பாஜகவை எதிர்க்க 3வது அணியா…? திமுகவுக்கு கடிவாளம் போடுகிறதா? காங்கிரஸ்.. அதிர்ச்சியில் அறிவாலயம்…!!

Author: Babu Lakshmanan
27 October 2022, 7:46 pm

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க மம்தா, கெஜ்ரிவால், சந்திரசேகராவ் போன்ற எதிர்கட்சித் தலைவர்கள் மூன்றாவது அணியை அமைக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தமிழகத்தில் ஆளும்கட்சியாக உள்ள திமுகவையும் சேர்த்துக்கொள்ள, சில தலைவர்கள் மறைமுகமாக செயல்படுகிறார்கள் என்பதும் உண்மை.

அதனை ஏற்றுக்கொள்ளும் விதமாகதான் முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சி நாட்டிற்கே சிறந்த வழிகாட்டி என்று அவ்வப்போது உரக்க பேசி வருகிறார் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஆனால் தேசிய அளவில் மோடி தலைமையிலான பாஜக அரசை தங்களால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று காங்கிரஸ் உறுதியாக நம்புகிறது.

இதற்கு முக்கிய காரணம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாரத ராஷ்ட்ர சமிதி, திமுக எல்லாமே மாநிலக் கட்சிகள்தான், ஆனால் காங்கிரசோ தேசிய அளவில் பெரும்பான்மையான மாநிலங்களில் தங்களுக்கு வலுவான அடிப்படை கட்டமைப்பு உள்ளது, பிரதமர் மோடியின் தலைமையில் 10 ஆண்டுகால ஆட்சி என்பது நாட்டு மக்களுக்கு சலிப்பை தந்திருக்கும், அதனால் ஏற்படும் அதிருப்தி தங்களுக்கு சாதகமாக திரும்பும், அதன் மூலம் குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடுவோம். அப்போது, மாநிலக் கட்சிகள் 100 இடங்களில் வெற்றி பெற்றாலும் வேறு வழியின்றி தங்களைத்தான் ஆட்சியமைக்க அழைப்பார்கள் என்று காங்கிரஸ் கணக்கு போடுகிறது.

அதுவும் ராகுல் காந்தியின் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணம், கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு ஆகியவற்றுக்கு பின்பு இந்த நம்பிக்கை காங்கிரஸ் மேலிடத்திடம் வலுத்து இருப்பதும் நன்றாகவே தெரிகிறது.

அதேநேரம் 2004 முதல் 2014 வரையில் தங்கள் கூட்டணியிலும் மத்திய அரசிலும் அங்கம் வகித்த திமுக, தமிழகத்தில் 2006 முதல் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை தங்களின் ஆதரவை பெற்றுள்ள திமுக, இந்த மூன்றாவது அணியில் இணைவது காங்கிரசுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை என்றே தெரிகிறது.

இதை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் திமுகவுக்கு சுட்டிக் காண்பித்தும் இருக்கிறார்.

முன்னணி வார இதழான ஜூனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வாகத்தை அவர் பாராட்டி பேசி இருந்தாலும் கூட மூன்றாவது அணி குறித்து மறைமுக எச்சரிக்கை மணியும் அடித்து இருப்பதையும் பார்க்க முடிகிறது.

கார்த்தி சிதம்பரம் கூறும் போது, மாநிலக் கட்சிகளெல்லாம் கூட்டணி அமைப்பது கூட்டணியே கிடையாது. இதெல்லாம் பேப்பர் கூட்டணி. ஒரு பேச்சுக்கு டி.ஆர்.எஸ்., மம்தாவை எடுத்துக்கொண்டால்கூட என்ன பங்கீடு வைத்துக்கொள்வார்கள்… இது நானும் ஜோ பைடனும் கூட்டணி வைத்துக்கொள்வது மாதிரி. நான் அங்கே சீட் கேட்கப்போவதில்லை. அவர் இங்கே சீட் கேட்கப்போவதில்லை. எனவே, இவர்களெல்லாம் எதற்கு இந்தியாவிலுள்ள கட்சிகளோடு கூட்டணி வைத்துக்கொண்டு, அகில உலக கட்சியோடு கூட்டணி வைத்துக்கொள்ளலாமே. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால்தான் அது கூட்டணி. ஒரு தேசியக் கட்சியோடு கூட்டணி வைக்காமல், இந்த மாநிலக் கட்சிகளெல்லாம் ஒன்று சேர்வது கூட்டணியே கிடையாது.

அவர் மேற்குவங்க முதலமைச்சர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சிகளின் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியை கிண்டலடித்து இருப்பதன் மூலம், இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள தமிழக முதலமைச்சர ஸ்டாலினுக்கும் அறிவுரை கூறி இருப்பதாகவே தோன்றுகிறது.

அதேநேரம், தமிழகத்தில் 2026ல் நடைபெறும் தமிழக சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா? முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், “தனித்துப் போட்டியிடும் தகுதியே இன்னும் காங்கிரஸுக்கு வரவில்லையே… அந்த விஷப் பரீட்சைக்கெல்லாம் போகக் கூடாது.

தமிழகத்தில் காங்கிரசை வளர்க்க நான் சொல்வதை ஆக்கபூர்வமாக ஏற்பார்களா? என்று தெரியவில்லையே… ஓப்பன் மெம்பர்ஷிப்பையே நிறுத்தவேண்டும் என்கிறேன். லட்சோப லட்சம் தொண்டர்கள், மிஸ்டு கால் கொடுத்து தொண்டர்கள் என்று மெம்பர் ஆக்குவதை நான் ஏற்கவில்லை. ஒரு சட்டப் பேரவைத் தொகுதி என்று எடுத்துக்கொண்டால் நூறிலிருந்து இரு நூறு பேருக்குள்தான் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருப்பார்கள். அவர்கள் மூலமாகத்தான் தேர்தல் வைத்து நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து மக்களை நாடிச் செல்ல வேண்டும். அப்படிச் செய்தால் கட்சியின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பது தெரிந்து சில திட்டமிடல்களை முன்னெடுக்கலாம்” என்றும் அவர் ஆலோசனை கூறுகிறார்.

“கார்த்தி சிதம்பரம் சொல்வதை பார்த்தால் தமிழகத்தில் காங்கிரசுக்கு தொண்டர்களே இல்லை என்பதை ஒப்புக் கொள்வது போல இருக்கிறது. 1952 முதல் 1967 வரை தமிழகத்தை ஆட்சி செய்த ஒரு தேசியக் கட்சியை காங்கிரசின் மூத்த தலைவராகவும் அனுபவம் வாய்ந்தவராகவும் கருதப்படும் ஒரு தலைவரின் மகனும் தமிழக காங்கிரஸ் எம்பியாகவும் உள்ள ஒருவரே மிகவும் குறைத்து மதிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“தமிழக காங்கிரஸ், 1967க்கு பின்பு 1989 சட்டப்பேரவை தேர்தல் தவிர மற்ற எல்லாவற்றிலுமே, கூட்டணி அமைத்தே தனது செல்வாக்கை படிப்படியாக இழந்து விட்டது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்ததால் மூத்த தலைவர்கள், தமிழக காங்கிரசை வளர்ப்பதில் அக்கறை காட்டவும் இல்லை. தங்களுடைய தயவு இன்றி யாரும் தமிழகத்தில் வெற்றி பெறுவதும் ஆட்சி அமைப்பதும் இயலாத காரியம் என்பதை உணர்ந்து இருந்தும்கூட தங்களது தகுதி நிலைக்கேற்ப தொகுதிகளை பேரம்பேசி வாங்க முடியாத நிலையும் ஏற்பட்டது. அதேநேரம் தங்களது வாரிசுகளை கட்சியில் தீவிரமாக இறக்கியும் விட்டனர். தற்போது தேசிய அளவில் மட்டுமின்றி தமிழகத்திலும் பாஜக வலுவாக கால் பதித்து விட்டது.

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை 2014ல் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு கையை சுட்டுக் கொண்டதுதான் மிச்சம். அப்போது தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37ஐ ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கைப்பற்றி விட்டது. அதன் பிறகு தனித்து தேர்தலை சந்திப்பது என்றாலே காங்கிரசுக்கு அலர்ஜியாகி விட்டது.

ஒருபோதும் தனித்துப் போட்டியிடும் விஷப் பரீட்சையில், தமிழக காங்கிரஸ் இறங்கி விடக்கூடாது என்று கார்த்தி சிதம்பரம் கூறுகிறார். அதேநேரம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் திமுக இருக்கவேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். அப்படி திமுக அணியில், காங்கிரஸ் நீடிக்கும் பட்சத்தில் அக்கட்சிக்கு மூன்று அல்லது நான்கு இடங்கள்தான் ஒதுக்கப்படும் நிலை ஏற்படலாம். அதிக தொகுதிகளை ஒதுக்கினால், காங்கிரசை வீழ்த்த பாஜகவும் அத்தனை தொகுதிகளிலும், தனது வேட்பாளர்களை களம் இறக்கும் சூழல் உருவாகும். இதை திமுக விரும்பாது.

தனித்துப் போட்டியிட்டு தோல்வி கண்டாலும், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இளைய தலைமுறையினரை அனுசரித்து சென்றால் அடுத்த 10 ஆண்டுகளில் இழந்த செல்வாக்கை மாநிலத்தில் மீட்டெடுக்க முடியும். மாறாக பிற கட்சிகள் ஒதுக்கும் தொகுதிகளை மட்டுமே வாங்கிக் கொண்டு போட்டியிட்டால் அது கட்சியை இன்னும் படுமோசமான நிலைக்குத்தான் கொண்டு செல்லும். மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஏற்பட்ட தேய்மானம் காங்கிரசுக்கும் நிச்சயம் ஏற்படும்” என்று அந்த அரசியல்வாதிகள் ஆருடம் கூறுகின்றனர்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 472

    1

    0