பேசாம, கட்சிய கலைச்சிட்டு காங்கிரஸில் சேருங்க; ரஜினியை மறைமுகமாக தாக்கி, கமலுக்கு அழைப்பு விடுத்த தமிழக காங்கிரஸ் நிர்வாகி!!
Author: Babu Lakshmanan19 December 2022, 2:22 pm
கன்னியாகுமரி ; மக்கள் நீதி மய்யம் கட்சியை கலைத்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய பிரிவு செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் திரைப்பட உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கலைப் பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வரும் நடிகர் கமல்ஹாசன் பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ஊழல் எதிர்ப்பு நேர்மையான அரசாங்கம் மதச்சார்பற்ற கொள்கை மனித நேயம் ஆகியவற்றை மக்களிடம் வலியுறுத்தி அரசியல் பயணத்தில் பயணித்து வரும் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தல் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றை தனியாக சந்தித்து மக்கள் மன்றத்தில் நின்றவர்.
இந்த கொள்கைகளை வலியுறுத்தி தான் ஆண்டாண்டு காலமாக காங்கிரஸ் கட்சி இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டது. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இந்தியாவின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பல்வேறு மதங்களை பின்பற்றி வந்தாலும் மதச்சார்பின்மையை கடைப்பிடித்து இன்று உலக அரங்கில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது என்றால், அதற்கு காங்கிரஸ் கட்சி அமைத்துக் கொடுத்த அடித்தளமே காரணம் என்பதை அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொண்டுள்ளார்கள்.
தொடர்ந்து இந்தியா உலக அரங்கில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றால், அந்த அடித்தளத்தை பின்பற்றி இந்தியாவில் இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமைந்து வரும் இளம் தலைவர் ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் நாடு முழுக்க உள்ள நல்ல உள்ளம் படைத்த கட்சிகளின் எண்ணமாக உள்ளது என்பதை நடிகர் கமல்ஹாசனும் புரிந்து கொண்டு உள்ளார்.
இதை அவரது சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள் தமிழக மக்களுக்கு தெளிவாக புரிய வைத்து வருகிறது. இந்த நிலையில், தான் இந்தியாவில் தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடந்த அக்டோபர் ஏழாம் தேதி முதல் தேச ஒற்றுமை யாத்திரையை தொடங்கி நூறு நாட்களை பல்வேறு மாநிலங்களில் வழியாக நடை பயணம் வழியாக, கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் இளம் தலைவர் ராகுல் காந்தியின் நடை பயணத்தில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பது பெருமைக்குரிய விஷயம். இது அனைவர் மனதிலும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமையாத்திரையில் எழுச்சியில் மக்கள் பங்கேற்று வருவதையும் நடை பயணம் நாளுக்கு நாள் எழுச்சி பெற்று வருவதையும் அனைவரும் பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனும் ராகுல் காந்தியுடன் இணைந்து நடைபயணம் மேற்கொள்ள இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்க்கு பிறகு திரை உலகத்திலிருந்து கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்தவர்கள் யாரும் இதுவரை இல்லை. இதை அனுபவமாக களத்தில் இறங்கி உணர்ந்த நடிகர்கள் பலர் உண்டு.சில நடிகர்கள் இப்பம் வாரேன் அப்பம் வாரேன் என்று கூறி பின்பு ஓடி ஒளிந்ததும் உண்டு.
நடிகர் கமல்ஹாசன் நன்கு இதை உணர்ந்து மதச்சார்பின்மையை கருத்தில் கொண்டு இந்தியாவின் ஒற்றுமைக்கும் மதச்சார்பின்மை கொள்கை வெற்றி பெறவும், நடிகர் கமல்ஹாசன் நடத்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும். திரை உலகில் பல புதுமைகளை பதித்து மாற்றங்களை ஏற்படுத்திய நடிகர் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து இந்தியாவிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கேட்டு கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.