எம்பி சீட்டுக்காக திமுகவுடன் மல்லுக்கட்டும் காங்கிரஸ்… ஒதுக்கித் தர திமுக சம்மதிக்குமா…? திடீரென மாறிய அரசியல் களம்..!
Author: Babu Lakshmanan17 May 2023, 10:26 am
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருப்பது காங்கிரஸ் மேலிடத்திற்கு புதுத்தெம்பை கொடுத்திருக்கிறது. அதேநேரம் 18 எதிர்க்கட்சிகளும் மெல்ல மெல்ல காங்கிரசை நோக்கி திரும்புவதையும் காண முடிகிறது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த ஆண்டு இறுதிவரை 2024 தேர்தலில் காங்கிரசுடன் எதிர்க் கட்சிகளின் கூட்டணிக்கு சாத்தியமே இல்லை என்றுதான் கூறிவந்தார்.
பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 18 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தால் 2024 தேர்தலில் பாஜகவை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று சற்று குரலை மாற்றினார். இதேபோல் சந்திரசேகர ராவ், ஸ்டாலின், நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ் போன்றோரும் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் கர்நாடக தேர்தல் முடிவுகளுக்கு பின்பு இவர்கள் யாருமே தங்களது நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்க முடியாத நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மம்தா பானர்ஜி எல்லோரையும் முந்திக் கொண்டு, ஒரு படி கீழே இறங்கி வந்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
தற்போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு அவர் புதிய வியூகம் ஒன்றை வகுத்தும் இருக்கிறார்.
இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறும்போது, “திரிணாமுல் காங்கிரசின் கணக்கீட்டின்படி காங்கிரஸ் 200 இடங்களில் வலுவாக உள்ளது. காங்கிரஸ் எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் வலுவாக இருக்கிறதோ, அவர்கள் அங்கே போராட வேண்டும். நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்போம். இருப்பினும், மற்ற அரசியல் கட்சிகளுக்கு காங்கிரசும் இதேபோன்ற ஆதரவைக் காட்ட வேண்டும். நீங்கள் ஏதாவது நல்லதை அடைய விரும்பினால், சில பகுதிகளில் தியாகம் செய்துதான் ஆக வேண்டும்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அந்தந்த மாநிலத்தில் வலுவாக இருக்கும் கட்சியை ஆதரிக்க வேண்டும். எந்தப் பிராந்தியத்திலும் யார் வலுவாக இருந்தாலும் ஆதரிக்கப்பட வேண்டும். உதாரணமாக, உபியில் சமாஜ்வாடி, டெல்லியில் ஆம் ஆத்மி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி பிறரால் ஆதரிக்கப்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
இந்த யோசனையை காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக்கொள்ளும் என்றே தெரிகிறது. மம்தாவின் வியூகத்தின்படி பார்த்தால் நாடு முழுவதும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 250க்கும் உள்ளாகத்தான் இருக்கும்.
ஆனாலும் தேர்தல் வெற்றி ஒன்றையே காங்கிரஸ் இலக்காக வைத்திருப்பதால் எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு டெல்லி மேலிடம் வந்துவிட்டது.
அதேநேரம் தமிழகம், மராட்டியம், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளிடம் 50 தொகுதிகள் வரை கூடுதலாக கேட்டு பெறவும் காங்கிரஸ் திட்டமிட்டு இருக்கிறது.
இதன் மூலம் வெற்றி வாய்ப்புள்ள 300 தொகுதிகளில் போட்டியிட்டால் கூட போதும் 272 எம்பிக்கள் என்ற இலக்கை எளிதில் கடந்து தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்துவிட முடியும் என்று காங்கிரஸ் உறுதியாக நம்புகிறது.
ஒருவேளை 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 206 தொகுதிகள் கிடைத்தால் கூட போதும் திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சிறு சிறு மாநில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து விடலாம் என்றும் காங்கிரஸ் கணக்கு போடுகிறது.
இப்படி சில மாநில கட்சிகளிடம் முன்பை விட அதிக எம் பி சீட்டுகள் கேட்டுப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் நினைப்பதால், தமிழகத்தை பொறுத்தவரை 2009
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஒதுக்கிய 15 தொகுதிகளை மீண்டும் கேட்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
இந்த எண்ணமெல்லாம், கர்நாடக தேர்தல் வெற்றிக்கு பிறகு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜுன கார்கே, கபில் சிபல், ப. சிதம்பரம் போன்றவர்களிடம் ஏற்பட்ட ஒன்றாகும்.
ஆனால் திமுகவோ கடந்த ஒரு வருடமாக தேசிய அரசியலை முன்னெடுத்து வருவதால் குறைந்தபட்சம் 30 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறுவதில் தீவிரம் காட்டுகிறது. இதனால் காங்கிரசுக்கு 2019 தேர்தல் போல ஒன்பது தொகுதிகள் தமிழகத்தில் ஒதுக்கப்படாது, அது 5 தொகுதிகளாக குறைக்கப்படலாம் என்று கடந்த சில மாதங்களாகவே அரசியல் களத்தில் பேசப்பட்டு வருகிறது.
எனினும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்பு திமுக தலைவர் ஸ்டாலின் மனதில் காங்கிரசுக்கு கூடுதல் எம்பி தொகுதிகளை ஒதுக்கும் எண்ணம் உருவாகி இருக்கிறது என்கிறார்கள்.
அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என்றும் மீதமுள்ள 36 தொகுதிகளில் திமுக 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும் போட்டியிட ஸ்டாலின் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. தவிர மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்போது துணை பிரதமர் பதவி திமுகவுக்கு வழங்கப்படவேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்படலாம்.
என்றபோதிலும் காங்கிரஸ் மேலிடம் தமிழகத்தில் தங்களுக்கு திமுக தலைமை 15 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறது. மாநில தலைவராக கே எஸ் அழகிரி இருக்கும் வரை இது நடக்காது என்பதை காங்கிரஸ் உணர்ந்து கொண்டும் உள்ளது.
இதனால் அவருடைய தலைவர் பதவி எந்த நேரமும் பறிக்கப்படலாம். அவருக்கு பதிலாக, கர்நாடக தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்காக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட 5 முக்கிய வாக்குறுதிகளை தயாரித்துக் கொடுத்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சசிகாந்த் செந்திலை மாநில காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுனா கார்கே விரைவில் நியமிப்பார் என்று கூறப்படுகிறது.
“கே எஸ் அழகிரி 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக ஒதுக்கிய 9 தொகுதிகளை மறுபேச்சு இன்றி அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டார். 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் அவரால் அறிவாலயத்திடம் கறாராக பேரம் பேச முடியவில்லை.
காங்கிரஸ் 42 தொகுதிகளை கேட்டது. ஆனால் திமுகவோ முதலில் 20 தொகுதிகள்தான் தர முன் வந்தது. கே எஸ் அழகிரி கண்ணீர் விட்டு கதறி அழுதுதான் திமுகவிடம்
25 தொகுதிகளை பெற்றார். அதனால்தான் நான்காண்டுகளுக்கும் மேலாக தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து வரும் அவரை தூக்கியடிக்க டெல்லி மேலிடம் முடிவெடுத்து விட்டது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“தமிழக காங்கிரஸில் தற்போது ஏழு கோஷ்டிகள் உள்ளன. இவர்கள் அத்தனை பேருமே திமுக அனுதாபிகளாகவே மாறிவிட்டனர். யாரும் காங்கிரசை வளர்ப்பது போல தெரியவில்லை. நிலைமை இப்படியே போனால் திமுக தங்களது சின்னத்தில் போட்டியிடும்படி தமிழக காங்கிரசை கேட்டுக் கொண்டாலும் கூட அதற்கும் சரி என்று கூறிவிடும் மனப்போக்குதான் இந்த தலைவர்களிடம் காணப்படுகிறது. இவர்களின் ஆதரவாளர்களில் ஒருவருக்கு காங்கிரஸ் தலைவர் பதவியை கொடுத்தால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிடம் பேரம் பேசி 15 தொகுதிகளை வாங்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
இதனால்தான் சசிகாந்த் செந்திலை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் நியமிக்க டெல்லி மேலிடம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
2009-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவரான சசிகாந்த் செந்தில், காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். இன்ஜினியர் படிப்பையும் முடித்தவர். தன் பணிக்காலத்தில் கர்நாடகாவில் சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியும் இருக்கிறார்.
2019-ல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் சேர்ந்தார்.
அவரை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிப்பதால் காங்கிரசுக்கு இரண்டு பெரிய தலைவலிகள் நீங்கும். ஏனென்றால் சசிகாந்த் செந்தில் கோஷ்டி சேர்க்க மாட்டார். திமுகவிடம் மிக நெருங்கியும் சென்று விடமாட்டார். அதனால் திமுகவிடம் எப்படியும்
15 எம் பி சீட்டுகளை வாங்கி கொடுத்து விடுவார் என்று மேலிட காங்கிரஸ் நம்புகிறது”என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதெல்லாம் நடக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!