ஆறுதல் சொன்ன பிறகு சண்டைக்கு நின்ற ராகுல்… உடனே எகிறி பிடித்த பஜ்ரங் புனியா…கட்டிப்புரண்டு உருண்ட சம்பவம்…!!
Author: Babu Lakshmanan27 December 2023, 7:41 pm
மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை நேரில் சந்தித்த ராகுல் காந்தி, அவருடன் மல்யுத்தம் செய்து மகிழ்ந்தார்.
பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பொறுப்பில் இருந்து பிரிஜ் பூஷன் சிங் விலகினார். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய ஆதரவாளர் சஞ்சய் சிங் வெற்றி பெற்று தலைவராக தேர்வானார்.
இதற்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால், பல்வேறு தரப்பினர் பாஜகவை கடுமையாக விமர்சித்தனர்.
இதைத் தொடர்ந்து, மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிக்கப் போவதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அறிவித்தார். அவரைத் தொடர்ந்து வீரேந்தர் சிங் மற்றும் வினோத் போகத் ஆகியோரும் விருதுகளை திருப்பி அளிப்பதாக அறிவித்தனர்.
இதனிடையே, சாக்ஷி மாலிக்கும், பஜ்ரங் பூனியாவும் இணைந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை அண்மையில் சந்தித்து பேசினர். இந்த நிலையில், ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள சாரா கிராமத்தில் பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்களை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, பஜ்ரங் புனியாவுடன் அவர் மல்யுத்தம் செய்ய விருப்பப்பட்டார். இதைத் தொடர்ந்து, அங்கு உள்ள மேடையில் ராகுல் காந்தியும், பஜ்ரங் புனியாவும் கட்டிப்பிடித்தபடி மல்யுத்தம் விளையாடினார். இருவரும் கட்டிப்பிடித்து உருண்டு சண்டையிட்டனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த புகைப்படங்களை பகிர்ந்த ராகுல் காந்தி, இந்த வீரர்கள், வீராங்கனைகள் அரங்கில் போராடுவதை விட்டுவிட்டு தங்களின் உரிமை மற்றும் நீதிக்காக போராடினால், எதிர்காலங்களில் எந்த பெற்றோர் தங்களின் குழந்தைகளை போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிப்பார்கள்..? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.