பொது அறிவு இல்லாதவர் அண்ணாமலை… CM ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராவதில் என்ன தவறு : காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி!!

Author: Babu Lakshmanan
4 March 2023, 5:05 pm

மதுரை : பிரதமர் வேட்பாளராக முதலமைச்சர் ஸ்டாலின் பேசப்படுவதில் என்ன தவறு என்று மதுரையில் சிவகங்கை எம். பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை ரயில் நிலையம் எதிரே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அணிகள் இன்னும் அமையவில்லை. அணிகள் அமைந்த பின்பு தான் தேர்தல் குறித்து கணிக்க முடியும்.

வட கிழக்கு மாநிலங்கள் தேர்தல் முடிவுகள் வைத்து இந்திய பொதுத் தேர்தலை கணிக்க முடியாது. தமிழ்நாட்டில் நடக்கும் இடைத்தேர்தல் என்பதற்கு ஒரு இலக்கணம் உண்டு. அதில் பெரும்பாலும் ஆளுங்கட்சியினருக்கு தான் இடைத்தேர்தல் முடிவுகள் ஆதரவாக இருக்கும். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியினருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் ஒரு பூஸ்ட் தான். எதிர்க்கட்சியினருக்கு இது ஒரு பின்னடைவு.

இந்திய அளவில் பாஜகவிற்கு எதிர்த்து ஒரு கூட்டணி அமைய வேண்டும் என்றால், அந்தக் கூட்டணிக்கு அச்சாரமாக காங்கிரஸ் இருக்க வேண்டும். காங்கிரஸ் தலைமையில் தான் அந்த கூட்டணி அமைய வேண்டும் என்று முதல்வர் கூறிய கருத்து சரியான கருத்து. அரசியல் நிலையை புரிந்து கொண்டு முதல்வர் கூறிய கருத்து அதை நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன்.

முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் ஏன் இருக்கக் கூடாது இன்று காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பருக் அப்துல்லா கூறிய கருத்துக்கு பதில் அளித்த கார்த்திக் சிதம்பரம். பிரதமர் வேட்பாளராக முதலமைச்சர் ஸ்டாலின் பேசப்படுவதில் தவறு கிடையாது. மாநில முதல்வராக இருந்தவர்கள் இந்தியாவிற்கு பிரதமராக ஆக்கி உள்ளார்கள். ஏன் நரேந்திர மோடி கூட பிரதமர் ஆகியுள்ளார். ஒரு மாநில முதலமைச்சர் இந்தியாவிற்கு பிரதமராக வேண்டும் என்று அக்கட்சி எண்ணுவது எந்தவித தவறும் இல்லை.

புல் டவுசரை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் இது போன்ற கொச்சையான கருத்துக்களை தான் பேசுவார்கள். mஒரு மாநிலத்தின் முதல்வர் அதுவும் இந்திய அளவில் ஒரு பெரிய மாநிலத்தின் முதல்வரை மாநில எல்லைக்கு தாண்டி தெரியாது என்றால் பொது அறிவு இல்லாதவர்கள் தான் அப்படி சொல்வார்கள். பாரத் ஜோரா யாத்திரை மூலமாக காங்கிரஸ் கட்சிக்கு பலன் கிடைத்துள்ளது.

ராகுல் காந்தி விடா முயற்சியில் கட்சி பலப்படுத்தப்பட்டுள்ளது. வரும் கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி கட்டாயம் ஆட்சி அமைக்கும். 70 ஆண்டுகளாக இந்தியாவில் எந்த ஒரு சாதனையும் நடக்கவில்லை. நான் பிரதமர் ஆன பின்பு தான் சாதனைகள் நடந்துள்ளது என பிரதமர் மோடி அடிக்கடி பேசுவார். நாங்கள் தொடங்கிய திட்டத்தை அவர்கள் நடத்துகிறார்கள் என்று அவர்கள் சொன்னால், நாங்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்கிறோம்.

அரசாங்கம் என்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். ஒரு அரசாங்கம் செய்வது தான் வரும் அரசாங்கம் செய்யும். மதுரை வரும் முதல்வர் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன். கீழடி மிக முக்கியமான ஒன்று. இன்றைக்கு இருக்கும் இந்தியா சூழ்நிலையில் சரித்திரத்தை மாற்றி எழுத வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மனப்பான்மையில் தான் மத்திய அரசு உள்ளது.

இந்த உண்மைகள் ஹரப்பாவிற்கு முன்பு வளமான சமுதாயம் இருந்தது என்ற உண்மையைக் கொண்டு வருவது மிக முக்கியம். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல கீழடி உலக அளவில் முக்கியம் வாய்ந்தது. கீழடியை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்க கூடாது சரித்திர கண்ணாடி வாயிலாக பார்க்க வேண்டும். அதற்கு எல்லா முயற்சியும் தமிழக முதல்வர் எடுத்துக் கொண்டிருக்கிறார். கீழடியில் அரசு அருங்காட்சியகம் அமைய உள்ளது என்பதை நான் முழுமையாக வரவேற்கிறேன், எனக் கூறினார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 496

    0

    0