கட்சிக்கு தலைவர் ஸ்டாலினா…? தமிழக காங்கிரஸ் எம்எல்ஏவால் வெடித்த சர்ச்சை!

Author: Babu Lakshmanan
10 April 2023, 9:27 pm

திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்றவற்றின் தலைவர்கள் ஆளுங்கட்சியான திமுகவிடம் தனிப்பட்ட முறையில் தங்களுக்கோ அல்லது தொகுதிக்கோ சாதகமாக சில திட்டங்களை பெறுவதற்காக திமுக அரசையும் முதலமைச்சர் ஸ்டாலினையும் வானளாவ புகழ்ந்து பேசுவதை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே காண முடிகிறது.

இதில் தமிழக காங்கிரஸ் தலைவர்களை மிஞ்சுவதற்கு ஆளே கிடையாது என்பது அரசியலில் உள்ளோர் அனைவரும் அறிந்த விஷயம்.

திமுகவுக்கு எதிராக அதிமுகவோ, பாஜகவோ விமர்சனத்தை முன் வைத்தால் உடனடியாக கொந்தளித்து காங்கிரஸ் தலைவர்கள்தான் பதில் சொல்வார்கள். அதன்பிறகு திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் வாய் திறக்கும்.

இதுபோன்ற நேரங்களில், நாம் சொல்ல நினைத்ததை இவர்கள் முந்திக் கொண்டு கூறி விட்டார்களே என்று நினைத்தோ, என்னவோ பெரும்பாலும் திமுக மௌனமாகவே இருந்து விடுவதும் உண்டு.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு துதி பாடும் இந்தப் போட்டியில் பீட்டர் அல்போன்ஸ், கே எஸ் அழகிரி, திருநாவுக்கரசர், கே வி தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், செல்வப் பெருந்தகை மட்டுமே முன்னணியில் உள்ளனர் என்று நினைத்தால் அது தவறு. இவர்களுடன் தற்போது தென்காசி சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ பழனி நாடாரும் இணைந்து கொண்டுள்ளார்.

அதுவும் சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் லெவலுக்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளியும் இருக்கிறார்.

இது காங்கிரஸில் பல்வேறு குழப்பங்களையும், விவாதங்களையும் கிளப்பி விட்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

சரி, பழனி நாடார் எம்எல்ஏ அப்படி என்னதான் பேசினார்?…

தென்காசி தொகுதிக்குட்பட்ட கருவந்தா பகுதியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா மிக அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாபன் முன்னிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவருமான
பழனி நாடார் பேசும்போது “காங்கிரஸ் துண்டுடன் நாங்கள் நிற்பதை பார்த்தால், முதலமைச்சர் ஸ்டாலின் சீக்கிரம் எங்களை அழைத்து பார்ப்பார். நாங்களும் டக்குனு போய் அவரை பார்க்கலாம். முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்கும் தலைவர் தான்.

இதைச் சொல்வதால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஏனென்றால் ராகுல்காந்தி விவகாரத்தில் கூட முதலமைச்சர் ஸ்டாலின்தான் முதல் ஆளாக மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார்.

அதனால் கூட்டணியில் திமுகவை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமோ, பிரித்து பேச வேண்டும் என்ற விருப்பமோ எங்களுக்கு துளியும் இல்லை”
என்று அதிரடி காட்டினார். அவருடைய இந்த பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகியும் வருகிறது.

இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதும் உண்மை. நமது கட்சியின் நிலைமை மதிமுக அளவிற்கு இறங்கிப் போய்விட்டதே என்று அவர்கள் புலம்பவும் தொடங்கி விட்டனர்.

ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவது என்பது வேறு அதற்காக கட்சியின் கொள்கைகளையே அடமானம் வைப்பது வேறு என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கொந்தளிக்கிறார்கள்.

அவர்களின் சிலர் கூறும்போது, “2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக எங்களுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கும் என்று நினைத்தோம். ஆனால் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள்தான் கொடுத்தனர். என்றபோதிலும் அதை நாங்கள் மனதார ஏற்று கொண்டோம். ஏனென்றால் அந்த தேர்தலில் எங்கள் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதன் முதலில் ஸ்டாலின்தான் அறிவித்தார்.

2021சட்டப்பேரவை தேர்தலில் 42 தொகுதிகளை திமுக ஒதுக்கும் என்று நம்பினோம். ஆனால் கிடைத்ததோ 25 தான். இது 2011, 2016 தேர்தல்களில் தமிழக காங்கிரசுக்கு ஒதுக்கியதை விட மிக மிகக் குறைவாகும். அதேநேரம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று இதுவரை திமுக கூறவில்லை. திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் பிரதமர் பதவி மீது ஒரு கண் இருக்கிறது. அதனால்தான் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க திமுக ஆர்வம் காட்டினாலும் கூட காங்கிரசுக்கு ஒதுக்கும் தொகுதிகளைப் பற்றி இதுவரை வெளிப்படையாக திமுக எதுவும் கூறவில்லை.

இதுபோன்ற சூழ்நிலையில் பழனி நாடார் எம்எல்ஏ எங்களுக்கும் தலைவர் ஸ்டாலின்தான் என்று பேசி இருப்பது ஏற்க முடியாத ஒன்று. இது பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டர்களை அவமதிக்கும் செயலாகும்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தமிழக சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இந்தியாவின் அடுத்த விடிவெள்ளி ஸ்டாலின் என எழுதினார்.

அப்போதே காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி இதை கண்டித்து இருக்கவேண்டும். ஆனால் கூட்டணி தர்மம் கருதி அதை பேசாமல் விட்டு விட்டார். பிறகு திருநாவுக்கரசர், கேவி தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், செல்வப் பெருந்தகை என்று அத்தனை பேரும் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் போலவே ஸ்டாலினை புகழ்ந்தும் பாராட்டியும் பேசத் தொடங்கினர். அது மட்டுமல்ல அழகிரியே திமுக அனுதாபியாக மாறிவிட்டார்.

தமிழக காங்கிரசுக்கு நான்கு எம்பி தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கப்படாது என்று இப்போதே திமுக வட்டாரத்தில் பேச்சு உள்ளது. அதுபோன்ற நிலையில் பழனி நாடார் எம்எல்ஏவின் பேச்சு காங்கிரசை மேலும் வலுவிலக்க செய்வது போலத்தான் உள்ளது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதனும், பழனி நாடார் எம்எல்ஏவும் ஆரம்பத்தில் கீறியும் பாம்புமாக சண்டையிட்டு வந்தனர். இப்போதோ இருவரும் மிகவும் நெருக்கமாகி விட்டார்கள். அதன் காரணமாக பழனி நாடார் இப்படி பேசினாரா என்பது சந்தேகமாக உள்ளது. அவர்கள் இருவருக்கும் இடையேயான நட்புறவு எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் அவர் திமுக தொண்டர் போல பேசியிருப்பதைத்தான் எங்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவர் இப்படி பேசியதை சோனியா காந்தி, ராகுல் இருவரிடமும் நிச்சயம் கொண்டு போய் சேர்ப்போம்” என்று கவலையுடன் கூறினர்.

அரசியல் பார்வையாளர்களோ, “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அதுவும் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு மாநில காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே திமுகவின் தீவிர ஆதரவாளர்களாகவே ஆகிவிட்டனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆன பின்பும் கூட மாநிலத்தில் சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து விசிக,மார்க்சிஸ்ட் கட்சிகள் தோழமையின் சுட்டுதல் போல கண்டனம் தெரிவித்த அளவிற்கு கூட காங்கிரஸ் வாய் திறக்கவில்லை. வைகோவின் மதிமுக போல தமிழக காங்கிரஸ் மாறிவிட்டது.

இதே நிலை நீடித்தால் வரும் தேர்தல்களில் தங்களது கட்சியின் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று திமுக தலைமை நெருக்கடி கொடுத்தால், அதையும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொண்டு விடுவார்களோ என்ற அச்சம் காங்கிரஸ் தொண்டர்களிடம் ஏற்படும் என்பது நிச்சயம்” என்கின்றனர்.

நிலைமை போற போக்க பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 411

    0

    0