மேலிட எச்சரிக்கையால் சலிப்பா..?தேர்தலுக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் ‘குட்-பை’… கைவிரித்த காங்கிரஸ் மேலிடம்…?

Author: Babu Lakshmanan
5 September 2022, 4:47 pm

சர்ச்சை

தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காமெடியாக அரசியல் பேசுகிறோம் என்று நினைத்து சில நேரங்களில் விபரீதம் ஏற்படும் விதமாக ஏதாவது பேசி விடுவது வழக்கம்.

இப்படித்தான் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா பற்றி அவர் பேசும்போது “தபேலா எடுத்து அடிப்பவன் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது. வறுமையில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் போது கம்யூனிசம் பேசுவதும், பணம் புகழ் வந்தபிறகு உயர்சாதி என நினைத்துக் கொள்வதும் என்ன நியாயம்?” என்று அவர் கேள்வி எழுப்பியது அனைத்து தரப்பினராலும் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

சட்டமேதை அம்பேத்கருடன் பிரதமர் மோடியை, ஒப்பிட்டு புத்தக அணிந்துரை ஒன்றில்
இளையராஜா எழுதி இருந்ததால் ஈவிகேஎஸ் இளங்கோவன் இப்படி கொதித்து எழுந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது கண்டன கணைகள் பாய்ந்ததால், நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்று அவர் யூ டேர்ன் அடித்து பதுங்கியும் கொண்டார்.

இனி போட்டியில்லை

இந்த நிலையில்தான், அவர் ஈரோட்டில் நடந்த காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பேசும்போது ஒரு திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

வரும் 7ம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை தொடங்குகிறார். அவருடைய வருகையால், தமிழக காங்கிரஸ் பரபரப்பாக செயல் பட்டு வருகிறது.

ராகுலின் நடைபயணத்திற்கு என 5 லட்சம் தொண்டர்களை திரட்டும் பணியில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஈரோட்டில் இரு நாட்களுக்கு முன் நடந்தது.

இதில் அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் பேசுகையில், “கொங்கு மண்டலத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக இருப்பதாகவே நம்புகிறேன். ஆனால் கொங்கு மண்டலம் என்றாலே எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும்தான் சொந்தம் என்பதுபோல் பேசுகிறார்கள்.

EVKS 01 updatenews360

தேர்தலில் 5 முறை போட்டியிட்டு 2 முறைதான் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஊரில் உள்ள அனைவரும் வெற்றி பெற்றபோது, திருஷ்டி பரிகாரமாக நான் மட்டும் தோல்வி அடைந்தேன். இனி வரும் தேர்தல்களில் நான் போட்டியிடப் போவதில்லை. நான் தோல்வியடைந்ததால் இப்படி கூறவில்லை.

இதற்கு முன் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் கூட தோல்வி அடைந்து இருக்கிறேன். அது எனக்கு பழக்கப்பட்ட ஒன்று. அதனால் அதை அவமானமாக கருத வேண்டியது இல்லை. தோல்வி என்பது எனக்கு பெரிய விஷயமே இல்லை.

காரணம் எனக்கென்று மக்களிடம் தனிப்பட்ட மரியாதை பெரியளவில் இல்லை. ஒரு சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே என் மீதான மரியாதைக்கு கிடைக்கும். எப்போதும் கட்சி சார்ந்துதான் எனக்கு வாக்குகள் கிடைக்கும். நான் தனியாக நின்றால் டெபாசிட்கூட பெறமுடியாது என்று தெரியும்.

2019 தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று தமிழகத்தில் முதலில் குரல் கொடுத்தவர் ஸ்டாலின்தான். திமுக கூட்டணி காரணமாக நமது கட்சியை சோ்ந்த 18 பேர் இன்று எம்எல்ஏவாக இருக்கிறார்கள். ஆனால் கடந்த தேர்தலின்போது திமுகவுடன் இணைந்து செயல்படக்கூடாது என்று நமது கட்சியை சேர்ந்தவர்களே மேலிடத்துக்கு குறுந்தகவல் அனுப்பினார்கள். இது ராகுலை பிரதமராக்கி விடக்கூடாது என்பதைபோல் உள்ளது. எனவே இதுபோன்ற செயல்பாடு கொங்கு மண்டலத்தில் இருக்கக்கூடாது.

தமிழக நிதி அமைச்சரை காலடிக்கு சமம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார். மேலும், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காண்பிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார். காமராஜர், ராஜாஜி, கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இருந்த தமிழகத்தில் அண்ணாமலை வால் ஆட்டினால் நறுக்கப்படும்” என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று அறிவித்திருப்பது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

மகனுக்கு முக்கியத்துவம்

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “74 வயதாகும் ஈவிகேஎஸ் இளங்கோவனால் முன்புபோல் இனி தீவிர அரசியலில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாது. தவிர கட்சிக்காக உழைத்தவர்களுக்கு, அவர் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோதும் சரி, மத்திய இணை அமைச்சராக இருந்த நேரத்திலும் சரி ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டது கிடையாது. அது மட்டுமல்ல தனக்கு கீழ் உள்ள கட்சி நிர்வாகிகள், தான் சொன்ன பேச்சையே கேட்டு நடக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாகவும் இருப்பார். கட்சிக்காரர்களிடம் அனுசரித்தே செல்லமாட்டார்.

அதனால்தான் பொதுமக்களிடமும், கட்சி தொண்டர்களிடமும் அவருக்கு எந்த செல்வாக்கும் இல்லை. ஐந்து முறை தேர்தலில் போட்டியிட்டு அதில் இரண்டு தடவை மட்டுமே அவர் வெற்றி பெற்றதற்கு இதுதான் முக்கிய காரணம்.

தவிர தனது புதல்வரான திருமகன் ஈவெராவுக்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி ஈரோடு கிழக்கு தொகுதி
எம்எல்ஏ சீட்டை வாங்கி கொடுத்து அவரை வெற்றி பெறவும் வைத்து விட்டார்.
மாநில காங்கிரசில் பொதுச் செயலாளர் பதவியையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

அதனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் இனி தேர்தலில் தனது மகனைத்தான் மேலும் மேலும் வளர்த்துவிட முயற்சி செய்வார். அதனால் அந்த தொகுதியில் போட்டியிட விரும்பும் எங்களைப் போன்ற காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. நான் இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அவர் கூறுவதால் என் மகனுக்கு அந்த வாய்ப்பை கொடுங்கள் என்று டெல்லி மேலிடத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் வாய்ப்புகள்தான் அதிகம்” என்று அந்த நிர்வாகிகள் மனம் குமுறுகின்றனர்.

ஆனால் அரசியல் விமர்சகர்களின் பார்வையோ வேறு விதமாக உள்ளது.

திமுக புகழ்பாடும் தலைவர்கள்

“தமிழகத்தில் காங்கிரசை வளர்க்கவேண்டும் என்கிற எண்ணம் அக்கட்சியின் மூத்த தலைவர்களிடம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதுவும் 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அது அறவே இல்லாமல் போய்விட்டது” என்று அவர்கள் கூறுகின்றனர்.

“நாட்டிலேயே அதிகமான கோஷ்டிகள் தமிழக காங்கிரசில்தான் இருக்கிறது.
ப.சிதம்பரம், கே எஸ் அழகிரி, பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், மாணிக்கம் தாகூர், டாக்டர் செல்லக்குமார் என்று 10 கோஷ்டிகள் வரை உள்ளது. இதுதவிர தமிழக மகளிர் காங்கிரசில் ஜோதிமணி எம்பி விஜயதரணி எம்எல்ஏ என்று ஐந்து கோஷ்டிகள் செயல்பட்டு வருகின்றன.

எனினும் மகளிர் கோஷ்டிகளிடம் தற்போது ஆளும் கட்சியாக உள்ள திமுகவை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் போக்கு தென்படவில்லை. ஆனால் ஆடவர் பிரிவு அதற்கு நேர்மாறாக உள்ளது.

இப்படி திமுகவிடம் முதன் முதலில் சரண் அடைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்தான். அவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியாவிற்கே விடிவெள்ளியாக திகழ்கிறார் என்று கடந்த ஆண்டு புகழ்ந்து தள்ளினார். அதாவது ராகுல், சோனியாவை விட ஸ்டாலின் மிகச் சிறந்தவர் என்பதுபோல இந்த கருத்து அமைந்திருந்தது.

இதை காங்கிரஸ் மேலிடம் கண்டிக்கவும் இல்லை. கண்டுகொள்ளவும் இல்லை.
அதனால்தான் தற்போது, கே எஸ் அழகிரி, திருநாவுக்கரசர், தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் போன்றோர் திமுக தலைவர்களை விட திமுக அரசையும் முதலமைச்சர் ஸ்டாலினையும் புகழ்ந்து பேசுவதில் போட்டி போடுகிறார்கள். அவருடைய அரசின் ஒவ்வொரு செயலையும் பாராட்டுகின்றனர்.

இது, திமுகவுடன் 2024, 2026 தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்போது திமுக குறைந்த இடங்களை ஒதுக்கினாலும் கூட தங்களின் ஆதரவாளர்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் சில இடங்களை கேட்டுப் பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்று அவர்கள் கணக்குப் போடுகின்றனர். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினோ மத்தியில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால், தான் விரும்பும் ஒரு தலைவர்தான் பிரதமராக வேண்டும் என்று நினைப்பதாக சொல்கிறார்கள்.

அப்படியிருக்கும்போது, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கும் ஜால்ரா சத்தம் தேர்தல் நேரத்தில் ஸ்டாலினிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்பதே உண்மை. அதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லை.

வாய்ப்பு கிடையாது

ஆனால் தற்போது இதை ராகுல் நன்றாகவே உணர்ந்து கொண்டுள்ளார். திமுக அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைக்காமல், மிகுந்த பணிவோடு மூத்த தலைவர்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

தைரியமாக அவர்களால் எதுவும் கூற முடிவதில்லை. பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை நிலைப்பாட்டிற்காக இப்படி திமுகவிடம் அடங்கிப் போய் விடக்கூடாது என்று ராகுல் கருதுகிறார். இதனால் தமிழகத்தில் காங்கிரசை வளர்ப்பதும், தேர்தலின்போது அதிக சீட்டுகளை பேரம் பேசி வாங்குவதும் மிகக் கடினம் என்பது அவருக்கு தெரியும்.

Rahul_Sonia_UpdateNews360

அதேநேரம், இந்த விஷயத்தில் ராகுலை சமாதானப்படுத்தி விட முடியும் என்று தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால் திமுகவுடன் கூட்டணி அமைந்தாலும் கூட, திமுக அரசுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துகளை தெரிவிக்கும் அந்த தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ராகுல் தரமாட்டார் என்ற பேச்சும் காங்கிரஸ் வட்டாரத்தில் உள்ளது.

அந்த விரக்தியில்தான் ஈவிகேஎஸ் இளங்கோவன் இனி நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து இருக்கிறார், என்றே கருதத் தோன்றுகிறது.

இதேபோல் கே எஸ் அழகிரி, தங்கபாலு, திருநாவுக்கரசர் போன்றோருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அவர்கள் இனி பொது வெளியில் எப்படி பேசுகிறார்கள் என்பதை வைத்து இதை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் பல்வேறு காரணங்களை அடுக்குகின்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 526

    0

    0