10 பேருனா கிண்டல் பண்றீங்க… நீங்க சொல்லுங்க எத்தனை பேருனு… நாங்க சாப்பாடு போடுறோம் ; செல்வப்பெருந்தகை ரிவேஞ்ச்!!

Author: Babu Lakshmanan
23 May 2024, 8:36 am

முற்றுகை போராட்ட அறிவிப்பை கிண்டல் செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழர்களை இழிவுபடுத்தி பேசிய பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மன்னிப்பு கேட்காவிட்டால், தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிடுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பை கிண்டல் செய்யும் விதமாக, வருபவர்களுக்கு உணவு தயார்படுத்தி வைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிண்டலாக அறிவித்திருந்தார்.

மேலும் படிக்க: பாஜக ஆபிசுக்கு எப்போ வரீங்க..? முன்கூட்டியே சொன்னால் பரிசு கொடுக்க தயாரா இருப்போம் : காங்கிரசுக்கு அண்ணாமலை பதிலடி!!!

அவரது இந்த அறிவிப்பை கண்டித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒடிசா மாநிலம் புரி ஸ்ரீகெஜந்நாதர் ஆலய கருவூலத்தின் சாவி தமிழகத்தில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது, ஒட்டுமொத்த தமிழர்களையும் திருடர்கள் என்று இழிவுபடுத்தும் செயலாகும். பிரதமர் மோடியின் இந்தப் பேச்சால் ஒட்டுமொத்த தமிழர்களும் அவருக்கு எதிராக கடும் கோபத்தில், கொந்தளிப்பில் உள்ளனர்.

மோடியின் தமிழர் விரோதப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தேன்.

ஜனநாயகத்தின் மீது முற்றிலும் நம்பிக்கை இல்லாத கட்சியான பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியின் இந்தப் போராட்ட அறிவிப்பை கிண்டலடித்திருக்கிறார். முற்றுகைப் போராட்டத்திற்கு வரும் 10 பேருக்கு உணவு தயார் செய்து வைப்பதாக கூறியிருக்கிறார்.

வரும் ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கப் போவதில்லை. ஏனெனில், கடந்த 2004ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியை இழந்த பிறகு 2014 வரை கமலாலயத்தில் 10 பேர் கூட இருக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு அந்த அலுவலகத்தில் அப்போது மாநில அமைப்பு பொதுச் செயலாளராக இருந்த மோகன்ராஜுலு மட்டுமே இருந்தார். இந்த வரலாற்றை எல்லாம் அண்ணாமலைக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு கமலாலயத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை முன்கூட்டியே தெரிவித்தால் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உணவு ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறோம். அதுமட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தமிழ்நாடு எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டது என்பது பற்றியும், மோடி ஆட்சியில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் பற்றியும் புத்தகம் வழங்கத் தயாராக இருக்கிறோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 308

    0

    0