அடியாட்களுடன் அதிகாரிகளை மிரட்டும் காங்., எம்எல்ஏ.. உடனே ஆக்ஷன் எடுங்க : அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!
Author: Udayachandran RadhaKrishnan31 July 2024, 7:26 pm
சென்னை வியாசர்பாடி அருகே கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு இடத்தை தனது என கூறி பொதுமக்க 3 கிலோமீட்டர் சுற்ற வைத்த காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு எதிராக அப்பகுதி மக்கள் உயர்நீதிமன்றத்தை நாடினர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் கூட தனக்கு சொந்தமான இடம் என கூறி ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளை அடியாட்டுகளுடன் மிரட்டியுள்ளார் காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்,
இது குறித்து அண்ணாமலை, தனது X தளப்பதிவில், சென்னை வியாசர்பாடியில், அரசுக்குச் சொந்தமான பொது வழியை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு, உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல், தமிழக அரசு தலைமைச் செயலாளர் உத்தரவின் பெயரில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளையும், பொதுமக்களையும், அடியாட்களைக் கொண்டு மிரட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் அச்சுறுத்திய காங்கிரஸ் கட்சியின் வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ஹசன் மௌலானாவை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
வியாசர்பாடி பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த பொது வழிப்பாதையை, வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா ஆக்கிரமித்துள்ளதால், பொதுமக்கள் சுமார் மூன்று கிமீ தொலைவுக்குச் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. யார் கொடுத்த தைரியத்தில், திரு ஹசன் மௌலானா பொதுவழியை ஆக்கிரமித்திருக்கிறார்? வியாசர்பாடி பகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. R.D.சேகருக்குத் தெரியாமல், திரு ஹசன் மௌலானா இந்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டிருக்கிறாரா? தனது தொகுதி பொதுமக்கள் நலனை விட, கூட்டணிக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் ஆக்கிரமிப்பு, திரு R.D.சேகருக்கு முக்கியமானதாகி விட்டதா? எப்படி இதனை அனுமதித்தார்?
வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு ஹசன் மௌலானா ஆக்கிரமித்துள்ள பொதுவழியை மீட்க வந்த அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காகவும், அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காகவும், திரு ஹசன் மௌலானா மீதும், உடன் வந்த அடியாட்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.