காசு வாங்கிட்டு கள்ளச்சாராயத்தை அனுமதிக்கும் முதலமைச்சர் : காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
18 May 2023, 9:57 pm

கலால்துறை மற்றும் காவல்துறையிடம் கப்பம் பெற்றுக்கொண்டு கள்ளச்சாராயத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அனுமதித்து வருகிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றார். அப்போது, கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாயரட்சை பூஜையில் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டார். தொடர்ந்து போகர் சன்னதியில் தியானம் செய்தார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி ஏற்றம், வேலையின்மை உள்ளிட்ட காரணங்கள் மக்கள் பா.ஜ.க.வை தூக்கி எறிந்துவிட்டனர். ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் நலனுக்காக பல்வேறு வாக்குறுதிகள் கூறி பிரசாரம் செய்தோம். அதனால் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.

ஆனால் பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி பல இடங்களில் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின்போது ஊழலை ஒழிப்போம் என்றார். உண்மையில் இவர்கள் ஆட்சியில்தான் பல ஊழல்கள் நடைபெற்று உள்ளன. குறிப்பாக அதானிக்கு மோடி உதவியதன் மூலமே அவர் பல லட்சம் கோடிக்கு அதிபதி ஆகியுள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தால், ராகுல்காந்தியின் பதவியை பறித்து வெளியே அனுப்பி உள்ளனர்.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது வருத்தத்துக்கு உரியது. இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் அளித்துள்ளார். மேலும் சம்பவத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் இந்த கள்ளச்சாராயம் தமிழகத்துக்கு புதுச்சேரியில் இருந்துதான் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

இப்போது மட்டுமல்ல கடந்த 1 1/2 ஆண்டுகளாக புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுகிறது. ஆனால் இதுபற்றி புதுச்சேரி முதலமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களது ஆட்சி காலத்தில் 400 மது விற்பனை நிலையங்கள் இருந்தன. தற்போது 900 விற்பனை நிலையங்களாக உயர்ந்துவிட்டது. அதாவது குடித்துவிட்டு கும்மாளம் ஆடுகின்ற களமாக புதுச்சேரி மாநிலம் மாறியுள்ளது. 24 மணி நேரம் மதுக்கடைகள் திறந்துள்ளதால் கலாச்சாரம் சீரழிந்து உள்ளது.

எனவே பள்ளி, கோவில், குடியிருப்பு அருகே உள்ள மது விற்பனை நிலையங்களை அகற்ற வேண்டும் என தொடர் போராட்டி வருகிறோம். புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தப்படுவதால் தமிழக மக்கள் உயிரிழப்பது எங்களுக்கு வேதனையாக உள்ளது. ஆனால் புதுச்சேரி கலால்துறை மந்திரி இதை வேடிக்கை பார்த்து கொண்டு உள்ளார். மேலும் கலால்துறை, காவல்துறை அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் கலால்துறையில் பெரும் ஊழல் நடந்து வருகிறது. இங்கு கலால்துறை மூலம் முதல்-மந்திரிக்கு கப்பம் கட்டுகிறார்கள்.

எனவே இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். மேலும் கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும். தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கியது என்பது அவர்களின் குடும்ப பாதுகாப்புக்காக கொடுத்தது. தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியில் துணைநிலை கவர்னராக செயல்படவில்லை, முதல்-அமைச்சராக செயல்படுகிறார். அவர், முதல்-அமைச்சரின் அதிகாரத்தை கையில் எடுத்து புதுச்சேரியில் தங்கி உள்ளார். இவர் தெலுங்கானாவுக்கு செல்வதில்லை. காரணம் அங்குள்ள அதிகாரிகள் யாரும் அவரை மதிப்பதில்லை. ஆனால் புதுச்சேரியில் ஏமாளி முதலமைச்சர் தலையாட்டியாக உள்ளதால் இங்கு ஆதிக்கம் செலுத்துகிறார், இவ்வாறு அவர் பேசினார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 401

    0

    0