தமிழக காங்கிரஸில் நடக்கும் மர்மம்…? கேஎஸ் அழகிரிக்கு எதிராக EVKS இளங்கோவன் வாய்ஸ் ; வெடித்தது உள்கட்சி மோதல்!!
Author: Babu Lakshmanan21 November 2023, 11:44 am
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தனக்கு தெரியவில்லை என்று கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த ஈவிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் தலைவர் மர்மமான கூட்டத்தை கூட்டுவது போல காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டுவதாக விமர்சனம் செய்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலான ஆய்வு பணிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை, “ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தரம் குறித்தும் காலதாமதம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் கலவை தரம் சந்தேகமாக இருப்பதால் சிமெண்ட் கலவையை தரம் குறித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட ஆட்சியருக்கு விருதுகள் வழங்க அரசுக்கு பொதுக்கணக்கு குழு பரிந்துரை செய்துள்ளது. பொன்முடி ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தை சிறப்பாக முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். இதனை தமிழகத்தில் உள்ள ஊராட்சியில் செயல்படுத்த பொதுக்கணக்கு குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்தும், 2017ம் ஆண்டு மாதம் தோறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய அரசாணையை வெளியிடப்பட்டது. இதனை முறையாக மாதம்தோறும் ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் முன்னிலையில் ஆய்வுக்குழு அமைக்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனை பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு தொகுதி எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது :- தமிழகத்தில் உள்ள ஆளுநருக்கு அடிப்படையில் சில பிரச்சனைகள் உள்ளது அவருக்கு மனநிலை சரியில்லை என்று நினைக்கிறேன். ஆளுநர் நடவடிக்கையில் கடந்த நான்கு நாட்களில் பல மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதலில் அவர் மனிதராக மாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. கூட்டம் என்றால் என்னை போன்றவர்களுக்கு அழைப்பு வரும் ஏன்…? என்று தெரியவில்லை. மர்மமான கூட்டமோ என்று தெரியவில்லை. பத்திரிகை வாயிலாக தான் சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் நடத்தப்படுவதாக தெரிந்து கொண்டேன். மூத்த தலைவர்கள் புறக்கணிப்பு என்று சொல்லவில்லை, என்னை பொறுத்தவரை என்னை முதலில் மூத்த தலைவர் என்று சொன்னார்கள். பிறகு முன்னாள் தலைவர்கள் என்று சொன்ன நிலையில், தற்போது முடிந்து போன தலைவர்கள் என்று சொல்கிறார்கள்.
செந்தில் பாலாஜி தலையில் இருந்து கால் வரை உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், முதலில் தகுந்த சிகிச்சை தரவேண்டும். ஐந்து மாநில இடைத்தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி பஞ்ச பாண்டவர்கள் போல் வெற்றி பெறுவோம், என கூறினார்.