அப்படி சொன்னால் செருப்பால் அடிப்பேன்… நீ யோக்கியனா…? செய்தியாளர்களிடம் கொந்தளித்த எம்பி திருநாவுக்கரசர்!!!

Author: Babu Lakshmanan
28 February 2024, 2:38 pm

நான் பா.ஜ.க விற்கு செல்வேன் என கூறுபவர்களை செருப்பால் அடிப்பேன் என்று செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கொந்தளித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்க முயலாத பாஜக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி TVS டோல்கேட் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய மோடி அரசை கண்டித்தும், இளைஞர் மீனவர்களை கைது செய்தும் அவர்களது படங்களை பதிவு செய்யும் இளைஞர்கள் கண்டித்தும் கோஷமிட்டனர். இதில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்பி திருநாவுக்கரசர் கூறியதாவது :- பாஜக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக அதிக திட்டங்களை செயல்படுத்தியதாக கூறும் மோடி, அதற்கான ஆதாரங்களை காண்பிப்பதில்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டதுடன் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ 4000 கோடி நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரியது. ஆனால் மத்திய அரசோ ஒரு ரூபாய் கூட தரவில்லை. இதற்கு முதலில் பிரதமர் பதில் சொல்லட்டும், மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். பிரதமரின் சுற்றுப்பயணம் தேர்தல் ஸ்டண்டாக உள்ளது. இதனால் எந்த பயனும் இல்லை.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகிறது. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 150 படகுகள் மண்ணோடு மண்ணாகி உள்ளது. அதற்கான நட்ட ஈட்டு தொகையை இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டும். கையாலாகாத மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கான சூழலை பிரதமர் ஏற்படுத்தித் தர வேண்டும்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்ககளுக்கான தொகுதியை கேட்க தார்மீக உரிமை உள்ளது. ஏற்கனவே நான் எம்பி ஆக உள்ளேன். எனக்கும் அந்த உரிமையுள்ளது.

எம்.பியை கண்டா வர சொல்லுங்க, எம்பியை காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதே? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். நான் இங்கு வந்து கொண்டு தான் இருக்கிறேன். நீங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என பதில் அளித்தார்.

அப்பொழுது அந்த நிருபர் மூன்று வருடமாக பார்க்கவில்லை, இப்பொழுது தான் பார்க்கிறேன் என்று அவரும் பதில் கூறவே பரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, “நீ யாரிடமும் காசு வாங்கிக்கொண்டு இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறாய்?, நீ யாருக்கு அடிமையாக வேலை பார்க்கிறாய்?, என்னை தொகுதி பக்கமே பார்க்கவில்லை என எப்படி கூறுவாய்?, நீ காசுக்காக வேலை செய்கிறாய்?, என ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினார்.

மேலும், இவ்வாறு கேள்வி எழுப்பும் செய்தியாளர்களுக்கு இனி சீமான் பாணியில்தான் பதில் சொல்ல வேண்டும் என்றார். கெட்ட வார்த்தைகள் தான் பேச வேண்டும், அவ்வாறு பேசினால் தான் நீ அடங்குவாய், நீ யோக்கியனா? வேலையை பார் என ஆக்ரோஷத்துடன் பேசினார்.

தமிழ்நாடு முழுவதும் எம்பியின் படம் போடாமல் பிஜேபி, அண்ணாதிமுக காரன் போஸ்டர் ஒட்டி உள்ளான். எல்லா எம்பிகளும் அமெரிக்கா சென்று விட்டார்களா..? எல்லா எம்பி இங்கே தான் இருக்கிறார்கள். பேப்பர் காரன் என்றால் பேப்பர் காரன் போலவும், டிவி காரன் என்றால் டிவிகாரன் போலவும் கேள்வி கேட்க வேண்டும்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து பிரதமர் நரேந்திர மோடி இவ்வளவு நாள் பேசாமல் தேர்தல் நேரத்தில் புகழ்ந்து பேசுவது அ.தி.மு.க வின் வாக்குகளை கவர்வதற்காக இருக்கலாம், வாக்குகளை கவரும் உள்நோக்கத்தோடு கூட அவர் பேசி இருக்கலாம்.

நான் பா.ஜ.க விற்கு செல்வதாக யாரோ எழுதியதை ஊடகங்கள் பெரிதாக்குகின்றன. என்னை நீங்கள் நினைத்தாலும் பா.ஜ.கவிற்கு அனுப்ப முடியாது. நான் பா.ஜ.கவிற்கு செல்வேன் என கூறுபவர்களை செருப்பால் அடிப்பேன். நான் 50 வருடமாக அரசியலில் இருக்கிறேன், யாரிடம் எப்படி கேட்க வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும், இப்படி கேள்வி கேட்பீர்களா என்று கொந்தளித்தார்.

திருநாவுக்கரசரின் ஆவேச பேச்சால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ