இது கூட உங்களுக்கு தெரியாதா? எதிர்ப்பு கூறிய கார்த்தி சிதம்பரத்திற்கு திமுக எம்பி பதிலடி : வார்த்தை மோதலால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2024, 8:03 pm

தி.மு.க.வும் காங்கிரசும் கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் அவ்வப்போது இரு கட்சிகள் இடையேயும் உரசல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி ப.சிதம்பரத்துக்கும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.பி. அருண்நேருவுக்கும் இடையே வார்த்தை போர் முற்றி உள்ளது.

சென்னையை போல் திருச்சியிலும் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு செல்வதற்காக ஆய்வு பணி நடைபெற்றது. இதற்கு ரூ.11 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து கார்த்தி ப.சிதம்பரம் தனது வலைதள பதிவில் விமர்சனம் செய்தார். அதில், “திருச்சிக்கு இப்போது இந்த திட்டம் தேவையா? தேவையில்லாத இதுபோன்ற திட்டங்களை கைவிட்டு நல்ல சாலை வசதிகளை செய்ய அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து அமைச்சர் நேருவின் மகன் அருண்நேரு எம்.பி. வெளியிட்டுள்ள பதிவில், கார்த்தி, நான் பெரம்பலூர் தொகுதி எம்.பி. இதில் அடங்கி உள்ள 4 சட்டமன்ற தொகுதிகள் திருச்சியில் வருகின்றன. இந்த திட்டத்தை மக்கள் வரவேற்கிறார்கள். திருச்சி வளர்ந்து வரும் நகரம் என்பதை நீங்கள் அறியவில்லையா?

வரும் காலத்தில் மக்கள் அரசு அலுவலங்கள் உள்பட பல பகுதிகளுக்கும் செல்வதற்கு மெட்ரோ ரெயில் கை கொடுக்கும். எனவே தேவையற்று பேசுவதை நிறுத்துவது நல்லது” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் அருண்நேருவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த வார்த்தைப் போர் இரு கட்சிகளுக்கு இடையேயும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • five star creations report against dhanush viral on internet தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…