கண்டிஷன் போட்ட அமித்ஷா… தப்பியது பதவி : உடனே சென்னை வந்த அண்ணாமலை.. நடந்தது என்ன?!!
Author: Udayachandran RadhaKrishnan4 October 2023, 10:58 am
கண்டிஷன் போட்ட அமித்ஷா… தப்பியது பதவி : உடனே சென்னை வந்த அண்ணாமலை.. நடந்தது என்ன?!!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால் அவர் மீது ஆத்திரமடைந்த பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவித்தது.
அதற்கு முன் அதிமுக நிர்வாகிகள் டெல்லி சென்று பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என பாஜக தேசிய நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளனர்.
ஆனால், அமித்ஷா அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்க மறுத்துவிட்டதால் கூட்டணி முறிந்தது. இருப்பினும் அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டால், மீண்டும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க வரலாம் என்று கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதிமுக உடனான கூட்டணி அவசியம் என டெல்லி தலைமைக்கு ரிப்போர்ட் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை நிர்மலா சீதாராமன, பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார்.
தனது யாத்திரைக்கு மத்தியில் திடீரென டெல்லி சென்ற அண்ணாமலை, திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அவர் அனுமதி கோரினார்.
அன்றைய தினம் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் டெல்லியிலேயே தங்கி இருந்த அவர், நேற்று மதியம் அமித்ஷாவையும் ஜேபி நட்டாவையும் சந்தித்து பேசினார். அப்போது அதிமுகவுடனான மோதல் தொடர்பாக அவர் விளக்கம் அளித்தார். அதனை தலைவர்கள் ஏற்க மறுத்ததாகவும், அதிமுக மற்றும் அக்கட்சியினர் தலைவர்களாக போற்றுபவர்கள் பற்றியோ கருத்து சொல்லக்கூடாது என்ற கண்டிசனுடன் தலைவர் பதவியை உடனடியாக மாற்ற விரும்பவில்லை என கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிமுகவினரின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்த நிலையில், அதை பற்றி வாயே திறக்கக்கூடாது என்றும், எதிர்க்கட்சியாக மட்டும் செயல்பட்டால்போதும் என அவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
தலைவர்களுடன் உடனான சந்திப்பை தொடர்ந்து அண்ணாமலை டெல்லியில் இருந்து நேற்று இரவே சென்னை புறப்பிட்டார். அண்ணாமலை சென்னை திரும்பும் தகவல் அறிந்த செய்தியாளர்கள் விமான நிலையத்தில் பேட்டி எடுக்க கூடி இருந்தனர்.
வழக்கமாக செய்தியாளர்களை சந்திக்கும் அவர், விமான நிலையத்திற்கு வந்தவுடன் செய்தியாளர்களிடம் 2 நாட்கள் கழித்து உங்களிடம் பேசுகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதன் காரணமாக மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி இணைவது கேள்விக்குறியாக உள்ளது.