பிரதமருக்கு 74 வயசு ஆயிடுச்சு… மக்கள் முடிவு பண்ணீட்டாங்க ; காங்கிரஸ் எம்பி சொல்லும் காரணம்..!!!

Author: Babu Lakshmanan
13 May 2024, 2:31 pm

பாஜகவை பொருத்தவரை அந்த கட்சியில் உள்ளவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பது அந்த கட்சியின் முடிவாக உள்ளது என்றும், தற்போது மோடிக்கு 74 வயது ஆகிவிட்டதன் காரணமாக மக்கள் அவருக்கு ஓய்வு தர உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு விபத்து தொடர்ந்து நடைபெறுவது வருத்தம் அளிப்பதாகவும், பட்டாசு விபத்து குறித்து எந்த ஒரு கவனமும் செலுத்தாமல் மோடி அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, சிக்கிரியில் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பட்டாசு தொழிலை விபத்து மற்றும் உயிரிழப்பு இல்லாத பட்டாசு தொழிலாக மாற்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த ஆராய்ச்சி தற்போது கைவிடப்பட்டதாகவும், மீண்டும் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் பட்டாசு விபத்தால் உயிரிழப்பு இல்லாமல் இருப்பதற்கான ஆராய்ச்சி மீண்டும் தொடங்கப்படும், பட்டாசு தொழிலை காப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்

தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், மூன்று கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், இதில் இண்டியா கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் எனவும், மக்கள் விலைவாசி மற்றும் வேலை வாய்ப்பின்மையை மையப்படுத்தியே வாக்களித்து வருவதாகவும், இண்டியா கூட்டணியின் ஆட்சி ஜூன் நான்காம் தேதி டெல்லியில் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கூறினார்.

மேலும், பாஜகவை பொருத்தவரை அந்த கட்சியில் உள்ளவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பது அந்த கட்சியின் முடிவாக உள்ளதாகவும், தற்போது மோடிக்கு 74 வயது ஆகிவிட்டதன் காரணமாக மக்கள் அவருக்கு ஓய்வு தர உள்ளனர் எனவும் கூறினார்.

இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் ஒருவராகவே இருப்பார், அந்த வேட்பாளரை தேர்தலுக்குப் பின்னர் இண்டியா கூட்டணியில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்வோம். இண்டியா கூட்டணியை பொறுத்தவரை ஒரே பிரதமர் ஐந்தாண்டுகள் இருப்பார். அவரை வைத்து அடுத்த முறையும் தேர்தலில் வாக்கு கேட்போம், எனவும் பேசினார்.

மேலும் படிக்க: ‘காலை வைத்து ஒரே ஒரு எத்து’… உயர் ரக பைக்குகளை குறிவைத்து கைவரிசை காட்டும் கொள்ளையன்… பகீர் சிசிடிவி

திருநெல்வேலி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயக்குமாரின் உயிரிழப்பு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இழப்பு. உண்மை குற்றவாளிகளை கண்டறிய நேர்மையான அதிகாரிகளை வைத்து விசாரணை நடத்தி தமிழக அரசு சரியான முடிவைக் கொண்டு வரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. திறமையான காவல் அதிகாரிகள் தமிழகத்தில் இருப்பதால் அவர்களின் விசாரணை முடிவை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளும்.

அண்ணாமலை மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருப்பது சரியான முடிவு. இதை தமிழக அரசே காலம் தாழ்த்தி செய்திருக்கிறது. அவர் மீது உள்ள வழக்கை உரிய விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும். அண்ணாமலை அவதூறுகள் பேசி வரும் நிலையில், அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததற்கு காரணம், தேர்தல் ஆணையத்தின் பற்கள் புடுங்கப்பட்டு தேர்தல் ஆணையம் பாஜகவின் துணை அமைப்பு போல் மாறி இருப்பது தான்.

இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. இந்த நிலை மாற வேண்டும். மேலும், தேர்தல் ஆணையம் பலம் வாய்ந்த அமைப்பாக மாற்றப்பட வேண்டும். இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் இந்திய தேர்தல் ஆணையம் பலமான அமைப்பாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, எனவும் தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 271

    0

    1