல் பிரச்சாரங்களை திட்டமிடுவது, தெருமுனை கூட்டங்களை நடத்துவது என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒரே நேரத்தில் திமுக, பாஜக, அமமுக கட்சிகளையும் ஓபிஎஸ்சையும் கடுமையாக போட்டு தாக்கினார்.

அவர் கூறும்போது, “பாஜகவுடன் இனி எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அதிமுக எங்களுடன் கூட்டணிக்கு வரவில்லை என்றால் மிகப்பெரிய விலையை கொடுக்கவேண்டி இருக்கும் என்று பாஜக மாநில செயலாளர் ராம சீனிவாசன் அதிமுகவை மிரட்டி இருக்கிறார். ஆனால் இப்போது அப்படி சொல்லவில்லை என மறுக்கிறார். இந்த உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் அதிமுக ஒருபோதும் அஞ்சாது.

அதிமுகவினர் டெல்லி சென்றால் பாஜக தலைவர்களின் காலில் விழுவதாக அண்ணாமலை கூறுவது கற்பனை கதை. நடக்காத விஷயத்தை சொல்லி திசை திருப்ப பார்க்கிறார். அவரை மாதிரி அண்ணே… அண்ணே… என்று அழைத்து கூழைக் கும்பிடு போட எங்களுக்குத் தெரியாது.

17 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது ஆளுநர் பதவியை நீக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுகதான் கொத்தடிமையாக செயல்பட்டது. ஆனால் இப்போது ஆளுநர் பதவியே வேண்டாம் என்று வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்கிறார்கள். மத்திய பாஜக அரசு கடந்த காலங்களில் நமது மாநில நலன்களை புறக்கணித்ததை வெளியே கொண்டு வருவோம். மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருந்துகொண்டு திமுக செய்து வரும் மக்கள் விரோத செயல்பாடுகளையும் தோலுரித்துக் காட்டுவோம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது டிடிவி தினகரனின் அமமுகவையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது என்னிடமும் எடப்பாடி பழனிசாமியிடமும் எவ்வளவோ இறங்கி வந்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமிதான் கேட்கவில்லை என்று ஓபிஎஸ் கூறியிருப்பதன் மூலம் அவர் எந்த கட்சிக்கு கொத்தடிமையாக உள்ளார் என்பது நன்றாகவே வெளிப்படுகிறது” என்று ஆவேசம் காட்டினார்.

இந்த நிலையில்தான், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாமக, தேமுதிக, தமாக போன்ற கட்சிகள் இதுவரை முன் வராத நிலையில் சிறு சிறு கட்சிகளை இணைத்துக் கொண்டு 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க, அதிமுக தயாராகி வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

பாமக, தேமுதிக கட்சிகளைப் பொறுத்தவரை எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதை கடைசி நேரத்தில்தான் முடிவு செய்து யார் அதிகத் தொகுதி தருகிறார்களோ அந்தப் பக்கமாக சாய்வது வழக்கம். அதனால் கூட்டணி அமைக்க இன்னும் காலம் இருப்பதாகவே அதிமுக கருதுகிறது.

இதுகுறித்து, மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுவது இதுதான். “2014 தேர்தலில் தமிழகம், புதுச்சேரி இரண்டையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிட்டு 37ல் வெற்றி கண்டது.இப்போதும் அதேபோல வேட்பாளர்களை நிறுத்தினால் அதிமுகவால் ஒரு இடத்தில் கூட வெற்றி காண முடியாது.

ஏனென்றால் ஜெயலலிதாவுக்கு இருந்த ஆளுமை, மக்களிடம் இருந்த செல்வாக்கு எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இது ஓரளவுக்கு உண்மையாக இருந்தாலும் கூட, அன்று ஜெயலலிதாவுக்கு போட்டியாக களத்தில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி இப்போது உயிருடன் இல்லை என்பதால் திமுகவும் போதிய ஆளுமைத் திறன் இல்லாத கட்சியாகத்தான் உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மாநில தலைவர் அண்ணாமலை வழியாக தமிழகத்தில் பாஜகவை வலுவாக காலூன்ற கட்சி மேலிடம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இது நல்ல விஷயம்தான்.

திமுக கூட்டணி வலுவாக இருந்தாலும் கூட திமுக ஆளும் கட்சியாக இருப்பதால்
அதன் மீதான அதிருப்தியால் 10 முதல் 12 சதவீதம் வரை வாக்குகள் குறைவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். இதை நல் வாய்ப்பாக எடுத்துக் கொண்டு சமூக ஊடகங்களை பாஜக பயன்படுத்தி முன்னிலை பெற விரும்புகிறது. இது எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது.

ஏனென்றால் அண்ணாமலையின் நடவடிக்கைகளுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் கமெண்ட்டில் கடுமையான விமர்சனத்தை பாஜகவினர் முன் வைக்கின்றனர்.

அண்மையில் கிருஷ்ணகிரி அருகே என் மண் என் மக்கள் யாத்திரையின் போது தைப்பூச விழாவையொட்டி அண்ணாமலை காலணி அணிந்து காவடி ஆடுவதுபோல ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து பாஜகவினர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

தமிழகத்தில் மூன்று சதவீத ஓட்டுகளை வைத்துள்ள பாஜக 30 சதவீத ஓட்டுகள் பெற்று 25 தொகுதிகளை கைப்பற்றும் என்று அண்ணாமலை தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக 2016ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலில் 10 சதவீத ஓட்டுகளுடன் மூன்று இடங்களை கைப்பற்றி இருந்த பாஜக 2021 தேர்தலில் அங்கு
37 சதவீத ஓட்டுகளுடன், 77 தொகுதிகளில் வெற்றி பெற்றதை உதாரணமாக கூறுகின்றனர்.

ஆனால் பக்கத்து நாடான வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக மேற்கு வங்கத்தில் குடியேறி வாக்குரிமை பெற்றவர்கள் மட்டும் சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தான் அங்கு பல தலை முறைகளாக வாழ்ந்து வரும் மக்கள் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை புறக்கணித்துவிட்டு பாஜகவுக்கு வாக்களித்தனர். எனவேதான் வாக்கு சதவீதமும், சீட்டு எண்ணிக்கையும் அங்கு பாஜகவுக்கு ஒரே தேர்தலில் பல மடங்கு அதிகரித்தது.

தமிழகத்தில் அதுபோன்ற சூழல் எதுவும் இல்லை. அதனால் ஒரே தேர்தலில் மூன்று சதவீதம் 30 ஆக உயர்ந்து விடும் என்பதெல்லாம் கட்சித்தொண்டர்கள் உற்சாகம் அடைவதற்கு வேண்டுமானால் சொல்லப்படலாம். மற்றபடி இது நடைமுறையில் சாத்தியமாகாது.

ஏனென்றால் கடந்த தேர்தலின் கணக்குப்படி தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி மூன்று சதவீதத்திற்கும் சற்று குறைவு. அண்ணாமலையின் அதிரடி அரசியல் இளைஞர்களிடையே ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் காரணமாக இது 7 சதவீதம் என்ற அளவிற்கு இப்போது உயர்ந்திருக்கலாம். பாமக, தேமுதிக, அமமுக கட்சிகளை சேர்த்தால் இன்னொரு 6 அல்லது 7 சதவீதம் கூடுதலாக கிடைக்கலாம். எப்படி பார்த்தாலும் பாஜக கூட்டணி 14 சதவீத வாக்குகள் பெறுவதற்கான வாய்ப்புதான் தென்படுகிறது.

ஏனென்றால் மத்திய,தென் மாவட்டங்களில் பாமகவுக்கு வாக்கு வங்கியே கிடையாது. ஆனால்.வட மாவட்டங்களில் 5 சதவீதம் வரை உண்டு. கொங்கு மண்டலத்திலும் சில தொகுதிகளில் வேண்டுமானால் பாமகவுக்கு ஏழு சதவீதம் வரை வாக்குகள் இருக்கலாம். அதேநேரம் தென் மாவட்டங்களில் ஐந்து, ஆறு நாடாளுமன்ற தொகுதிகளில் அமமுகவுக்கு 7 சதவீதம் முதல் 9 சதவீதம் வாக்குகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதை வைத்துக் கொண்டு அமோக வெற்றி பெற முடியும் என்று பாஜக போடும் கணக்கு பலிக்குமா? என்பது கேள்விக் குறிதான்.

இதன் காரணமாகத்தான் தோல்விக்கு பயந்து நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பை டிடிவி தினகரன் வெளியிட்டு இருக்கிறாரோ என்று கருதத் தோன்றுகிறது. அதேபோல் அண்ணாவையும், ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்த அண்ணாமலையுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களே என்று அதிமுக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டால் அது டிடிவி தினகரனுக்கும், ஓபிஎஸ்க்கும் பெரிய தலைவலியாக மாறலாம். இதனால்தான் அதிமுக அரசில் நடந்த ஊழல்களையும் வெளியிடுவேன் என்று அண்ணாமலை கூறி ஒரு வருடம் ஆகும் நிலையிலும் அது பற்றி அவர் இதுவரை எதுவுமே பேசவில்லை.

தவிர, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உள்ள அமமுகவினரும் நமக்கு ஓட்டு போடாமல் போய்விட்டால் என்ன ஆவது என்ற அச்சத்தின் காரணமாகத்தான் அதிமுகவை இதுவரை அண்ணாமலை நேரடியாக விமர்சிக்கவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.

தமிழகத்தில் உண்மையிலேயே ஊழலற்ற ஆட்சியை அமைக்க அண்ணாமலை விரும்புகிறார் என்றால் திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டது போல அவர் அதிமுக தலைவர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட முன்வர வேண்டும்.

2017ல் அதிமுக அரசை நாங்கள்தான் காப்பாற்றினோம் என்று பாஜக கூறலாம். ஆனால் அப்போது கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக ஆட்சி கவிழ்ந்திருந்தால் தேர்தல் நடந்து திமுக ஆட்சியை பிடித்து இருக்கும். அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் 2017ம் ஆண்டு அதிமுக அரசு கவிழாமல் இருக்க எடப்பாடி பழனிசாமியையும், ஓ பன்னீர்செல்வத்தையும் பாஜக ஒருங்கிணைத்தது என்பதுதான் உண்மை.

டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களுக்கு அதிமுகவில் எந்த செல்வாக்கும் இல்லை, தொண்டர்களில் 99% பேர் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்கிறார்கள் என்பதால்தான் நம்முடன் கூட்டணி சேராமல் புறக்கணிக்கிறார்களே என்று பாஜக தனது உச்சபட்ச கோபத்தை வெளிப்படுத்துகிறது” என்று அந்த அரசியல் நோக்கர்கள், கூறுகின்றனர்.

மத்திய பாஜக, மாநில திமுக அரசுகளை கடுமையாக விமர்சித்ததுடன் அண்ணாமலை உள்ளிட்ட மாநில பாஜக தலைவர்களை அதிமுக இறங்கி விளாசி அடிக்கத் தொடங்கியிருக்கிறது.

இதற்கு பாஜக எப்படி பதிலடி கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

  • snehan recent news சம்பவம் செய்த சினேகன்…திகைத்து போன கன்னிகா..!என்னவா இருக்கும் ?
  • Views: - 335

    0

    0