திமுகவின் இறுமாப்பால் வடக்கில் சரியும் காங்கிரஸ்… திடீரென திமுகவுக்கு போட்ட கண்டிசன்.. இசைவு கிடைக்குமா…?
Author: Babu Lakshmanan8 June 2022, 7:00 pm
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, இந்தி மொழிக்கு எதிராக அடிக்கடி மிகக் கடுமையாக விமர்சனம் செய்வதை அமைச்சர்களும், திமுக முன்னணி நிர்வாகிகளும் வாடிக்கையாகவே கொண்டுள்ளனர்.
பாஜகவை எதிர்ப்பதற்காக இப்படி திமுகவினர் பேசுவதாக கூறப்பட்டாலும் கூட அரசியல் ரீதியாக அகில இந்திய அளவில் திமுகவுக்கு அது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தி விவகாரம்
அதிலும் குறிப்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொண்டு பேசும்போது “இந்தி படித்தவர்கள், தமிழகத்தில் பானிபூரி விற்பனை செய்யும் காட்சிகளைத்தான் பார்க்கிறோம்” என்று கேலியாக கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதன் மூலம் “இந்தி படித்து விட்டால் மட்டும் வேலை கிடைக்காது. எங்களுக்கு தாய்மொழி தமிழும் ஆங்கிலமுமே போதும்” என்றும் அவர் கூறுகிறார்.
இதுபோலத்தான் கடந்த மாதம் 13-ம் தேதி கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ரவி முன்னிலையில் பேசிய, அமைச்சர் பொன்முடி, “இந்தி மொழி படித்தால் வேலை கிடைக்கும் என்கின்றனர். தமிழகத்தில் பானி பூரி விற்பவர்கள், இந்தி பேசுபவர்களாகத்தான் இருக்கின்றனர்” என்று பேசியதும் குறிப்பிடத்தக்கது.
அநாகரீகம்
இதற்கு, இந்தி பேசும் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுபற்றி அந்த மாநிலத்தவர்கள் வேதனையுடன் கூறும்போது, “50, 55 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடுமையான வறட்சியும், பஞ்சமும் நிலவிய போது பிழைப்புக்காக மாநிலத்தில் இருந்து வெளியேறிய சுமார் 4 லட்சம் மக்களுக்கு மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்கள்தான் ஆதரவு கரம் நீட்டின. கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கும் சில லட்சம் தமிழர்கள் இடம்பெயர்ந்தனர்.
மும்பை தாராவியில் குவிந்துள்ள தமிழர்கள் செய்யும் தொழிலை நாங்கள் ஒருபோதும் கிண்டல் செய்ததில்லை. ஆனால் கடந்த காலங்களை எல்லாம் அப்படியே மறந்துவிட்டு தமிழக அமைச்சர்கள் வட மாநில மக்களை இன்று கேலி செய்கின்றனர். இது அவர்கள் செய்யும் தொழிலை, இழிவு படுத்துவதுபோல் உள்ளது. செய்யும் தொழிலே தெய்வம் என்று நாம் போற்றும் பாரத தாய்த் திருநாட்டில் இது போன்ற பேச்சுகள் அநாகரிகமானவை” என்று வருத்தப்பட்டனர்.
உ.பி. முன்னாள் துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா, ‘திமுக அமைச்சரின் பேச்சு, வட மாநில மக்களை கேலி செய்வதாக உள்ளது’ என, வேதனை தெரிவித்தார்.
கொரோனா பரவல்
இந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், கொரோனா பரவல் குறித்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வடமாநில மாணவர்கள் பற்றி தெரிவித்த கருத்தும் தேசிய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அவர் பேசும்போது,”வட மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களால், தமிழக கல்லுாரிகளில் கொரோனா தொற்று பரவியது’ என்று தெரிவித்தார். இதற்கு உ.பி. அமைச்சர் ஜிதின் பிரசாதா உள்ளிட்டோர் உடனடியாக கண்டனம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, “வடமாநில மாணவர்கள்தான் தமிழகத்தில் கொரோனாவை பரப்புகிறார்கள் என்று நான் பேசியதாக தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் அப்படி சொல்லவில்லை” என்று அமைச்சர் சுப்பிரமணியன் அப்படியே ஜகா வாங்கினார்.
அடுத்த சர்ச்சை
இந்த நிலையில்தான், கடந்த 4-ம் தேதி, திராவிடர் கழகம் நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேசிய, திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்,
“மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற வளர்ச்சியடையாத மாநிலங்களில் இந்தி தான் தாய்மொழியாக உள்ளது. மேற்கு வங்காளம், கேரளா, தமிழகம், ஒடிசா, பஞ்சாப், கர்நாடகா, மாராட்டியம் குஜராத் போன்ற மாநிலங்கள் இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கவில்லை.
இந்த மாநிலங்கள் அனைத்தும் வளர்ந்த மாநிலங்களாக உள்ளன. இந்தி நமக்கு எந்த நன்மையும் செய்யாது, அது நம்மை ‘சூத்திரர்’ போன்ற அடிமைகளாக்கும். நாம் மனிதனாக இருக்க வேண்டுமானால் அதை எதிர்க்க வேண்டும்” என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
சிக்கலில் காங்கிரஸ்
இப்படி திமுக அமைச்சர்களும் முக்கிய நிர்வாகிகளும், தொடர்ந்து இந்தி மொழிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருவது, அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லவேண்டும்.
வட மாநிலங்களில் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்றவற்றில் சிக்கல் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே, உத்தரப் பிரதேசம், ஹரியானா போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் தன் செல்வாக்கை இழந்துள்ளது.
இப்போது, திமுகவின் இந்தி வெறுப்பு பேச்சுக்கு, வட மாநிலங்களில் காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டி கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. தேசிய அளவில் இந்த பிரச்சினையை காங்கிரஸ் பக்கம் பாஜக அப்படியே திருப்பி விடுவதால், அக்கட்சிக்கு மேலும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இதே நிலை 2024 தேர்தல் வரை நீடித்தால், தற்போது உள்ள எம்பிக்கள் அளவிற்கு கூட வெற்றி பெற முடியுமா? என்கிற சந்தேகம் காங்கிரசுக்கு எழுந்துள்ளது.
“திமுக தலைவர் ஸ்டாலினை பிரதமர் ஆக்குவதற்குத்தான் திமுகவினர் இப்படி தொடர்ந்து பேசி வருகிறார்கள். எனவே எதற்கும் காங்கிரஸ் எச்சரிக்கையாக இருப்பது நல்லது” என்று வெளி மாநில பாஜக தலைவர்கள் இப்போதே பேசத் தொடங்கி இருப்பது வேறு காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல், பிரியங்கா மூவரையும் சிந்திக்கத் தூண்டி இருப்பதாக பேசப்படுகிறது.
நிபந்தனை
மேலும் ராஜீவ் கொலையாளி பேரறிவாளன் விடுதலையை திமுகவினர் கொண்டாடி மகிழ்ந்ததையும், முதலமைச்சர் ஸ்டாலின் பேரறிவாளனை, முதுகில் தட்டிக்கொடுத்து ஆரத்தழுவியதுடன் அவருக்கு தேனீர் விருந்து கொடுத்ததையும் காங்கிரஸ் தலைமை அவ்வளவாக ரசிக்கவில்லை.
இதையும் தேசிய பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, இந்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டது.
இதனால் நெருக்கடிக்கு உள்ளான டெல்லி காங்கிரஸ் மேலிடம் தற்போது திமுக தலைமையிடம் ஒரு நிபந்தனையை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதில் “பாஜக எதிர்ப்பு என்ற பெயரில், இந்தியையும், வட மாநிலத்தவர்களையும் கிண்டலாக உங்கள் கட்சி தலைவர்கள் பேசுவதை அனுமதிக்கக் கூடாது.
இல்லையெனில், வட மாநிலங்களில் காங்கிரசுக்கு வரும் தேர்தல்களில் மேலும் பாதிப்பு ஏற்படலாம். அது மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வழிவகுத்துவிடக் கூடும். எனவே பாஜக ஆட்சியின் பாதிப்புகளை மட்டுமே மக்கள் முன்பாக திமுக பேசவேண்டும்” என்று கூறப்பட்டிருப்பதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு உள்ளது.
இதனால் காங்கிரஸ் மேலிடம், விதித்துள்ளதாக கூறப்படும் நிபந்தனையை, திமுக ஏற்றுக்கொள்ளுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது, என்னவோ நிஜம்!