ஆளுநர் ரவி பரபரப்பு புகார்… தலைமை செயலாளர் இறையன்புக்கு நோட்டீஸ் : முதல்வருக்கு பறந்த கடிதம்!!!
Author: Udayachandran RadhaKrishnan5 May 2023, 9:59 am
ஆளுநர் ரவி கொடுத்த புகாரையடுத்து தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் சிலர் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்ததாக, சிறுவர் – சிறுமியர் திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து தமிழக ஆளுநர் ரவி அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து இருந்தார்.
அந்த பேட்டியில் அரசு பழிவாங்கும் வகையில் சமூக நலத்துறையின் சார்பில் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர் என்றும், அங்கு குழந்தை திருமணங்கள் நடந்ததாக கூறி எட்டு பேர் மீது புகார் அளித்து இருந்தனர் என்றும், இதில் சிலர் கைது செய்யப்பட்டனர் என்றும் , ஆனால் அங்கு அப்படி நடக்கவில்லை. அது உண்மையான தகவல் அல்ல என்றும் ஆளுநர் ரவி குறிப்பிட்டார்.
மேலும், அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டனர் என்றும், தீட்சிதர்களின் ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு சிறுமிகளுக்கு தடை செய்யப்பட்ட முறையில் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டது என்றும், இது குறித்து தான் முதல்வருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதி இருந்தேன் எனவும் ஆளுநர் ரவி அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேட்டியை அடிப்படையாகக் கொண்டு, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழ்நாடு தலைமைச் செயலர் இறையன்புவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதில், சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு தடை செய்யப்பட்ட முறையில் கன்னித்தன்மை சோதனை நடைபெற்றது குறித்து விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது என்பது பற்றியும், 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.