செந்தில் பாலாஜிக்கு செக்…? ஜோதிமணி அதிரடி ஆட்டம்…! கரூரில் காத்திருக்கும் சவால்கள்…!

Author: Babu Lakshmanan
19 March 2024, 9:21 pm

திமுக கூட்டணியில் கரூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா? என்ற கேள்வி சில நாட்களுக்கு முன்பு வரை இரு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் இடையேயும் ஒரு விவாதப் பொருளாகவே இருந்து வந்தது.

ஏனென்றால், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய் கையூட்டு பெற்றதாக கூறப்படும் வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், கரூர் நாடாளுமன்ற தொகுதி எம்பி ஜோதிமணிக்கும் ஆகவே ஆகாது என்ற நிலை இருப்பதுதான், இதற்கு காரணம்.

2019 தேர்தலில் ஜோதிமணியின் வெற்றிக்காக செந்தில் பாலாஜி அவருடன் இணைந்து தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதற்கு கைமாறாக
2021 தமிழக தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜிக்காக ஜோதிமணி அவருடன் இரு சக்கர வாகனத்தில் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒன்றாக பயணித்து வாக்காளர்களிடம் ஓட்டு வேட்டையாடினார்.

அதேநேரம் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று ஜோதிமணி சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவர் டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து திமுகவுக்கு தாவியவர் என்பதால் தமிழக அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைக்காது என்றே நினைத்தார்.

ஆனால் ஜோதிமணி எதிர்பார்த்ததற்கு மாறாக முக்கியத் துறைகளான மதுவிலக்கு மற்றும் மின்சார இலாகா செந்தில் பாலாஜிக்கு கிடைத்துவிட திமுகவில் குறுகிய காலத்திலேயே திடீரென்று உயர்ந்த இடத்தை அவர் பிடித்து விட்டார்.

இதன் பிறகு கரூர் மாவட்டத்தில் நடக்கும் மாநில அரசு விழாக்களில் செந்தில் பாலாஜிக்கு மட்டுமே மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தொகுதி எம்பி என்கிற முறையில் ஜோதி மணியை பெயரளவிற்கு கூட திமுகவினர் யாரும் அழைப்பதில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அவர் கண்டுகொள்ளப்படவில்லை. செந்தில் பாலாஜி உள்பட அவருடைய ஆதரவாளர்கள் அனைவருமே தொடர்ந்து புறக்கணித்தனர்.

திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் இப்படி நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களாகவே ஜோதிமணி மீண்டும் போட்டியிடும் விதமாக கரூர் நாடாளுமன்ற தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கி விடக்கூடாது என்று செந்தில் பாலாஜியும் கரூரில் உள்ள அவருடைய தீவிர ஆதரவாளர்களும் திமுக தலைமைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதன் பின்னரும் கரூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு ஜோதிமணி போட்டியிட்டால் மாவட்ட திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அவருக்காக தேர்தல் பணியாற்றாமல் ஒதுங்கிக் கொள்ளும் சூழல் உருவாகும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

ஒருவேளை ஜோதிமணி காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் நெருங்கிய நட்புறவு வைத்திருப்பதால் கண்டிப்பாக அவருக்கு எம்பி சீட் வழங்க திமுக விரும்பினால் ஈரோடு தொகுதியை காங்கிரஸுக்கு கொடுக்கலாம் என்றும் சிறையில் இருந்தவாறே செந்தில் பாலாஜி அறிவாலயத்திடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அதேநேரம் ஜோதிமணியோ கரூர் தொகுதியில் நான் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிடுவேன். கடந்த தேர்தலில் கிடைத்தளவிற்கு வாக்குகளைப் பெற்று மறுபடியும் நாடாளுமன்றம் செல்வேன் என்று பொதுவெளியில் தொடர்ந்து உறுதிபட கூறி வந்தார்.

இதனால் செந்தில் பாலாஜியின் எண்ணம் நிறைவேறுமா? அல்லது ஜோதிமணி, தான் சொன்னதை நிரூபித்து காட்டுவாரா என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்தது. இதில் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை செந்தில் பாலாஜியின் கையே ஓங்கி இருந்தது. இதனால் கரூர் தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படாது என்றே அனைவராலும் கருதப்பட்டது.

ஆனால் மார்ச் 17ம் தேதி இரவு மும்பையில் நிறைவடைந்த ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை பொதுக் கூட்டத்தில் இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலினும் கலந்துகொண்ட பிறகு கரூர் தொகுதி விவகாரம் அப்படியே தலைகீழாக மாறிப் போனது.

அக் கூட்டத்தில் தன்னை சந்தித்த ஸ்டாலினிடம் ராகுல் நேரடியாகவே கரூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் தொகுதிகளை காங்கிரசுக்கு நீங்கள் ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதை ஸ்டாலினும் அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டார். இதன் பிறகுதான் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் ஒன்பது தொகுதிகளின் பெயர்களும் மார்ச் 18 ம் தேதி இரு கட்சிகளின் தரப்பிலும் ஒரு மனதாக வெளியிடப்பட்டது.

இதன் பின்னணியில் இன்னொரு நிகழ்வும் இருந்ததாக கூறப்படுகிறது. அது இதுதான்.

தமிழக காங்கிரஸிற்கான டெல்லி மேலிட பொறுப்பாளர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் கடந்த வாரம் தற்போதைய காங்கிரஸ் எம்பிக்களான எட்டு பேரிடமும் ஜூம் மீட்டிங் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி கருத்து கேட்டுள்ளனர்.

அப்போது ஜோதிமணி தனக்கு கரூர் தொகுதியை திமுகவிடமிருந்து பெற்றுத் தரவேண்டும். ஏனென்றால் கரூர் தொகுதியின் வளர்ச்சிக்காக எனது சிறு வயது முதலே செயல்பட்டு வருகிறேன். ஏதோ ஒரு சீட்டுக்காக எங்காவது ஒரு தொகுதி கிடைத்தால் அங்கு சென்று போட்டியிட விரும்பும் நபர் நான் அல்ல. சொந்தத் தொகுதியில் போட்டியிடுவதையே விரும்புகிறேன் என்று அழுத்தம் திருத்தமாக தனக்கு கரூரை கேட்டுள்ளார்.

ஒருவேளை உங்களால் பெற்றுத் தர முடியவில்லை என்றால் தலைவர் ராகுல் காந்தியிடம் பிரச்சனையை கொண்டு சென்று கரூரை நானே கேட்டு வாங்கி விடுவேன் என்று ஜோதிமணி அதிரடியாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்தே காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கரூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய மூன்று தொகுதிகளையும் கண்டிப்பாக காங்கிரசுக்கு கேட்டு வாங்கவேண்டும் என்ற கோரிக்கையை ராகுல் காந்தியிடம் வைத்துள்ளனர். அவரும் மும்பையில் ஸ்டாலினை நேரடியாக சந்தித்தபோது அதற்கு ஒப்புதல் வாங்கியும் விட்டார்.

இதனால் விரைவில் வெளியாக இருக்கும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் கரூர் தொகுதியில் ஜோதிமணியின் பெயர் நிச்சயம் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

அதேநேரம் கரூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அனைவருமே இன்னும் ஜோதி மணிக்கு எதிர்ப்பான மனநிலையில்தான் இருக்கின்றனர். இதனால் அவர்கள் ஜோதிமணிக்காக களம் இறங்கி தேர்தல் வேலை பார்ப்பார்களா?… என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த சவாலை ஜோதிமணி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை.

  • Vijay Cameo in Kanchana 4 காஞ்சனா 4ல் தளபதி விஜய்? சஸ்பென்ஸ் வைக்கும் லாரன்ஸ்!!
  • Views: - 233

    0

    0