தோற்கும் தொகுதிகளை காங். தலையில் கட்ட முடிவா?…. திமுகவின் ‘கேம் பிளான்’ ஆரம்பம்!
Author: Udayachandran RadhaKrishnan28 October 2023, 9:23 pm
2024 நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் காங்கிரசுக்கு திமுக எத்தனை தொகுதிகளை ஒதுக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. ஐந்து மாநில தேர்தலுக்கு முடிந்து டிசம்பர்15ம் தேதிக்கு மேல் இது குறித்து ஓரளவு தெரிய வரும் என்று கூறினாலும் கூட காங்கிரசுக்கு கிடைக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 5, 9 அல்லது12 ஆகிய இந்த மூன்றில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும் என்று உறுதியாக கூறலாம்.
இதற்கான காரணம் வெளிப்படையானது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி விட்டால் அக்கட்சியை லேசில் கையில் பிடிக்க முடியாது.
இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக யார் என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று இப்போதைக்கு முடிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட ராகுல் காந்திக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்ற அழுத்தத்தை காங்கிரஸ் மேலிடம் கொடுக்கலாம். இது பிரதமர் பதவி கனவில் இருப்பதாக கூறப்படும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் சிக்கலை ஏற்படுத்தலாம்.
இந்த நிலையில்தான் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுக்கு சுழற்சி முறையில் எம்பி தொகுதிகளை ஒதுக்கலாம் என்றொரு நூதன திட்டத்தை திமுக தலைமை வகுத்துள்ளதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது 2019 தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒரு சிலவற்றை தவிர மற்ற
எம்பி சீட்டுகள் கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி பகிர்ந்து அளிக்கப்படும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் கடந்த முறை திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருநாவுக்கரசர் 2024 தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட முடியாது. அதற்கு மாற்றாக அவருக்கு தேனி ஒதுக்கப்படலாம்.
அறிவாலயத்தின் இத் திட்டத்தை, மூன்று வாரங்களுக்கு முன்பு சிவகங்கை தொகுதி எம்பியான கார்த்தி சிதம்பரம் கூட வரவேற்று கருத்து தெரிவித்து இருந்தார். “நாடாளுமன்றத் தேர்தலில் ஒருவர் எந்த தொகுதியில் இருந்து வெற்றி பெற்றால் என்ன?… எங்கு ஜெயித்தாலும் அவர் நாடாளுமன்றத்திற்குத்தானே போகப் போகிறார்?… அதனால் ஒருவர் ஒரே தொகுதியில்தான் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி காண வேண்டும் என்ற கட்டாயம் கிடையாதே? கூட்டணியில் சிவகங்கையில் போட்டியிட காங்கிரசுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றால் அருகில் ஒதுக்கப்படும் வேறொரு தொகுதியில் போட்டியிடப் போகிறார்கள். இதில் பிரச்சனை எதுவும் இல்லையே?…”என்று கூறி இருந்தார்.
திமுகவின் சுழற்சி முறை எம்பி தொகுதி ஒதுக்கீடு திட்டத்தை தமிழக காங்கிரஸ் தலைமை ஏற்றுக் கொண்டதா என்பது இதுவரை வெளிப்படையாகத் தெரியவில்லை.
அதேநேரம் 2019 தேர்தலில் தமிழக காங்கிரசுக்கு திமுக ஒதுக்கிய திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருச்சி, சிவகங்கை, விருதுநகர், தேனி, ஆரணி, கரூர் ஆகிய தொகுதிகள் அக்கட்சிக்கு மீண்டும் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.
கன்னியாகுமரி தொகுதி மட்டுமே மீண்டும் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேநேரம் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை தங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, கூட்டணியில் நீடிப்பதே மிகப்பெரிய புண்ணியம் என்ற தாராள மனப்பான்மைக்கு வந்துவிட்டதை புரிந்து கொள்ளவும் முடிகிறது.
ஏனென்றால் மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்து விடக்கூடாது என்பதுதான் இந்தக் கட்சிகளின் ஒரே இலக்காக உள்ளது. அதனால் திமுகவுக்காக எத்தகைய தியாகத்தையும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்த கட்சிகள் செய்யத் தயங்காது.
விசிக தலைவர் திருமாவளவனோ எதிர்வரும் தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளுடன் கூடுதலாக திருவள்ளூரையும் கேட்டிருக்கிறார். அதுவும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்கிற நிபந்தனையுடன் இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.
இதெல்லாம் தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெறும், அதிமுகவுக்கு நான்கு இடங்கள் கிடைக்கும், பாஜக ஒரு தொகுதியை கைப்பற்றும் என்கிற இரண்டு மாதங்களுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு அடிப்படையில் கேட்கப்பட்டவை.
அப்போது நேரடி இருமுனைப் போட்டியில் திமுக கூட்டணி 57 சதவீத வாக்குகளை பெறும், அதிமுக-பாஜக கூட்டணிக்கு 28 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பின்பு அக்டோபர் மாத மத்தியில் தேசிய ஊடகங்கள் எடுத்த சில கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் வாக்கு சதவீதம் 44 ஆக குறைந்து போனது.
அதிமுகவுக்கு 27 சதவீதமும், பாஜக தலைமையில் அமையும் கூட்டணிக்கு 14 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும் என்றும் தெரியவந்தது.
இதனால் ஏற்படும் கடும் மும்முனை போட்டியில் திமுக கூட்டணிக்கு
அதிகபட்சமாக 30, அதிமுகவுக்கு 7, பாஜக கூட்டணிக்கு 2 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உள்ளது என்றும் அந்தக் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருந்தது.
இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் மொத்தம் உள்ள சிறுபான்மையினரின் 12 சதவீத வாக்குகளில் 5 சதவீதம் வரை அதிமுகவிற்கு செல்லும் நிலை உருவாகி விட்டதுதான்.
மேலும் திமுக ஆட்சியின் மீது மக்களிடம் எழுந்துள்ள அதிருப்தி காரணமாக அதிமுகவிற்கும், பாஜக கூட்டணிக்கும் தலா 4 சதவீத வாக்குகள் கூடுதலாக கிடைக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக உளவுத்துறை விரிவான அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்து அதில் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டு இருக்கும் தகவல்கள் அப்படியே நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கவும் செய்யலாம் என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
இதனால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உடைந்தால் 39 தொகுதிகளையும் எளிதில் கைப்பற்றி விடலாம் என்று கணக்குப் போட்டு இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சில நாட்களாகவே கோபம் கொப்பளிக்க அதிமுகவையும், பாஜகவையும் ஒரே நேரத்தில் கடுமையாக விமர்சித்து வருவதை பார்க்க முடிகிறது.
அதுமட்டுமின்றி திமுக மட்டுமே 30 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்து விட வேண்டும், அப்போதுதான் இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க நேர்ந்தால் தானும் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடியும் என்ற ஸ்டாலினின் நினைப்பிற்கு முட்டுக்கட்டை போடுவது போலவும் சமீபத்திய இந்த கருத்துக்கணிப்பு அமைந்துவிட்டது.
“அதேநேரம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள திமுக குறைந்த பட்சம் 30 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை நிச்சயம் உருவாக்கிக் கொள்ளும்” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
“மார்க்சிஸ்ட், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு ராஜ்ய சபா எம்பி பதவி தருவதாக உறுதியளித்து நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட் ஒதுக்கினாலே போதும். சமாளித்து விடலாம் என்று திமுக நினைக்கிறது. முஸ்லிம் லீக் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கிய ராமநாதபுரம் தொகுதியோ அல்லது நாகப்பட்டினமோ கொடுக்கப் படலாம்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியோ நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடப் போவதில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டது. மதிமுகவை பொறுத்தவரை அது தாய்க்கழகமான திமுகவுடன் இணைந்து விட்டது போன்ற நிலையில் இருப்பதால் வைகோ என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வார். அவரது கட்சியைப் பற்றி திமுகவுக்கு எந்த கவலையும் கிடையாது.
இந்த கணக்குப்படி பார்த்தால் எஞ்சி இருப்பது ஐந்தே ஐந்து தொகுதிகள் தான். அவற்றை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்வதில் திமுக உறுதியாக உள்ளது.
அதிலும் கூட திமுக ஒரு புதிய கேம் பிளானை தயாரித்து இருக்கிறது. கன்னியாகுமரி தவிர மற்ற நான்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் திமுக மிகவும் கறாராக உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் 2019 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எந்த ஒரு தொகுதியையும் மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்குவதில்லை என்ற முடிவையும் அறிவாலயம் எடுத்திருக்கிறது என்கிறார்கள்.
தவிர திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று கணிக்கப்படும் தர்மபுரி, விழுப்புரம், சிதம்பரம், கோவை, ஈரோடு, சேலம், தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய 9 தொகுதிகளில் நான்கை காங்கிரசுக்கு ஒதுக்குவதற்கான வாய்ப்புகளே அதிகம். இவையெல்லாமே தோற்கக்கூடிய தொகுதிகள் என்ற பட்டியலில் வருபவை.
கொடுப்பதோ 5, அதிலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தராமல் சுழற்சி முறை என்ற புதிய பார்முலாவின் கீழ் தோற்கும் தொகுதிகளை தங்கள் தலையில் திமுக கட்டுவதை தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஏற்றுக் கொண்டாலும் கூட டெல்லி தலைமை அதற்கு ஒப்புக் கொள்ளுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
அதே நேரம் ஐந்து மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தங்கள் கட்சிக்கு இந்தியா முழுவதும் செல்வாக்கு பெருகி வருகிறது என்பதை சுட்டிக் காட்டி சோனியாவும், ராகுலும் திமுகவிடம் 15 தொகுதிகள் வரை கேட்பார்கள் என்பது நிச்சயம். ஒருவேளை அவர்கள் ரொம்பவும் இறங்கி வந்தால் 2019 தேர்தல் போல தமிழகத்தில் மட்டும் ஒன்பது தொகுதிகளை ஒதுக்கி தரும்படி கண்டிப்பாக கேட்பார்கள்.
அதற்கு கீழாக ஒரு எம்பி சீட்டை குறைத்தால் கூட ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள். அதுவும் முந்தைய தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட அதே தொகுதிகளையே மீண்டும் தர வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படலாம்” அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!