டாஸ்மாக்கில் மூக்கை நுழைக்கும் காங்கிரஸ்! அதிர்ச்சியில் CM ஸ்டாலின்!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2023, 9:41 pm

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட பின்பு அதன் மூலம் தினசரி ஏற்படும் 35 கோடி ரூபாய் வருவாய் இழப்பை சரிக்கட்டவும்
மது விற்பனையை பெருக்குவதற்கும் பல்வேறு புதுப் புது திட்டங்களை தீட்டும் நடவடிக்கைகளில் திமுக அரசு இறங்கிவிட்டது.

டாஸ்மாக் நேரம் மாற்றம்?

இதற்காக காலை 7 மணி முதல் 9 மணி வரை இரண்டு மணி நேரம் கூடுதலாக டாஸ்மாக் கடைகளை திறந்து மது விற்பனை செய்யலாமா? என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி அண்மையில் தெரிவித்து இருந்தார்.

அதேபோல பிளாஸ்டிக் மது பாட்டில்கள் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக 90 மில்லி அளவுக்கு நவீன டெட்ரா பேக்குகளில் மதுவை அடைத்து விற்பனை செய்வது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஆனால் இந்த இரண்டிற்குமே அரசியல் கட்சிகளிடம் இருந்தும், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வேலைக்குப்போகும் நேரத்தில் டாஸ்மாக்கை திறந்து ‘குடித்துவிட்டு வேலைக்கு போ’ என்று திமுக அரசு சொல்வது போல உள்ளது.

அந்தர் பல்டி அடித்த அமைச்சர்

டெட்ரா பேக்குகளில் மது விற்பனை செய்யப்பட்டால் அதை வீடுகளில் வைத்து பயன்படுத்தும்போது குளிர்பானம் என்று நினைத்து குழந்தைகள் குடிக்கும் வாய்ப்பும் ஏற்படும். ஏனென்றால் பல்வேறு ரக பழச்சாறுகளும், மில்க் ஷேக் உள்ளிட்ட பால் பொருட்களும் இன்று டெட்ரா பேக்குகளில்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதே வடிவில் வரும் மதுபானங்களும் வீட்டில் வைக்கப்பட்டால் அடுத்த தலைமுறை விரைவிலேயே குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி விடும். வெளியிடங்களில் சிறுவர்களும், பள்ளி மாணவர்களும் அதை பயன்படுத்தினாலும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதனால் இது வேண்டாத வேலை” என்று கண்டன விமர்சனங்களும் எழுந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் முத்துசாமி காலை 7 மணி முதல் 9 மணி வரை மதுக்கடைகளை திறக்கும் யோசனையிலிருந்து அப்படியே அந்தர் பல்டி அடித்து அந்த எண்ணத்தை அடியோடு கைவிட்டார். என்றபோதிலும் டெட்ரா பேக் மது விற்பனை தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.

ஏனென்றால் குவார்ட்டர் பாட்டிலில் 180 மில்லி அளவுக்கு மது இருக்கும். டெட்ரா பேக்குகளில் இதே அளவை இரண்டாக பிரித்து விற்றால் குறைந்த விலையில் விற்பனையை பல மடங்கு அதிகரிக்க முடியும் என்ற எண்ணம் முக்கிய காரணமாக இருக்கலாம்.

அதேநேரம் உண்மையிலேயே 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டனவா? என்ற சந்தேகத்தை அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன.

திமுகவுக்கு திண்டாட்டம்

இந்த நிலையில்தான் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றி அவர்கள் திமுக அரசை மேலும் திண்டாட்டத்திற்கு உள்ளாக்கி விட்டிருக்கின்றனர்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களிடம் பேசும்போது, “பெருந்தலைவர் காமராஜர் தன் வாழ்நாள் முழுவதும் மதுவுக்கு எதிரியாக திகழ்ந்தார். எனவே அவருடைய பிறந்தநாளான ஜூலை 15ம் தேதியன்று ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. அதை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைப்போம். எங்களுடைய கோரிக்கையை திமுக அரசு ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தீர்மானம்

காங்கிரசின் இந்த தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகம்தான். ஏனென்றால், ஏற்கனவே மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் பிறந்த நாட்களில் மட்டும் தமிழகத்தில் டாஸ்மாக்கிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்படுகின்றன. இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் அனைத்து மத பண்டிகைகளின்போதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. இதுபோல ஆண்டுக்கு 25 நாட்கள் வரை விடுமுறையால் மதுபான விற்பனை அடியோடு முடங்கி போய்விடுகிறது.

மேலும் கடந்த ஆண்டு மது விற்பனையின் மூலம் தமிழக அரசுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இது 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கின்படி பார்த்தால் ஒரு நாளைக்கு டாஸ்மாக் கடைகளில் குறைந்த பட்சம் 120 கோடி முதல் 135 கோடி ரூபாய் வரை மாநிலம் முழுவதும் மது விற்பனை நடக்கிறது.

ஏற்றுக்கொள்ளுமா திமுக அரசு?

தவிர அரசுக்கு அதிக முதலீடு இல்லாமல் வருவாயை ஈட்டித் தரும் ஒரே துறையாக டாஸ்மாக் திகழ்வதால் அதில் ஏற்படும் ஒரு நாள் இழப்பை திமுக அரசு விரும்பாது என்றே சொல்லவேண்டும்.

“காமராஜர் பிறந்த நாளில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் திடீர் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரிய விஷயம்தான்.
அதேநேரம் அவருடைய பிறந்த நாளையொட்டி இந்த தீர்மானத்தை கே எஸ் அழகிரியின் ஆதரவு நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே நிறைவேற்றி இருப்பதுதான் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

“தமிழக காங்கிரஸ் தலைவராக அழகிரி நியமிக்கப்பட்ட பின்பு காமராஜரின் பிறந்தநாள் நான்கு முறை வந்து சென்று விட்டது. ஆனால் முந்தைய அதிமுக ஆட்சி காலத்திலும் சரி அல்லது திமுக ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகளிலும் சரி அழகிரிக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் ,இப்படி ஒரு யோசனை தோன்றவே இல்லை. ஆனால் இப்போது திடீரென ஞானோதயம் வந்துவிட்டது போல தீர்மானம் போட்டுள்ளனர்.

இதற்கு காரணம் தமிழக காங்கிரஸ் தலைவராக மூன்றாண்டு மட்டுமே பதவி காலம் கொண்ட கே எஸ் அழகிரி தற்போது நான்கரை ஆண்டு காலத்தையும் கடந்து விட்டார். அதனால் அவருடைய பதவிக்கு எந்த நேரத்திலும் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்ற கத்தி தலைக்கு மேலே தொங்கிக் கொண்டு இருக்கிறது.

கேஎஸ் அழகிரியின் திட்டம்

அதனால்தான், நான் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில் எந்தவொரு தலைவரும் நினைத்துப் பார்க்காத தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம் என்று ஒரு காரணத்தை கூறி 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை தனது பதவியை நீட்டித்துக் கொள்வதற்கு அச்சாரமாக சுய நலத்துடன் இதை அவர் நிறைவேற்றி இருக்கலாம் என்றே கருதத்தோன்றுகிறது.

ஏனென்றால் சத்தியமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கே எஸ் அழகிரியின் ஆதரவாளர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். முன்னாள் தலைவர்கள் கே வி தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் போன்றவர்களும் தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும் இந்தக் கூட்டத்தை எட்டிக்கூட பார்க்கவில்லை.

அதேநேரம் தமிழக காங்கிரஸ் நிறைவேற்றியுள்ள இந்த தீர்மானம் ஒரு விதத்தில் திமுக அரசுக்கு செக் வைப்பது போலவும் உள்ளது.

திமுகவுக்கு செக்

காமராஜர் உயிருடன் இருந்த காலம் வரை கருணாநிதியும், திமுகவினரும் அவரை கடுமையாக தாக்கி பேசாத நாளே கிடையாது. தமிழக மக்களின் பணத்தை கொள்ளையடித்து சுவிஸ் வங்கியில் போட்டு வைத்துள்ளார் என்று
குற்றம்சாட்டி பேசியவர்களும் உண்டு. ஆனால் காமராஜரின் மறைவுக்கு பின்பு, திமுகவினர் அவரை வானளாவ புகழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக 2017-ல் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் காமராஜர் பிறந்த நாளையொட்டி வெளியிட்ட அறிக்கையில் “கர்ம வீரர் காமராஜரும்,கல்வி வளர்ச்சியும் இணைபிரியாதவை. தன்னிகரில்லாத அந்தத்தலைவரின் பெருமைகளை நிலைநாட்டும் வண்ணமாக 2006 சட்டப் பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில், காமராஜர் பிறந்த ஜூலை 15-ந் தேதியைக் கல்விக் கண் திறந்த நாளாக அறிவித்துப் பள்ளிகளில் விழா எடுப்போம் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி ஜூலை 15-ந் தேதி, கல்வி வளர்ச்சி நாள் என அறிவித்து, திமுக ஆட்சியில் 24.5.2006 அன்று அரசு ஆணையும் வெளியிடப்பட்டது” என்று புகழாரம் சூட்டினார்.

மறு ஆண்டு ,”அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்பதற்கு அடையாளமாக காமராஜர் திகழ்ந்தார்”என்றும் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் அறிவிப்பாரா?

அதனால் காமராஜர் மீது உண்மையிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் நன் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தால் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நிறைவேற்றிய தீர்மானத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு காமராஜர் பிறந்த நாளன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் அறிவிப்பை உடனடியாக வெளியிடும் வாய்ப்பு உள்ளது. இது காலதாமதம் என்று கருதினால் அடுத்த ஆண்டு வெளியிடலாம்.

அதேநேரம் ஏற்கனவே ஆண்டுக்கு 25 நாட்கள் மதுக் கடைகள் மூடப்படுவதால் 3000 கோடி ரூபாயிலிருந்து 3400 கோடி வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதனால் ஒரு நாளைக்கு 135 கோடி ரூபாயை இழக்க வேண்டுமா? என்று கணக்கு போட்டால் காங்கிரசின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் திமுக அரசு சைலன்ட் ஆக நழுவிக் கொள்ளவும் செய்யலாம். எப்படிப் பார்த்தாலும் தமிழக காங்கிரஸ் போட்ட தீர்மானம் திமுக அரசுக்கு குடைச்சலை கொடுத்திருக்கிறது என்பதே உண்மை” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 292

    0

    0