திமுகவிற்காக ராகுல் தியாகம் செய்வாரா…? காங்கிரஸ் மூத்த தலைவர் போட்ட குண்டு..! அதிர்ச்சியில் டெல்லி மேலிடம்…!!

Author: Babu Lakshmanan
12 March 2022, 2:47 pm

திசை மாறிய பற்று

தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக பதவி வைக்கும் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் தமிழக சட்டப்பேரவைக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர் சோனியாவின்
அன்புக்கும் பாத்திரமானவர்.

ஆனால் திமுக அரசு வழங்கிய பதவியை கடந்தாண்டு ஜூன் மாதம் ஏற்றுக் கொண்ட பின்பு, காங்கிரஸ் மீது அவர் கொண்டிருந்த பற்று, பாசம் திசை மாறி திமுகவை நோக்கி நகர்த் தொடங்கி இருக்கிறது.

அதிலும் குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் “தமிழர்களாய் ஒன்றிணைவோம், தளபதியின் தலைமையில் இந்தியாவை வென்றெடுப்போம்” என்ற தலைப்பில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் அவர் எழுதிய கட்டுரை காங்கிரசுக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதன்மூலம் 2024 தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட வேண்டும், அப்போதுதான் மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்த முடியும் என்ற வாதத்தை அவர் பகிரங்கமாகவே முன் வைத்தார்.

பதவி காரணமா..?

இது காங்கிரஸ் தலைமைக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. என்றபோதிலும் தமிழக காங்கிரசில் மூத்த தலைவர் என்பதால் அவரை மேலிட தலைவர்கள் யாரும் வெளிப்படையாக கண்டிக்கவில்லை.

அதேநேரம் 2019 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் படுதோல்வி கண்டபோது சொல்லாமல் கம்மென்று இருந்து விட்டு இரண்டு வருடங்கள் கழித்து பீட்டர் அல்போன்ஸ் இப்படி சொல்வதற்கு திமுக அரசு அவருக்கு வழங்கிய தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பதவிதான் காரணம் என்ற விமர்சனங்களை பல்வேறு தரப்பினரும் வைத்தனர்.

ஆனால் பீட்டர் அல்போன்ஸ் அதைப்பற்றி கவலைப்படவில்லை.
அப்போது இது தொடர்பாக ஒரு வார பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், “கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஸ்தாபன கட்டமைப்பு, தத்துவம் போன்றவற்றில் காங்கிரஸ் தற்போது நீர்த்துப் போய்விட்டது. காங்கிரஸ் மீதான அக்கறையினாலும், தமிழகத்தில் அது வீழ்ந்து விடக்கூடாது என்ற பதைபதைப்பினாலும்தான் இதைச் சொல்லியிருக்கிறேன். பாஜகவுக்கு எதிராக இருக்கும் 65 சதவீத வாக்குகளை ஒருங்கிணைக்கும் வேலையை காங்கிரஸ் செய்ய வேண்டும். அதைத்தான் 2019, 2021 தேர்தல்களில் இங்கே ஸ்டாலின் செய்து காட்டி வெற்றி பெற்றிருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

தியாகம் செய்யவேண்டிய நேரமிது

அப்போது காங்கிரஸ் கட்சிக்குள் அவர் ஏற்படுத்திய குழப்பமே இன்னும் ஓயவில்லை. அதற்குள் உத்தரபிரதேசம் பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரசை மறைமுகமாக தாக்கும் விதத்தில் ஒரு ட்விட்டர் பதிவை தற்போது போட்டு இருக்கிறார்.

அதில் அவர், “சரியான மாற்று”(alternative)என்ன என்பதினை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வரை மாற்றம் வராது என்று உணருங்கள்!
நானா?எனது கட்சியா? என்றால் எனது கட்சி! எனது கட்சியா? நாடா? என்றால் எனது நாடு! நாட்டை காப்பாற்ற கட்சி தியாகம் செய்யவேண்டிய நேரமிது! காலம் வழங்கியிருக்கும் கடைசி வாய்ப்பு! 2024! “என்று காங்கிரஸ் மீது ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் தான் சொன்னது சரிதான் என்பதைப்போல “இப்போது இதற்கு மேல் சொல்ல மாட்டேன். தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இன்னும் சில தலைவர்கள் இதே கருத்தை வலியுறுத்தி அடுத்தடுத்து பேசுவார்கள். அதன் பிறகு நான் பேசுகிறேன். தேசிய அளவிலும் காங்கிரஸ் தலைவர்களிடமும் இதுபற்றி பேசி வருகிறேன்”என்றும்
அதிரடி காட்டி இருக்கிறார்.

பீட்டர் அல்போன்சின் இந்த பதிவின் மூலம் வெளிப்படையாக சில விஷயங்கள் பிடிபடுகின்றன.

கட்சியா? நாடா? என்று கேள்வி எழுந்தால் நாடுதான் முக்கியம். அதைவிட வேறு பெரிதாக எதுவும் இருக்க முடியாது என்கிறார். அதற்கடுத்து நாட்டை காப்பாற்ற கட்சி தியாகம் செய்ய வேண்டிய நேரம் இது என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகிறார்.

அவர் போட்ட ட்விட் தமிழகத்தில் மட்டுமின்றி டெல்லியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மம்தா கருத்து

இதுகுறித்து டெல்லியில் பிரபல அரசியல் நோக்கர்கள் சிலர் கூறும்போது,” 2024 தேர்தலில் காங்கிரஸ் தியாகம் செய்ய வேண்டும் என்று பீட்டர் அல்போன்ஸ் பூடகமாக கூறுவதன் மூலம் ராகுல் தலைமையில் எதிர்க் கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிடக்கூடாது. மீறி போட்டியிட்டால் காங்கிரசுக்கு அண்மையில்
5 மாநில தேர்தலில் கிடைத்த படுதோல்விதான் வந்து சேரும் என்பதை மறைமுகமாக கூறி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அதேநேரம் பிரதமர் மோடியை எதிர்த்து போராடும் திராணி ராகுலுக்கு இல்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சொன்னதை உறுதிப்படுத்துவது போலவும் பீட்டர் அல்போன்சின் இந்த கருத்து அமைந்து இருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இதே கருத்தைக் கூறியிருந்தார். 18 எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில், போட்டியிட்டால் மட்டுமே பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்த முடியும். இல்லையென்றால் 35 சதவீத வாக்கு வங்கியை கொண்டுள்ள தேசிய கட்சியான பாஜகவை இன்னும் பல தேர்தல்களில் தோற்கடிக்க முடியாத நிலைதான் ஏற்படும் என்று பிரசாந்த் கிஷோர் சொன்னதைத்தான், திமுக தலைமை மூலம் பீட்டர் அல்போன்ஸ் கூறுகிறாரோ என்றும் கருதத் தோன்றுகிறது.

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி கண்டு இருப்பதால் ஒருவேளை இனி ராகுல் 2024 தேர்தலில் தமிழகத்தில் இருந்து மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலை காணப்படுவதால் அப்படி சொல்லி இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றால் திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, திமுக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய 5 கட்சிகளும் ஆண்டுக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் பிரதமர் பதவியை வகிப்பது என்ற பேச்சுவார்த்தையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆனால் இது எந்த அளவிற்கு பலன் தரும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் பாஜக தரப்பில் மோடி மட்டுமே பிரதமர் வேட்பாளராக இருப்பார். இதனால் ஒருவர் வேண்டுமா? 5 பேர் வேண்டுமா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழும். ஒற்றை தலைமையே சிறந்தது என்று வாக்காளர்கள் கருதலாம். இதனால் அவர்களுடைய முதல் விருப்பம் மோடியாகத்தான் இருக்கும்.

திமுகவிடம் சரண்டர்?

மேலும் காங்கிரஸ் தியாகம் செய்ய முன் வரவேண்டும் என்று மறைமுகமாக பீட்டர் அல்போன்ஸ் கூறுவதன் மூலம் 6 மாதங்களுக்கு முன்பு தளபதியின் தலைமையில் இந்தியாவை வென்றெடுப்போம் என்று சொன்னதையே மீண்டும் அவர் நினைபடுத்தி இருக்கிறார்.

அதாவது திமுக தலைவர் ஸ்டாலினுக்காக பிரதமர் வேட்பாளர் போட்டியில் ராகுல் இறங்கக்கூடாது. அந்த இடத்தை தேசிய தலைவராக வளர்ந்து வரும் ஸ்டாலினுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.

அதற்காக தமிழக காங்கிரசில் இருப்பவர்கள் டெல்லி தலைமைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று பீட்டர் அல்போன்ஸ் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பது சரியான செயல் அல்ல. இது காங்கிரசை மேலும் பலவீனப்படுத்தும் செயலாகவே அமையும்.

தேசிய அளவில் 50 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த கட்சிதான் காங்கிரஸ். அதன் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைந்தால்தான் 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கடும் போட்டியை கொடுக்க முடியும். அதற்காக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தியாகம் செய்யவேண்டும் என்று பீட்டர் அல்போன்ஸ் கூறியிருந்தால் அதை வரவேற்று இருக்கலாம்.

Rahul_Sonia_UpdateNews360

மாறாக, காங்கிரஸ் தலைமை தியாகம் செய்ய வேண்டும் என்று சொல்வதன் மூலம் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரை அவர் கேலி செய்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது” என்று உண்மையை அந்த டெல்லி அரசியல் நோக்கர்கள் போட்டு உடைத்தனர்.

பீட்டர் அல்போன்ஸ் போட்ட ட்விட்டர் பதிவால் தேசிய அரசியலே கலகலத்துப் போய் இருக்கிறது என்பதும் நிஜம்!

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 1403

    0

    0