பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பது சவாலானது ; சில மாநிலங்களில் பல சிக்கல்கள் ; கார்த்தி சிதம்பரம் ஓபன் டாக்..!!
Author: Babu Lakshmanan28 June 2023, 5:00 pm
மேன் ஹாட்டன் போவதற்கு பிரதமருக்கு விருப்பம் இருப்பதாகவும், மணிபூர் போவதற்கு விருப்பமில்லை என்று மதுரை விமான நிலையத்தில் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது, பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்விக்கு:- இது காலத்தின் கட்டாயம். பாஜகவிற்கு எதிராக மீண்டும் இந்தியா ஜனநாயக பாதையில், அரசியல் சாசனத்தை மதிக்கின்ற பாதையில் மதிக்கும் அரசாங்கம் அமைவதற்காக காங்கிரஸ் கட்சியை மையமாக வைத்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு கூட்டணியை கண்டிப்பாக 2024 இல் அமைப்பார்கள்.
இது முதல்கட்ட பேச்சு வார்த்தை தான், இதில் எல்லா தெளிவும் வந்து விடாது. சில மாநிலங்களில் கூட்டணி எளிதாக அமைந்துவிடும். தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணி அமைந்துவிட்டது, மகாராஷ்டிராவில் கூட்டணி எளிதாக அமைந்துவிட்டது. ஜார்கண்ட், பீகாரில் எளிதாக அமைந்துவிட்டது. சில மாநிலங்களில் எளிதில் அமையாது.
அதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். ஏனென்றால் அங்கிருக்கும் மாநில கட்சிகளுக்கும், காங்கிரஸ் கட்சிகளுக்கும் சில நேரங்களில் போட்டி இருப்பதால் கூட்டணி அமையாது. டெல்லியில் கூட்டணி அமைப்பதில் சில சிக்கல்கள் இருக்கிறது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்க்க முடியுமே தவிர, ஒரே பேச்சுவார்த்தையில் தீர்க்க முடியாது. அடுத்து சிம்லாவில் நடைபெறும் கூட்டத்தில் பெரும்பாலான தெளிவு கிடைத்து விடும், எனக் கூறினார்.
எம்பிபிஎஸ் கலந்தாய்வை மத்திய அரசு ஏற்று நடத்த உள்ளது குறித்த கேள்விக்கு:- அது தவறானது மாநிலத்தில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கு, மாநில அரசால் நடத்தும் மருத்துவ கல்லூரிகளுக்கு மாநில வரிப்பணத்தால் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு கலந்தாய்வு நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏற்கனவே, இந்தியாவுடைய கூட்டாட்சி அமைப்பில் ஒன்றிய அரசியலமைப்பில் பல மாநில உரிமைகளை மத்திய சர்க்கார் பறித்துக் கொண்டிருக்கிறது. மாநிலத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏற்கனவே நுழைவுத் தேர்வு அவர்கள் நடத்தி வருகிறார்கள். அது வேண்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதை ஏன் மத்திய அரசு நடத்துகிறது என்பது ஒரு கேள்விக்குறி, அதன் பிறகு மத்திய கலந்தாய்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது, மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலாக பார்க்கிறேன், என தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலை திட்டத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை என்று அறிவிப்பு குறித்த கேள்விக்கு:-
வேலையில்லாமல் கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் இதில் இட ஒதுக்கீடு போக வேண்டும் என்பது என் விருப்பம் அல்ல. இந்த அறிவிப்பு குறித்து முழுமையாக நான் படிக்கவில்லை ஆனால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் வாடிக்கையாக விவசாய வேலைக்கு செல்ல முடியாமல் வறுமையில் இருப்பவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்டது. இதில் இட ஒதுக்கீடு கொண்டு வருவது என் விருப்பம் அல்ல.
மதுரை எய்ம்ஸ் முதலாம் ஆண்டு மாணவர்கள் ராமநாதபுரத்தில் படித்து வரும் சூழலில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்ற கேள்விக்கு:- பலமுறை இதை பாராளுமன்றத்தில் எடுத்து பேசி இருக்கிறேன். இதற்காக கடிதம் எழுதி இருக்கிறேன். அதை வேகப்படுத்துவதற்கு அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. ஜப்பான் நிதி வரவேண்டும். அதன் பிறகு தான் கட்ட முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். ராமநாதபுரத்தில் எய்ம்சுக்காக படிக்கும் மாணவர்கள் மதுரைக்கு வராமல் மதுரை எய்ம்ஸ் பட்டப்படிப்பை முடிக்க உள்ளார்கள். இந்த அவல நிலை தான் இருக்கப் போகிறது, எனக் கூறினார்.
மணிப்பூர் கலவரத்திற்கு பிரதமர் நேரில் சென்று பார்க்காதது குறித்த கேள்விக்கு:- மேன் ஹாட்டன் போவதற்கு பிரதமருக்கு விருப்பம் இருக்கிறது மணிப்பூர் போவதற்கு விருப்பமில்லை. 50 நாட்கள் ஆகிவிட்டது, இன்னும் ஒரு அறிவிப்பு கூட விடவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் உள்துறை அமைச்சர் நடத்துகிறார். அதில் கூட எங்கள் முன்னால் முதல்வரை பேசவிடவில்லை. நாளை எங்கள் முன்னால் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் சென்று கள நிலவரத்தை அறிந்து விட்டு, காங்கிரஸ் கட்சி இன்னும் விளக்கமாக தங்களுடைய அறிக்கையை வெளியிடும், என்றார்.