கச்சத்தீவில் காங். துரோகம்! வைகோவால் கலக்கத்தில் ‘இண்டி’ கூட்டணி!
Author: Udayachandran RadhaKrishnan4 April 2024, 9:10 pm
கச்சத்தீவில் காங். துரோகம்! வைகோவால் கலக்கத்தில் ‘இண்டி’ கூட்டணி!
இந்தியாவின் வசம் இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து நாடான இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட விவகாரம் தற்போது மீண்டும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் தமிழக கடற்பகுதியை ஒட்டி கச்சத்தீவு இருப்பதால் அப்பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களை கைது செய்வதுடன் இலங்கை சிறைகளில் அடைக்கப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. அதன் பிறகு மத்திய அரசு தலையிட்டு தமிழக மீனவர்களை விடுவிப்பதும் நீண்ட தொடர்கதையாக உள்ளது.
இதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் போதெல்லாம் கச்சத்தீவு பற்றிய முந்தைய வரலாறு விவாதத்திற்குரிய ஒன்றாக விஸ்வரூபம் எடுத்து விடுகிறது.
இந்த நிலையில்தான் 1974-ல் அப்போதைய இந்திரா காந்தி அரசு பாக் ஜலசந்தியில் உள்ள கச்சத் தீவு பகுதியை அண்டை நாடான இலங்கையிடம் ஒப்படைக்க முடிவு செய்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அன்றைய காங்கிரஸ் அரசு மீதும், தமிழகத்தை ஆட்சி செய்த திமுக அரசின் மீதும் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான சில ஆவணங்களையும் வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தினார்.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தனது X வலைத்தள பக்கத்தில் ‘காங்கிரசை எப்போதும் நம்ப முடியாது’ என்று காட்டமாக குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசும்போது, “கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததால், அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இத்தகைய நிலை உருவானதற்கு அன்று மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும், தமிழகத்தை ஆட்சி செய்த திமுகவும்தான் காரணம்” என்றும் விமர்சித்தார்.
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலினும் உடனடியாக பதில் அளித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில்” பத்தாண்டு காலமாக கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு பிரதமர் மோடி தேர்தலுக்காக மீனவர்கள் மீது பாச நாடகத்தை அரங்கேற்றுகிறார்” என்று கூறியிருந்தார்.
இன்னொரு பக்கம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “2008ல் கச்சத்தீவை மீட்டெடுக்க உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். 2011ம் ஆண்டு வருவாய்த் துறை மூலம் ஜெயலலிதாவின் வழக்கு இணைக்கப்பட்டது.
2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார். அதை மீட்டு இந்தியாவுடன் இணைக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு மத்திய பாஜக அரசு செவி சாய்க்கவில்லை. அப்படி இருக்கும் போது கச்சத் தீவு பற்றி பேச அண்ணாமலைக்கும், பாஜகவுக்கும் என்ன தகுதி இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பி பரபரப்பு காட்டினார்.
தேர்தல் நேரம் என்பதால் கச்சத்தீவு விவகாரம் நாளிதழ்கள் டிவி செய்தி சேனல்கள், சமூக ஊடகங்கள் என அனைத்திலும் ஒரு விவாத பொருளாகவும் மாறியது. பின்னர் மெல்ல மெல்ல இந்த விவகாரம் சற்று அடங்கியது.
ஆனால் கச்சத்தீவு தொடர்பாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அண்மையில் தெரிவித்த ஒரு கருத்தால் அது மீண்டும் காட்டுத்தீ போல பற்றிக் கொண்டு எரியத் தொடங்கி உள்ளது.
தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரச்சாரம் செய்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம்
கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் மீது பாஜக குற்றம்சாட்டுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “அந்த நேரத்தில் அனைத்து விதங்களிலும் காங்கிரஸ் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்து விட்டது” என்று கூறினார்.
மேலும் “இந்த 10 ஆண்டுகள் மோடிக்கு சோதனையான காலம். அவர் ஒரு துரோகி. தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தார். இந்தியாவுக்கு மோடி துரோகம் செய்தார்” என்றும் வைகோ கொந்தளித்தார்.
பிரதமர் மோடியை வைகோ இப்படி கடுமையாக விமர்சிப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தபோது வைகோ மோடியை வானளாவ புகழ்ந்து தள்ளினார். ஆனால் 2017ம் ஆண்டு திமுக கூட்டணியில் சேர்ந்தது முதலே அவர் மோடியை தடித்த வார்த்தைகளால் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இது கண்டனத்திற்குரியது என்றாலும் கூட வைகோவின் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் மோடிக்கோ, பாஜகவுக்கோ இல்லை.
ஆனால் கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடியை தாக்குவதாக நினைத்து இண்டியா கூட்டணியில் பிரதான கட்சியாக உள்ள காங்கிரசை அவர் கோர்த்து விட்டிருப்பதுதான் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். மிகச் சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்து போன விவகாரத்தில் காங்கிரஸ் மீது வைகோ பழி சுமத்துவதை சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே என யாருமே விரும்பவில்லை. ஏனென்றால் கச்சத்தீவு விவகாரத்தில் அனைத்து விதங்களிலும் அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்று வைகோ கூறுவது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை பகிரங்கமாக கண்டிப்பது போல் இருக்கிறது என்று காங்கிரஸ் மேலிடம் அவர் மீது உச்சபட்ச எரிச்சலில் உள்ளது.
இத்தனைக்கும் அன்றைய மத்திய காங்கிரஸ் அரசுடன் தமிழக முதலமைச்சர் கருணாநிதி இணக்கமான நட்புடன்தான் இருந்தார். அப்போது திமுகவில் துடிப்பான இளைஞராக இருந்த வைகோவுக்கு இந்த விவகாரம் நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும் கூட காங்கிரஸ் மீது அவர் வன்மத்தை கக்குகிறார். இது தேவையற்ற ஒன்று என டெல்லி காங்கிரஸ் கொதிக்கிறது.
“கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் மீது வைகோ குற்றம் சாட்டுவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அவருடைய மகன் துரை வைகோவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உண்டு” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கே என் நேரு முன்பாக துரை வைகோ பேசும்போது, “கட்சிக்காக மட்டுமே நான் தேர்தலில் நிற்கிறேன். அப்பா 30 வருடம் உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்துபோய் விட்டார். அவர் ஒரு சகாப்தம். செத்தாலும் எங்களுக்கு தனி சின்னம்தான், நான் சுயமரியாதைக்காரன். வேறு எந்த சின்னத்திலும் போட்டியிட மாட்டோம்” என்று ஆவேசமாக பேசி திமுக நிர்வாகிகளுக்கு பலத்த அதிர்ச்சி அளித்தார்.
இதனால் கடுப்பான திமுக தலைமை வைகோவை கூப்பிட்டு உங்கள் மகனை கொஞ்சம் மடக்கி வாசிக்க சொல்லுங்கள் என்று எச்சரித்த பிறகு அமைச்சர் கே என் நேருவிடம் துரை வைகோ மன்னிப்பு கேட்டுக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் திமுக நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
ஆனால் இப்போது வைகோ காங்கிரஸ் மீது ஒரு குண்டை தூக்கி போட்டு இருப்பதால் திருச்சி தொகுதியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க அவருடன் செல்வார்களா? அவருக்கு ஓட்டு போடுவார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் திருச்சி தொகுதியில் காங்கிரசுக்கு கணிசமான வாக்கு வங்கியும் உள்ளது. ஆறு முறை காங்கிரஸ் வேட்பாளர்கள் இங்கு வெற்றி பெற்றும் இருக்கின்றனர்.
வைகோ எப்போதும் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடியவர். 2009 மே மாதம் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உச்சகட்ட போர் நடந்தபோது அந்நாட்டு ராணுவத்தால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ராஜபக்சே அரசுக்கு மத்திய காங்கிரஸ் அரசு ரகசியமாக ஆயுத உதவி செய்ததும் முக்கிய காரணம் என்று வைகோ குற்றம் சாட்டினார்.
இப்போது இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்த விவகாரத்திலும் காங்கிரசுக்கு எதிரான தனது கண்டனத்தை வைகோ பதிவு செய்து இருக்கிறார். இது இண்டியா கூட்டணியில் மதிமுக மீது தவறான எண்ணத்தையே உருவாக்கும்.
கூட்டணிக் கட்சிகளுக்குள் பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும் அதை வைகோ இப்படி வெளிப்படையாக போட்டு உடைத்து இருக்கக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு இண்டியா கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸ் மீது வைகோ கொளுத்தி போட்ட சரவெடியால் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அவருடைய மகன் வெற்றி பெறுவாரா? என்பதே கேள்விக் குறியாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்!